ஸ்வாயம்புவ மனு தன் பேரனான துருவனுக்கு ஹிதோபதேசம் செய்தார்.
பகவான் கர்ம பந்தத்திற்காட்பட்ட ஜீவனின் ஆயுளை அவன் வினைக்கேற்ப நிர்ணயிக்கிறார். கால ம்ருத்யு, அகால ம்ருத்யு இரண்டுமே ஜீவனின் கர்மத்தைச் சார்ந்தே விதிக்கப்படுகிறது.
இந்த பரமாத்மாவின் செயல்களைத்தான் மீமாமசகர்கள் கர்மா என்றும், சார்வாகர்கள் இயற்கை என்றும், வைசேஷிகர்கள் காலம் என்றும், சோதிடர்கள் தெய்வம் என்றும் விஷயங்களால் பீடிக்கப்பட்டவர்கள் ஆசை என்றும் கூறுகிறார்கள்.
குழந்தாய்! பகவான் புலன்களைக் கொண்டு அறியமுடியாதவர். எந்த ப்ரமாணங்களையோ உதாரணங்களையோ கொண்டு அவரை அறிய இயலாது. இவ்வளவுதான் என்று நிர்ணயிக்க இயலாதவர். அவரது நோக்கம் என்ன? எதைச் செய்ய விரும்புகிறார் என்று எவராலும் கணிக்க இயலாது.
குபேரனது இப்பணியாளர்கள் உன் தம்பியைக் கொல்லவில்லை. மனிதனின் பிறப்பிற்கும் இறப்பிற்கும் விதி அல்லது தெய்வமே காரணம்.
பக்தியற்றவர்களுக்கு அவர் மரணதேவதை. பக்தர்களுக்கோ அமுதம் போன்றவர். அகில உலகங்களுக்கும் புகலிடம். அவரையே நீ தஞ்சமாகப் பற்று.
மூக்கணாங்கயிற்றால் பிணைக்கப்பட்ட மாடுகள் எஜமானனின் பாரங்களைச் சுமந்து அவன்விருப்பப்படி செல்வதுபோல் ப்ரும்மா முதலிய தேவர்கள் பெயர்களால் கட்டுண்டு அவரவர் வேலையை பகவானின் கட்டளைப்படி செய்கிறார்கள்.
பகைமையற்ற தூய இதயத்தில் கருணையோடு குடியிருக்கும் பகவான் ஒத்தார் மிக்கார் இல்லாதவர். தோற்றமற்றவர். ஆகவே அழிவுமற்றவர். வேண்டுதல் வேண்டாமை இலாதவர். எதிலும் ஒட்டாதவர்.
வெளிப்பார்வையை உட்புறம் செலுத்தி உள்ளத்தால் பகவானைத் தேடித் தொடு.
அவ்வாறு நீ தேடும்போது அனைத்து சக்திகளும் நிறைந்த பகவானிடத்தில் ஆழ்ந்த பக்தி தோன்றும். யான் எனது என்ற சிக்கலின் முடிச்சை மெல்ல அறுத்துவிடு.
மருந்து கொண்டு நோயைப் போக்கிக் கொள்வதைப்போல் எனது இந்தச் சொற்களால் உன் கோபத்தைப்ப் போக்கிக்கொள்.
குற்றமற்ற யக்ஷர்களைக் கொன்றதனால் நீ குபேரனுக்கு அபராதம் செய்துவிட்டாய். எனவே அவரை வணங்கி விநயமாக வேண்டி அவரை மகிழ்ச்சி கொள்ளச் செய்.
குபேரன் பகவானின் பக்தர். அவர் மனம் புண்படும்படி நடக்கலாகாது.
தாத்தாவின் உபதேசங்களைக்கேட்டு துருவன் போரைக் கைவிட்டான்.
துருவன் போரை நிறுத்திவிட்டான் என்று கேள்வியுற்றதும் குபேரன் யக்ஷ கின்னரர்கள் புடைசூழ துருவனிடம் வந்தார்.
குபேரன் கூறினார்.
குற்றமறியாத க்ஷத்ரிய வீரனே! நீ உன் பாட்டனாரின் சொல்லுக்கிணங்கி பகைமையை விட்டாய். மிக்க மகிழ்ச்சி.
உண்மையில் நீயும் யக்ஷர்களைக்கொல்லவில்லை. யக்ஷனும் உன் தம்பியைக் கொல்லவில்லை. அனைத்தும் காலவடிவான பகவானால் நிகழ்த்தப்பட்டது.
நான் நீ என்ற வேறுபாடு அஞ்ஞானத்தால் தோன்றுவது. இக்காட்சிகள் அனைத்தும் கனவில் காண்பது போன்றது. துக்கமும் அதனாலேயே வருகிறது.
துருவனே! பகவான் உனக்கு ஸர்வ மங்களங்களையயும் அருளட்டும். நீ அனைத்து ஜீவராசிகளிலும் அவரையே கண்டு வழிபடு.
நீ பத்மநாபனின் திருவடிக்கருகிலேயே இருப்பவன். நீ விரும்பும் வரத்தைக் கேள்.
என்றார்.
என்றார்.
பரமபக்தனும் அறிஞனுமான துருவன், விஷ்ணு பக்தியையே வரமாக வேண்டினான்.
நிலையான பகவத் பக்தி உண்டாகும்படி துருவனுக்கு வரமளித்த குபேரன் அவன் கண்ணெதிரிலேயே மறைந்தார்.
துருவன் தன் நகரம் சென்றான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment