நாரதர் மேலும் கூறினார்.
அரசே! உனக்கு அனைத்து நலன்களும் கிட்டட்டும். மனம்தான் ஒருவனது முற்பிறவி பற்றியும், விதேக முக்தி பற்றியும் அறிவிக்கிறது. நீசப்பிறவி என்று தெரியப்படுத்துவதும் மனமே.
சில சமயம் இடம், காலம், செயல் ஆகியவை பற்றி அல்லது தொடர்புள்ள விஷயங்கள் கனவில் தோன்றும். அவை இதுவரை பார்க்கப்படாமலும் கேள்விப்படாததுமாகக்கூட இருக்கலாம். உதாரணத்திற்கு மலை உச்சியில் கற்பாறையில் தாமரைப்பூ போன்றவை. இவ்வாறு காண்பது தூக்கமின்மையால் ஆகும்.
புலன் நுகர்ந்த விஷயங்கள் பல முறை தோன்றும். புலன்களால் இதுவரை அறியப்படாத விஷயங்கள் தோன்றாது.
சிலசமயம் மனம் ஸத்வ குணத்தில் நிலைபெற்றால் அவனுக்கு பகவானின் அருளால் ப்ரபஞ்சத்தில் உள்ளது அனைத்தும் தெரியும்.
முக்குணங்கள், புத்தி, மனம், புலன்கள், அவற்றால் உணரப்படும் உணர்வுகளால் ஆன கூட்டமே மனத்துடன் கூடிய ஸூக்ஷ்ம அல்லது லிங்க சரீரம். இது உள்ளவரை ஜீவனுக்கு நான் எனது என்ற பற்று விடாது.
ஆழ்ந்த உறக்கத்திலும், காய்ச்சல், ஜன்னி மற்றும் நோய்வாய்ப்பட்டு, மயக்கமருந்து செலுத்தப்பட்ட நேரத்திலும், (கோமாவிலும்) நான் இருக்கும். ஆனால் இந்திரியங்களின் வலிமை குன்றியதால் மறைந்திருக்கும்.
புல்லைத் தின்னும் புழு ஒரு புல்லைத் தின்னும்போதே, அது முடியும் தருவாயில் பின்னங்கால்களால் வேறொரு புல்லைப் பிடித்துக்கொள்ளும்.
அதுபோலவே ஜீவனும் இறக்கும் தருவாயில் தான் வசிக்கும் தேகத்தை விடுவதற்கு முன்னால் வேறொரு சரீரத்தைப் (யாதனா சரீரம்) பிடித்துக்கொள்கிறது. அதுவரை முன்பு பற்றியிருந்த தேகத்தின் மீது அபிமானம் விடாது.
அடுத்த பிறவி இனி இல்லை எனும் நிலை வரும் வரை இப்படித்தான்.
இந்த பந்தத்திலிருந்து முற்றிலுமாக விடுதலை பெற பகவான் ஸ்ரீஹரியைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
இவ்வாறு நாரதர் ஜீவாத்ம பரமாத்ம தத்துவத்தை மிக விரிவாகக் கூறிவிட்டு மன்னனிடம் விடைபெற்றுக்கொண்டு சித்தர்களின் உலகத்திற்குச் சென்றார்.
ராஜரிஷியான ப்ராசீனபர்ஹிஸ் அரசுரிமையையும் மக்களைக் காப்பதையும் தன் புதல்வர்களிடம் ஒப்படைத்துவிட்டு கபிலாசிரமத்திற்குத் தவம் செய்யச் சென்றார்.
அங்கு சென்றதும், பற்றுக்கள் அனைத்தையும் துறந்து ஒருமுகப்பட்ட மனத்தோடும், மிகுந்த பக்தியோடும், ஹரியின் திருவடித் தாமரைகளைப் பூஜித்து, சாரூப்ய முக்தியை அடைந்தார்.
புரஞ்சனோபாக்யானத்தையும் நாரதர் செய்த இந்த உபதேசத்தையும் பக்தியுடன் கேட்பவர்களும் சொல்பவர்களும் விரைவிலேயே அனைத்துவிதமான தளைகளிலிருந்தும் விடுபடுகிறார்கள்
என்று முடித்தார் மைத்ரேயர்.
என்று முடித்தார் மைத்ரேயர்.
இதன் பின் ப்ரசேதஸர்கள் பத்து லட்சம் வருஷங்கள் பூவுலகை ஆண்டு அனுபவித்தனர். பின்னர் பகவான் ஸ்ரீ ஹரி கூறிய உபதேசங்களை நினைத்து நினைத்து ஆன்மஞானம் பெற்றனர். பின்னர் அரசாங்கத்தை மகன் தக்ஷனிடம் ஒப்படைத்துவிட்டு அரண்மனை யிலிருந்து வெளியேறினர்.
மேற்குக் கடற்கரையில் ஜாஜலி என்ற ரிஷி சித்தியடைந்த இடத்தில் ஆன்ம விசாரத்திற்காக ப்ரும்மஸத்ரம் என்ற யாகம் செய்ய தீக்ஷை ஏற்றனர்.
ப்ராணன், மனம், சொல், பார்வை அனைத்தையும் தன்வசமாக்கி உடலை அசைவற்று நேராக நிமிர்த்தி, பத்மாசனத்தில் அமர்ந்து தவமியற்றினர்.
அதைக் கண்ட நாரதர் அங்கு வந்தார்.
நாரதரைக் கண்டதும் எழுந்து விழுந்து வணங்கி முறைவழுவாது பூஜித்தனர்.
தேவரிஷியே! எங்கள் பாக்யத்தால் இன்று தங்கள் தரிசனம் கிடைத்தது. சூரியன் புற இருளை நீக்குவதுபோல் நீங்கள் அக இருளை நீக்குகிறீர்கள்.
பகவான் ஸ்ரீ ஹரி உபதேசம் செய்த ஆத்ம தத்வம், நாங்கள் பலகாலம் இல்லறத்தில் உழன்றதால் பெரும்பாலும் மறந்துவிட்டது.
அந்த ஸத்ய ஞானத்தை எங்களுக்கு மீண்டும் உபதேசம் செய்யுங்கள். அதைக் கேட்டு நாங்கள் விரைவில் முக்தி பெறுவோம்
அந்த ஸத்ய ஞானத்தை எங்களுக்கு மீண்டும் உபதேசம் செய்யுங்கள். அதைக் கேட்டு நாங்கள் விரைவில் முக்தி பெறுவோம்
என்றனர்.
நாரதர் பகவானை தியானித்துப் பின் கூறினார்.
இவ்வுலகில் பகவான் ஸ்ரீ ஹரியிடம் மனத்தை ஒன்றுபடுத்திப் பூஜை செய்பவரே நற்பிறவியாளர். அவரது செயலே நற்செயல். அவரது ஆயுளே பூரண ஆயுள். அவரது வாக்கே நல்வாக்கு. மற்ற அனைத்தும் வீண்.
ஒருவன் கூர்மையான அறிவு, தவம், நாவன்மை, உடல் வலிமை, பல திறமைகள் அனைத்தையும் பெற்றாலும் யாது பயன்?
கர்மயோகங்கள், துறவறம், விரதங்கள், நற்செயல்கள் இவை அனைத்தும் பகவானின் மகிழ்ச்சிக்காகச் செய்யப்படாவிடில் அவை வீணே.
உண்மையில் ஜீவன் தன் நிஜ ஸ்வரூபத்தைத் தெரிந்துகொள்வதே உயர்நலன். ஆன்மஞானத்தை வாரி வழங்குபவர் ஸ்ரீஹரிதான். அவரே அனைத்து ஜீவராசிகட்கும் பிரியமானவர்.
ஒரு மரத்தின் வேரில் நீரூற்றினால் அதன் நடுத்தண்டு, கிளைகள், அனைத்தும் செழிக்கின்றன. பூக்களும் காய்கனிகளும் உண்டாகின்றன.
ஆகாரம் வாய் வழியே உட்கொண்டால் ப்ராணன் காப்பாற்றப்படுவதோடு, உடலின் அனைத்து பாகங்களும் உறுதி பெறுகின்றன.
அதுபோல் ஸ்ரீ ஹரியைப் பூஜித்தால் அனைத்து தேவர்களையும் பூஜித்ததாகிறது.
அனைத்து தாவர ஜங்கமங்களும், ஜீவன்களும், ப்ரபஞ்சமும் அவரிடமே தோன்றி அவரிடமே லயமடைகின்றன.
உண்மையில் இவ்வுலகம் ஸ்ரீ ஹரியின் வெளித்தோற்றமே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
சூரியன் மேகத்தால் மறைக்கப்பட்டாலும் அதன் ஒளி அதைவிட்டுப் பிரிவதில்லை. இவ்வுலகம் பகவான் இல்லாமல் இருப்பதில்லை.
ப்ரும்மா முதலிய தேவர்களுக்கும் தலைவரான ஸ்ரீ ஹரியை அவர் வேறு நாம் வேறு என்ற பேத புத்தியின்றி பூஜை செய்யுங்கள்.
எல்லா ஜீவராசிகளிடமும் கருணை காட்டுதல், கிடைத்ததைக் கொண்டு மனநிறைவு கொள்ளுதல், பொறி புலன்களை அவற்றின் வழிச் செல்லாது நிறுத்தல் ஆகியவற்றால் பகவான் விரைவிலேயே மனம் மகிழ்கிறார்.
பகவான் அன்பு மிகுந்தவர். நீங்காத செல்வம், ரஸக்ஞன், ஸ்வரூபானந்தர், ஏழைப்பங்காளர், அடியார்க்கடியவர். இத்தகைய நற்குணங்கள் கொண்ட பகவானை யார்தான் மறப்பார்?
என்றார் நாரதர்.
நாரதரின் உபதேசம் கேட்டு, பகவானின் திருவடித்தாமரைகளில் மனத்தை இருத்தி ப்ரசேதஸர்கள் வைகுண்டத்தை அடைந்தனர்.
மைத்ரேயர் கூறிய பகவத் கதைகளைக்கேட்ட விதுரர் பக்தி மேலிட்டு, ஆனந்தக் கண்ணீர் பெருக்கி மைத்ரேயர் திருவடியில் பலமுறை வீழ்ந்து வணங்கினார்.
யோகீஸ்வரரே! கருணைக்கடலாகிய தாங்கள் என்னை அறியாமை இருளின் அக்கரையில் அக்கறையுடன் கொண்டு சேர்த்தீர்கள்
என்ற விதுரர்.
பின்னர் மனநிறைவுடன் கிளம்பி அஸ்தினாபுரம் நோக்கிச் சென்றார்.
ஸ்ரீ மத் பாகவதம் நான்காவது ஸ்கந்தம் முற்றிற்று.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment