காட்டில் கணவனின் சிதையில் உடன்கட்டை ஏறுவதற்காக நின்றுகொண்டிருந்த வைதர்பியிடம் ஒரு அந்தணர் வந்தார்.
அம்மா! ஏன் இப்படிக் கதறுகிறாய்? இந்த ஆண்மகன் யார்? உன்னையே நீ மறந்துவிட்டாயா? உன் நண்பன் அவிக்ஞாதன் நான்.
நாம் இருவரும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நண்பர்களாய் இருந்தோமே. தங்க இடமின்றித் தவித்ததால் நீ ஒரு பெண் அமைத்த இடத்திற்குச் சென்று உலகியல் இன்பங்களில் வீழ்ந்தாயே!
அவ்விடத்தில் ஐந்து நந்தவனங்கள் ஒன்பது வாயில்கள், ஒரு வாயில்காப்பான், மூன்று மதில்கள், ஆறு வியாபாரிகள், ஐந்து கடைத்தெருக்கள் இருந்தன. அவை அனைத்தும் உருவகங்களாகச் செய்யப்பட்டவை. இதற்கு தலைவியாக ஒரு பெண்.
ஐம்பொறிகளே ஐந்து நந்தவனங்கள், பொறிகள் இயங்கும் இடங்கள் கண், காது போன்ற இடங்களே ஒன்பது வாயில்கள். ஒளி, நீர், பூமி ஆகியவை மதில்கள். மனமும், அறிவுப்புலன்கள் ஐந்தும் ஆறு வியாபாரிகள்.
செயற்புலன்கள் ஐந்தும் கடைவீதிகள். புத்திதான் நகரத் தலைவி.அந்த நகரத்தினுள் நுழைபவன் உண்மை அறிவை இழக்கிறான். தான் யார் என்பதை மறக்கிறான்.
நீ மாய வலையில் வீழ்ந்து இந்த இழிநிலையை அடைந்தாய்.
நீ உண்மையில் விதர்பனின் மகனுமல்ல. இந்த மலயத்வஜன் உன் கணவனும்அல்ல. புரஞ்சனியின் கணவனும் நீயல்ல.
நீ உண்மையில் விதர்பனின் மகனுமல்ல. இந்த மலயத்வஜன் உன் கணவனும்அல்ல. புரஞ்சனியின் கணவனும் நீயல்ல.
முதலில் உன்னை ஆண்மகன் என்று எண்ணினாய். பிறகு கற்புக்கரசி என்றெண்ணுகிறாய். நீ புருஷனும் அல்ல. பெண்ணும் அல்ல. நாம் இருவருமே மாயையின் சம்பந்தமற்ற தூய ஹம்ஸ (ஆன்ம) வடிவினர்.
நண்பனே! நான் ஈஸ்வரன். நீ ஜீவன். இருப்பினும் நானும் நீயும் ஒன்றே.
உண்மையறிந்தவர் நம்மிடையே வேற்றுமையைக் காண்பதில்லை.
ஒருவன் தன் உருவத்தைக் கண்ணாடியிலும், மற்றொருவனின் கண்களிலும் வெவ்வேறாகக் காண்பதைப்போல், ஒரே ஆத்ம தத்துவத்தை அறிவினால் ஈஸ்வரனாகவும், அறியாமையால் ஜீவனாகவும் பலவாகக் காண்கிறான்.
இவ்வாறு அந்த ஹம்ஸம் மானஸஸரஸில் வாழ்ந்து கொண்டிருந்த ஜீவனான மற்றொரு ஹம்ஸத்தை சமாதானம் செய்ததும் ஜீவன் ஞானம் பெற்றது.
ப்ராசீனபர்ஹிஸ்! ஆத்ம தத்துவத்தின் உண்மை அறிவையே உனக்கு கதை வடிவில் கூறினேன்.
இந்த ப்ரபஞ்சத்தைப் படைத்த மறைபொருளான இறைவன் மறைபொருளாய் மறைந்துதான் விளங்குகிறான். அவனை மறைத்துச் சொல்வதையே விரும்புகிறான். என்றார் நாரதர்.
இத்தனையும் கேட்டுவிட்டு ப்ராசீனபர்ஹிஸ் புரியவில்லை என்றதும், நாரதர் கருணையோடு முழுக் கதையையும் அதில் வரும் பெயர்களோடும் அவற்றின் தத்துவங்களோடும் மறுபடி விளக்கிக் கூறினார்.
மேலும் தொடர்ந்தார்.
மன்னா! உண்மைபோல் இருக்கும். கேட்பதற்கும் இனிமையாக இருக்கும். ஆனால், உண்மைப்பொருளான ஆன்மாவிற்குச் சற்றும் தொடர்பிருக்காது. அத்தகைய கர்ம மார்கங்களில் மனம் செலுத்தாதே.
கர்மங்களின் பயனைக் கொடுப்பவர் இறைவனே. மனத்தூய்மை பெறாதவர்கள் பலனை உத்தேசித்துச் செய்வார்கள். மனத்தூய்மை பெற்றவர்கள் எந்தக் கர்மத்தைச் செய்தாலும் அதை பகவத் அர்ப்பணமாகச் செய்வார்கள்.
கிழக்கு நுனியாகத் தர்ப்பைகளைப் போட்டு இப்பூமண்டலம் முழுதும் நிரப்பி, வேள்விகள் செய்தாய். அதனால் பெரும் செருக்கடைந்தாய். எனவே வேள்விப்பசுக்கள் உன்னை மன்னிக்கவில்லை.
கர்மயோகத்தின் உண்மைப்பொருளை நீ அறியவில்லை.
எதைக் கண்டால் பகவான் ஸ்ரீ ஹரி மகிழ்ச்சியடைவாரோ அதுவே நற்செயல்.
எதனால் பகவானின் நினைவு ஏற்படுமோ, அவரிடமே மனம் லயிக்குமோ அதுவே வித்யை. அதுவே மந்திரமும்.
ஹே அரசனே! உனக்குப் புரியும்படி இன்னும் ஒரு நுட்பமான செய்தியைச் சொல்கிறேன் கேள் என்றார் நாரதர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
No comments:
Post a Comment