Wednesday, October 3, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 113 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 57

தந்தையைக் காணும் ஆவலில் அரண்மனைக்கு ஓடினான் துருவன். சபா மண்டபம் வரை வந்துவிட்டான். அவனைத் தடுப்பார் எவருமிலர்.

அங்கே அரியாசனத்தில் உத்தானபாத மஹாராஜா அமர்ந்திருந்தான். அவனது ஒரு தொடையில் 4 வயதுடைய சிறுவன். பக்கத்தில் அரசனின் இளையமனைவி ஸுருசி நின்றுகொண்டிருந்தாள்.

ஓடிவந்த குழந்தையைப் பார்த்ததுமே அது தன் மகன் துருவன் என்று புரிந்து கொண்டான் உத்தானபாதன்.

துருவனின் அழகும், தேஜஸும், கண்டதுமே வாரியணைத்துக் கொஞ்ச வேண்டும் போல் முகத்தில் மிளிரும் குறுகுறுப்பும் மிகவும் மகிழ்ந்துபோனான் அரசன்.

அடுத்த கணமே ஸுருசியை நினைத்து பயந்து, தன் மகிழ்ச்சியைக் காட்டாமல் பேசாமல் அமர்ந்திருந்தான்.
துருவனைக் கண்டதும் உடனே திரும்பி கணவன் முகத்தைத்தான் பார்த்தாள் ஸுருசி.

என்ன செய்கிறான்? குழந்தை மேல் பாசம் இருக்கிறதா, வரவேற்கிறானா, என்று பார்த்தவள் ஒரு கணம் அரசன் முகம் மலர்ந்ததையும், பின்னர் அவன் தன்னை அடக்கிக் கொண்டதையும் கவனித்தாள்.

துருவனோ,
என் அப்பாதானே..

அந்த மடியில் இருப்பவன் என் தம்பியோ.. அவன் அப்பா மடியில் உட்கார்ந்திருக்கிறானே.. இந்த மடி காலியாகத்தானே இருக்கு. நாம் உட்காரலாமே..

என்றெண்ணி கிடுகிடுவென்று உயர்ந்த அந்த சிம்மாசனத்தின் படிகளில் ஏறி, ஒரே தாவாகத் தாவி தந்தை மடியில் அமர்ந்தான்.

மகிழ்ந்துபோன உத்தானபாதன் ஏதும் சொல்லாமல் இருந்தான்.

மடியில் அமர்ந்த குழந்தையை வராதே என்று சொல்லாமல் பேசாமல் இருக்கிறார் என்றால் அதில் அவருக்கு உடன்பாடு.

தீப்பட்டாற்போல் துடித்தாள் ஸுருசி.
இன்றைக்கு தந்தை மடி. பிறகு மெதுவாக தினம் வர ஆரம்பிப்பான். இவனைத் தொடர்ந்து இவன் தாயும் வருவாள். பிறகொருநாள் மூத்தமகன் என்று சிம்மாசனத்திற்கும் உரிமை கேட்பான். முளையிலேயே கிள்ளவேண்டும்.

ஆங்காரத்துடன் பாய்ந்துவந்து, துருவனின் பட்டுப்போன்ற கன்னத்தைப் பிடித்து நறுக்கென்று கிள்ளினாள். செக்கச்சேவேலென்று சிவந்தது குழந்தையின் கன்னம்.
கையைப் பிடித்திழுத்து கீழே தள்ளினாள்.

உயரமான சிம்மாசனத்தின் படிகளில் உருண்டு கீழே விழுந்தான் ஐந்தே வயதான துருவன்.

கரகரத்த குரலில் கத்தினாள்
ஹே! சிறுவனே! நீ அரசரின் மகனாக இருக்கலாம். ஆனால் அரசர் மடியில் அமரவேண்டுமானால், என் வயிற்றில்‌ பிறக்கவேண்டும்.

சிறு குழந்தையான நீ எட்டாத பொருளுக்கு ஆசைப்படுகிறாய்.
நீ வனம் சென்று ஸ்ரீமன்நாராயணனைக் குறித்துத் தவம் செய். அவரைக் கண்டு என் வயிற்றில் பிறப்பதற்கு வரம் வாங்கிக்கொண்டு வந்து என் மகனாகப் பிற.

அப்போது உன் தந்தை மடியில் மட்டுமல்ல, சிங்காசனத்திலும்‌ அமரலாம்.

அவள்‌ ஏன் அவ்வாறு கூறவேண்டும்? அதுவும் ஸுருசி போன்ற துர்நடத்தை உள்ள பெண்ணின் வாயில் தவம் செய்து பகவானைப் பார் என்ற வார்த்தை வந்துவிடுமா என்ன?
ஒவ்வொருவருக்கும் பகவான் ஒவ்வொரு விதமாய் அழைப்பு விடுக்கிறான்.

மேலும், துருவனின் அழகும், தேஜசும் கண்டு அவ்ளும்‌ உள்ளூர, இப்பேர்ப்பட்ட அழகான குழந்தை என் மகனாய் இருக்கலாகாதா? என்று ஏங்கினாள். அதனாலும் துருவனைக் கண்டு என் வயிற்றில் பிறக்க வரம்‌ வாங்கி வா என்கிறாள். இல்லையென்றால் கொடுஞ்சொல்லாய்ச் சொல்லும்போது இத்தகைய வார்த்தைகள்‌ ஒருவர் நாவில் வந்துவிடுமா?

க்ஷத்ரியக்‌குழந்தை துருவன், அடிபட்ட நாகம்போல், மிகுந்த கோபத்துடன் வந்த அழுகையைப் உதட்டைக் கடித்துக் கட்டுப்படுத்திக் கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினான்.
பெருமூச்செறிந்துகொண்டு ஓட்டமும் நடையுமாக அவன் வீட்டை அடைந்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment