ஸ்ரீ சுகர் தொடர்ந்து கூறலானார்.
தந்தையான ப்ரியவிரதன் புறப்பட்டுச் சென்றதும் ஆக்னீத்ரன்
ஜம்புத்வீபத்தில் உள்ள மக்களைத் தன் பிள்ளைகள் போல் காத்து அறநெறி வழுவாமல்
அரசாட்சி நடத்தினான்.
ஒரு சமயம் ஆக்னீத்ரன் பிள்ளைப்பேறு வேண்டி தவம் செய்வதற்காக
மந்தரமலையின் தாழ்வரைக்குச் சென்றான். அங்கு அவன் பலகாலம் மனத்தை ஒருமுகப்படுத்தி
ப்ரும்மாவை நோக்கித் தவமிருந்தான்.
ப்ரும்மா அவனது விருப்பத்தை அறிந்து தன் அவைப் பாடகியான
பூர்வஸித்தி என்ற தேவமாதை அனுப்பினார்.
ஆக்னீத்ரன் தவம் செய்யும் இடம் மிக அழகாக இருந்தது. அவ்விடத்தின்
அழகும் பூர்வஸித்தியின் அழகும் சேர்ந்துகொண்டது. அவளிடம் மயங்கினான் ஆக்னீத்ரன்.
இருவரும் பல்லாயிரக்கணக்கன வருடங்கள் இன்பமாக வாழ்ந்தனர். சிறந்த
அரசனான ஆக்னீத்ரனுக்கு பூர்வஸித்தியிடம் ஒன்பது குழந்தைகள் பிறந்தன.
நாபி, கிம்புருஷன், ஹரிவர்ஷன், இலாவிருதன், ரம்யகன், ஹிரண்மயன்,
குரு, பத்ராஶ்வன், கேதுமாலன் ஆகியோர் ஆக்னீதரனின் புதல்வர்கள்.
பூர்வஸித்தி அக்குழந்தைகளை அரண்மனையிலேயே ஆக்னீதரனுடன்
விட்டுவிட்டுத் திரும்பவும் ப்ரும்மலோகத்தை அடைந்தாள்.
ஒன்பது குழந்தைகளும் தாயின் அருளால் இயற்கையிலேயே நல்ல உடற்கட்டும்
பலமும் பெற்றிருந்தனர்.
ஆக்னீத்ரன் அவர்கள் பெயராலேயே ஜம்புத்வீபத்தை ஒன்பது பகுதிகளாகப்
பிரித்து ஒப்படைத்தான்.
உலகியல் இன்பங்களைப் பல வருடங்கள் அனுபவித்த போதிலும் ஆக்னீத்ரனால்
அவற்றை விடமுடியவில்லை. மனைவியைப் பெரும்பேறாகவே எண்ணினான்.
தான் செய்த வைதீக கர்மங்களின் பயனாக பித்ருலோகத்தை அடைந்தான்.
தந்தை ஆக்னீத்ரன் மறைந்ததும் அவனது மைந்தர்களான நாபி முதலிய ஒன்பது
பேரும் மேருவின் பெண்களான மேருதேவி, ப்ரதிரூபை, உக்ரதம்ஷ்ட்ரி, லதை, ரம்யை,
ஷ்யாமை, நாரீ, பத்ரை, தேவவீதி என்ற ஒன்பது பேரை மணந்துகொண்டனர்.
அரசே! நாபிக்குப் புதல்வர்கள் இல்லை. அவன் தன் மனைவியான
மேருதேவியுடன், பகவான் ஸ்ரீ மன் நாராயணனை வேள்விகளால் ஆராதனை செய்தான்.
வேள்வியில் ஸம்ர்ப்பிக்கப்டும் தூய்மையான ஹவிஸ், வேள்விக்கான
உயர்ந்த காலமான வஸந்த ருது, முறையறிந்த உயர்ந்த ரித்விக்குகள், அவர்களுக்கு
அளிக்கப்படும் தக்ஷிணைகள், வேள்வியின் விதிமுறைகள் ஆகியவற்றால் மட்டும் மனம்
மகிழ்ந்து பகவான் வந்துவிடுவார் என்று எண்ணவேண்டாம்.
எந்த வித சாதனைகளாலும் அவரை அடைய இயலாது. இறைவன் தன் கருணையால்
மட்டுமே பக்தர்களுக்கு அருள் புரிய வருகிறார்.
தூய்மையான மனத்துடனும் மிகுந்த ஈடுபாட்டுடனும், பக்தியுடனும் நாபி
ஆராதனை செய்தான். அதனால் பரவசமடைந்த இறைவன் மனத்திற்கும் கண்களுக்கும் விருந்தாக
ஒப்பற்ற அழகிய திருமேனியோடு அங்கு எழுந்தருளினார்.
இடுப்பில் மஞ்சள் பட்டாடை, மார்பில் ஸ்ரீ வத்ஸம், நான்கு கைகளிலும்
சங்கு, சக்ரம், கதை தாமரை மலர், கௌஸ்துபம் என்னும் திவ்யமணி, ஒவ்வொரு
அவயவங்களுக்கும் அழகு நேர்க்கும் ஆபரணங்கள், நவமணிமகுடம், மகரகுண்டலங்கள்,
வளையல்கள், ஒட்டியாணம், முக்தாஹாரங்கள், தோள்வளைகள், நூபுரங்கள் ஆகியவற்றுடன்
ஒளிப்பிழம்பாகத் தோன்றினார் இறைவன்.
அவரை அனைவரும் வணங்கினர். ரித்விக்குகள் துதித்தனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட
ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
No comments:
Post a Comment