ஸ்ரீ சுகர் தொடர்ந்தார்.
பரீக்ஷீத்! நாபியின் மகன் பிறக்கும்போதே திருவடிகளில் தாமரை, அங்குசம் போன்ற ரேகைகளோடு பிறந்தார்.
அனைவரிடமும் பட்சபாதமின்மை, அடக்கம், பற்றற்ற நிலை, எல்லையற்ற திறன், பெரும்புகழ், தேஜஸ், உடல் வலிமை, செல்வம் வீரம் ஆகிய அனைத்து நற்குணங்களையும் கொண்ட அக்குழந்தைக்கு உயர்ந்தவன் என்னும் பொருள்படும்படியாக ரிஷபன் என்று பெயர் வைத்தான் நாபி.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தன் அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தும் குழந்தையின் மேன்மை கண்டு அமைச்சர்கள், நகர ப்ரதானிகள், மக்கள், அந்தணர்கள் அனைவரும் அவனை ஆட்சிப் பீடத்தில் அமர்த்த விருப்பம் கொண்டனர்.
ரிஷபனின் உயர்வு கண்டு பொறாமை கொண்ட இந்திரன் மழையை நிறுத்தினான். அவர் இந்திரனின் அறியாமையைக் கண்டு நகைத்துவிட்டு, தன் யோக சக்தியால் அஜநாபம் என்ற தன் தேசத்தில் மழை பெய்வித்தார்.
நாபி தன் மகனின் அறிவையும் திறமையையும் கண்டு மாயையினால் மயங்கி, எப்போதும் குழந்தையைக் கொஞ்சிக்கொண்டே இருந்தான்.
தகுந்த காலம் வந்ததும் ரிஷபனுக்கு முடி சூட்டிவிட்டு அந்தணர்களின் மேற்பார்வையில் ஒப்படைத்துவிட்டு, தன் மனைவியான மேருதேவியுடன் வனம் சென்றான்.
அங்கு அஹிம்சை நெறி ஏற்று, தவயோகத்தாலும், தியானத்தாலும் நர நாராயண மூர்த்திகளாக விளங்கும் வாசுதேவனை ஆராதித்து சில நாள்களிலேயே ஸாயுஜ்ய பதவியை அடைந்தான்.
பகவான் ரிஷபன் தன் தேசமான அஜநாப வர்ஷத்தைக் கர்மானுஷ்டானங்களுக்கான தேசமாகக் கருதினார். உதாரணமாக இருக்கவேண்டி சிலகாலம் உலக வழக்கை ஒட்டி, குருகுல வாசம் செய்தார்.
குருவுக்கு தக்ஷிணையளித்து அவரது அனுமதி பெற்று இல்லறம் ஏற்றார். இந்திரனின் மகளான ஜெயந்தியை மணந்து தன்னையொத்த நூறு பிள்ளைகள் பெற்றார்.
அவர்களில் மூத்தவனான பரதன் சிறந்த யோக புருஷன் ஆவான். அவனது பெயரால் இந்த அஜநாப வர்ஷம் பாரதவர்ஷம் என்றழைக்கப்பட்டது.
ப என்பது ஞானியைக்குறிக்கும். ரத - என்பது வழிநடத்திச் செல்லுதல்.
ஞானியரால் வழிநடத்திச் செல்லப்படும் தேசம் என்பதாகவும் பாரதம் எனப்படுகிறது.
ஞானியரால் வழிநடத்திச் செல்லப்படும் தேசம் என்பதாகவும் பாரதம் எனப்படுகிறது.
மண்ணின் தன்மையைப் பொறுத்து விளைபொருள் அமையும்.
பாரத மண்ணின் தன்மை ஞானியரைத் தோற்றுவிப்பதாகும். அதனாலேயே இம்மண்ணில் ஏராளமான ஞானிகள் தோன்றியுள்ளனர்.
மற்ற நாடுகளில் ஒன்று அல்லது இரண்டு மஹாத்மாக்கள் இருப்பார்கள். பாரத பூமியிலோ இமயம் முதல் குமரி வரை கிராமத்திற்கு கிராமம் யாராவது ஒரு மஹாத்மாவின் பெயர் ஒலிக்கும். சிலர் ப்ரபலமாகியிருப்பார்கள். சிலர் அப்பகுதியில் அல்லது சில குடும்பங்கள் மட்டும் அறிந்தவராயிருப்பார்கள்.
பாரத பூமி ஞானியரின் பூமி என்பதாலேயே பல அரசர்கள் ஞானிகளாகவும், பகவானை நேரில் கண்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அவர்களாலேயே பாரததேசம் வழிநடத்தப்பட்டு வந்திருக்கிறது.
அவர்களுக்கெல்லாம் முதல்வன் மன்னன் ரிஷபனின் புதல்வன் பரதன் ஆவார்.
பரதனின் தம்பிகள் குசாவர்த்தன், இலாவர்த்தன், ப்ரும்மாவர்த்தன், மலயர், கேது, இந்திரஸ்ப்ருக், விதர்பர், கீகடர் ஆகியோர். இவர்களின் தம்பிகள் கவி, ஹரி, அந்தரிக்ஷர், பிரபுத்தர், பிப்பலாயனர், ஆவிர்ஹோத்ரர், த்ருமிலர், சமஸர், கரபாஜனர் இவர்கள் ஒன்பது பேரும் பக்தியைப் பரப்பும் பாகவதோத்தமர்கள். இவர்களது சரித்ரம் மிகவும் தூய்மையானது. இவர்களது கதை பதினோராவது ஸ்கந்தத்தில் விரிவாகக் கூறபடுகிறது.
மீதி எண்பத்தோரு பேரும் தந்தை சொல் தவறாதவர்கள். வேதங்களில் கூறப்படும் ச்ரௌத கர்மாக்களில் சிறந்தவர்கள். தினமும் செய்யவேண்டிய ஸத்கர்மங்களைத் தவறாமல் செய்தனர். அதன் பயனாய் மனத்தூய்மை பெற்று ப்ரும்மநிஷ்டர்களாயினர்.
பகவான் ரிஷபர் எவ்விதக் கர்மத் தளைகளிலும் சிக்காதவர். ஸ்வதந்த்ரர். எனினும் சாதாரணனைப்போல் காலத்தால் அழிந்துபோன அனைத்து அறநெறிகளையும் தானே பின்பற்றி மக்களுக்கு உதாரண புருஷராய்த் திகழ்ந்தார். அனைவரிடமும் பாரபட்சமற்ற அன்பு பாராட்டினார்.
உலகியல் இன்பங்களின் முடிவில் முக்தியின்பம் பெறுவதற்கு வேண்டிய நெறிமுறைகளில் மக்களைத் தூண்டினார்.
கோமானின் வழியே குடிமக்களும் அறவழி நின்றனர்.
அந்தந்த காலங்களுக்குரிய வேள்விகளையும் கர்மாக்களையும் செய்தார். நூறு வேள்விகள்செய்தார்.
ஒரு சமயம் ப்ரும்ம நிஷ்டர்களாய் விளங்கும் தன் மகன்களுக்கும், மக்களுக்கும் சபையில் சில நல்லுபதேசங்களைக் கூறினார்.
ஒரு சமயம் ப்ரும்ம நிஷ்டர்களாய் விளங்கும் தன் மகன்களுக்கும், மக்களுக்கும் சபையில் சில நல்லுபதேசங்களைக் கூறினார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..