அரசாட்சியைத்
துறந்து வனம் சென்று தவம் மேற்கொண்ட துருவனுக்கு நிர்விகல்ப ஸமாதி சித்தித்தது. அப்போது வானிலிருந்து திவ்ய விமானம் வந்தது.
அவ்விமானத்தில்
நீலமேக ஷ்யாமள ரூபத்துடன், கிரீட குண்டலங்கள் அணிந்து, கையில் கதையேந்தி,
பொன்னாடைகளும் முத்து மாலைகளும் எல்லா ஆபரணங்களும் தரித்து இளம் வயதினராக இரண்டு
தேவ ஸ்ரேஷ்டர்கள் வந்தனர்.
அவர்கள்
இருவரையும் தன் தலைவனான விஷ்ணுவின் பாரஷதர்கள் என்றறிந்தான். பரபரப்புடன் எழுந்து
அவர்களை மரியாதையுடன் பகவன் நாமங்களைக் கூறிக்கொண்டே விழுந்து வணங்கினான் த்ருவன்.
பகவானின்
தொண்டர்களான நந்தன், ஸுநந்தன் என்ற அவ்விருவரும் விநயத்துடன் வணங்கி நிற்கும்
துருவனிடம் சிரித்தபடியே வந்தனர்.
துருவராஜனே,
நாங்கள் இருவரும் பகவானின் அணுக்கத் தொண்டர்கள். தம்மை அழைத்துப்போகவே வந்தோம்.
பகவானது
அந்த ஸ்தானத்தை ஸப்த ரிஷிகளும்கூட மேல்நோக்கிப் பார்த்துக் கொண்டுதான்
இருக்கிறார்களே தவிர, அடைய முடியவில்லை.
சூரியன்,
சந்திரன், கோள்கள் எல்லாருமே ப்ரதக்ஷிணம் செய்து கொண்டு போகும் அந்த வைகுண்டம்
தங்களால் சுலபமாக அடையப்பட்டது.
தங்கள்
முன்னோர்கள் எவரும் அடைந்திராத வைகுண்டத்தை தாங்கள் பெற்றீர்கள். புண்யசிகாமணியான
தங்களுக்காக இச்சிறந்த விமானத்தை பகவான் அனுப்பியுள்ளார்.
பார்ஷதர்களின்
தேனொழுகும் சொற்களைக்கேட்ட த்ருவன் மகிழ்ந்து, நீராடி, அன்றைய நாளின் கடைமைகளை
முடித்து, அங்குள்ள முனிவர்களை வணங்கி ஆசி பெற்றான்.
பின்னர்
விமானத்தை வலம் வந்து வணங்கிய த்ருவனுக்கு பொன்னைப் போன்ற மேனி கிடைத்தது.
விமானத்தில்
ஏறி அமர யத்தனித்த த்ருவன், அங்கு மரணதேவதையான யமதர்மராஜன் வந்திருப்பதைக்
கண்டான்.
அவர்
வந்து குனிந்து விமானத்தின் அருகில் நிற்க அவரது தலைமேல் கால் வைத்து விமானத்தில்
ஏறி அமர்ந்தான்.
அப்போது
துந்துபிகள் முழங்கின. கந்தர்வர்கள் பாடினர். பூமாரி பொழிந்தது.
விமானம்புறப்படும்
சமயத்தில் தன் தாயார் ஸுநீதியை நினைத்தான் த்ருவன். தன் முன்னேற்றங்கள்
அனைத்திற்கும் மூல காரணமான தாயை விட்டுத் தான் மட்டும் வைகுண்டம் செல்வதா
என்றெண்ணினான்.
அவனது
எண்ணத்தை உணர்ந்த விஷ்ணு பார்ஷதர்கள்
வேறொரு
விமானத்தில் சென்றுகொண்டிருந்த ஸுநீதியைக் காண்பித்தனர்.
தாய்க்கும்
வைகுண்டம் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி கொண்டான் த்ருவன்.
பகவத்
பக்தனான த்ருவனது இந்த தூய்மையான சரித்ரத்தை ஈடுபாட்டுடன் அடிக்கடி கேட்பவர்க்கு
பகவானிடம் இடையறாத பக்தி ஏற்படும். அதனால் அவரது துக்கங்கள் அனைத்தும் தீயினிற்
தூசாகும்.
நல்லொழுக்கம்
உண்டாகும். மேன்மை, தேஜஸ், வலிமை ஆகியவற்றைப் பெறுவர்.
இச்சரிதத்தை
காலையிலும் மாலையிலும் கேட்கவேண்டும்.
பலனில்
பற்று கொள்ளாமல் பௌர்ணமி, அமாவசை, துவாதசி, திருவோணம், சங்கராந்தி,
ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் பகவானை உள்ளத்திலிருத்திக் கூறுபவனுக்கு
மகிழ்ச்சி ஏற்படும். அவன் சித்தபுருஷனாகி, பூரணனாவான்.
விதுரா,
த்ருவன் சின்னஞ்சிறு வயதிலேயே வீடு வாசல், தாயார் எல்லவற்றையும் விட்டு பகவானைச்
சரணடைந்தவன். அவனது சரித்ரத்தை உனக்கு விரிவாகக்கூறினேன்.
#மஹாரண்யம் ஸ்ரீ
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
No comments:
Post a Comment