அன்பின் வலைக்குள் ஆட்பட்ட இறைவனைக் கைகூப்பித் தொழுதார் ப்ருது.
இறைவா! எங்கும் நிறைந்தவர் நீர்! உலகியல் இன்பங்கள் நரகத்தில்கூடக் கிடைக்கும். ஆறாத முக்தியின்பம் நல்கும் உம்மிடம் எவனாவது உலகியல் சுகங்களை வழங்கும் அற்ப வரங்களைக் கேட்டுப்பெறுவானா?
பகவானே! எனக்கு அதுவும் வேண்டாம்.
அங்கு உங்கள் திருவிளையாடல்கள் பற்றிய கதையமுதங்களைக் கேட்க இயலாதே.
உங்கள் அடியார்கள் உங்கள்மீது கொண்ட அன்பினால் இதயம் கனிந்து, ஊனுருகி, உங்கள் அமுதத் திருவிளையாடல்களை இங்குதானே கூறுகிறார்கள்.
அவைகளைக் கேட்டுக்கொண்டே இருக்க எனக்கு ஆயிரம் காதுகளைக் கொடுங்கள்.
அடியார்களின் திருமுகங்களிலிருந்து வெளிவரும் காற்று, தங்கள் திருவடிகளின் மகரந்தத் தேன்துளிகளை ஏந்தி வருவதன்றோ..
அவை என்னைப் போன்ற மூடர்களுக்கும் கசடர்களுக்கும் உண்மையறிவை அளிக்கிறது.
ப்ரும்மாதி தேவர்களும் அனைத்துச் செல்வங்களும் பெற மஹாலக்ஷ்மியை வேண்டுகின்றனர். ஆனால், திருமகளோ, ஸகல புருஷார்த்தங்களையும் வேண்டி தங்களை வேண்டி நிற்கிறாள். தங்கள் கதையமுதத்தினையே பருக விரும்புகிறாள்.
அனைத்து நலனையும் வாரி வழங்கும் உமது புகழை அடியார்கள் பாடும்போது, தற்செயலாகக் கேட்டவன்கூட போதும் என்று நினைப்பதேயில்லை.
புருஷோத்தமரும், கல்யாண குண சீலருமான தங்களுக்குத் திருமகள் போல் சேவை செய்ய விரும்புகிறேன்.
ஒரு புருஷனுக்கு இரு பெண்கள் சேவை செய்தால் கலகம் ஏற்படும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். ஏனெனில் நாங்கள் விரும்புவது சரண சேவையே. அதனால் எங்களுக்குள் கலகம் வராது.
லோகநாயகியான மஹாலக்ஷ்மிக்கு எங்களிடம் பகைமை ஏற்படலாம். ஏனெனில் அவள் செய்யும் சேவையையே நாங்களும் விரும்புகிறோம்.
அவ்வாறு நிகழ்ந்தால் ஏழைப் பங்காளரான தாங்கள் எங்கள் பக்கமே நிற்பீர்கள். மஹாலக்ஷ்மியின் தயவால் தங்களுக்கு ஆக வேண்டியதொன்றுமில்லை.
அதனாலேயே சான்றோர்கள் ஞானம் பெற்றபின்பும் தங்களையே துதிக்கின்றனர்.
நான் எந்தப் பற்றுமின்றித்தான் தங்களைப் பூஜிக்கிறேன். ஆனாலும், என்ன வரம் வேண்டும் கேள் என்ற சொல், உலகையே ஆசை மயக்கத்தில் தள்ளிவிடும் சொல்லாகும்.
தங்களது வேதரூபமான வாக்கும் மக்களை மயக்கத்தில் கட்டிப்போடுகிறது. இல்லையேல் அவர்கள் ஏன் ஆசையோடு பயனை எதிர்பார்த்து கர்மங்களைச் செய்யப்போகிறார்கள்?
அறியாமையால் மக்கள் எதையெதையோ வேண்டுகிறார்கள். ஒரு தந்தை தனயனுக்கு வேண்டியதை அவன் கேட்ட பின்பா செய்கிறார்?
நான் எப்போழ்தும் தங்கள் கதையமுத்தையே கேட்க விரும்புகிறேன். என் நேரத்தைத் திருடும் விஷயங்களிலிருந்தும், மனிதர்களிடமிருந்தும் என்னைக் காத்தருளுங்கள்.
என்றார் ப்ருது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment