Friday, November 16, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 146 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 90

ருத்ரகீதம்

பரமேஸ்வரனால் ப்ரசேதஸர்களுக்கு உபதேசம்‌ செய்யப்பட்டது.

1. இறைவா! தங்களுக்கு வெற்றி உண்டாகட்டும். தங்களுடைய பெருமைகள் ஆன்ம ஸ்வரூபம் அறிந்த ஞானியர்க்கு ஆனந்தத்தை அளிப்பது. நன்மைகளை வழங்குவது. எனக்கும் அந்த அந்த ஆனந்தத்தை அருள்வீராக!! எல்லா ‌ஜீவராசிகளிலும் ஆத்மஸ்வரூபமாக விளங்கும்‌
தங்களுக்கு வணக்கம்.

2. அனைத்து உலகங்களுக்கும் ஆதிகாரணனான பத்மநாபர் தாங்கள். பூத ஸூக்ஷ்மங்களுக்கும் பொறிபுலன்களுக்கும் தலைவர். நீக்கமற எங்கும் நிறையும்‌ வாசுதேவர். மாறுதலற்றவர். தானாக ஒளிர்பவர். தங்களுக்கு நமஸ்காரம்.

3. தாங்கள் அறிவுக்குப் புலப்படாதவர். நுட்பமானவர். எல்லையற்றவர். மூச்சுக்காற்றாலேயே அகில ‌உலகங்களையும் அழிக்கும் ஸங்கர்ஷணர் நீரே. உயர்ந்த ஞான தேவதையும், புத்தியின் தேவதையுமான ப்ரத்யும்னனும் தாங்களே. தங்களுக்கு வணக்கம்.

4. பொறிபுலன்களின் தலைவனும், மஹத் தத்வத்தின் தேவதையுமான அநிருத்தனும் நீரே. சுடரொளியை உலகெங்கும் பரப்பும் சூரியனும் நீரே. பரிபூரணரான தாங்கள் குறைவதுமில்லை. நிறைவதுமில்லை. தங்களை திரும்ப திரும்ப வணங்குகிறேன்.

5. ஸ்வர்கம், மோக்ஷம் இரண்டிற்கும் ஒரே வழி தாங்கள்தான். தூய்மையான சான்றோரின் ஹ்ருதயகமலத்தில்‌ வசிப்பவர். வேள்வித்தீயாக விளங்குபவர். வேள்வியான கர்மங்களுக்கு சாதனமும் தாங்களே. தங்களுக்கு நமஸ்காரம்.

6. பித்ரு தேவதைகளுக்கு அன்னரூபமாகவும், தேவர்களுக்குரிய அன்னமாகவும், மூன்று வேதங்களின் ஸ்வரூபமாகவும் விளங்குகிறீர். அனைத்து ஜீவராசிகளையும்‌ மகிழ்விக்கும் ஜலஸ்வரூபமான தங்களுக்கு நமஸ்காரம்.

7. ஒலியை குணமாகக் கொண்டு அகம், புறம் என்ற வேறுபாடு காட்டும் ஆகாய ஸ்வரூபம்‌ தாங்கள். அனைத்து புண்ய லோகங்களும் தாங்களே. திரும்ப திரும்ப தங்களை வணங்குகிறேன்.

8. பித்ரு லோகத்தைப் பெற்றுத்தரும் ப்ரவ்ருத்தி தர்மமும், ஸ்வர்கம் முதலிய தேவலோகங்களை அளிக்கும் நிவ்ருத்தி தர்மமும் தாங்களே. மறவழியின் பயனான துன்பத்தைத் தரும் ம்ருத்யுவும் தாங்களே. தங்களை வணங்குகிறேன்.

9. அனைத்து செயல்களுக்கும் உண்டான பலன்களை அளிப்பவர் நீரே! அனைத்தும் அறிந்தவர். தர்மஸ்வரூபம், அனைவரையும் தன்பால் கவர்ந்திழுப்பவர். தடைகளற்றவர். ஞான வடிவினர். தோற்றமற்றவர். ஞானம் யோகம் ஆகியவற்றின் தலைவர். தங்களை வணங்குகிறேன்.

10. இச்சா சக்தி, ஞான சக்தி, க்ரியா சக்தி ஆகிய சக்திகளின் ரூபமானவர். படைத்து, காத்து, அழிப்பவரும் தாங்களே! பர்ஜன்யன் என்ற மேக வடிவாய் இருப்பவர். அஹங்கார தத்வமான ருத்ரனும் தாங்களே. அறிவு, செயல், இரண்டுமாக இருப்பவர். தங்களிடமிருந்தே அனைத்து வகை ஒலிகளும் தோன்றின.
தங்களை வணங்குகிறேன்.

11. ப்ரபோ! அடியார்கள்‌மிகவும் அன்போடு பூஜிக்கும் தங்களது அழகிய திருமேனியை எங்களுக்குக் காட்டி அருளுங்கள். அத்திருமேனி கண்டதுமே, அத்தனை இந்திரியங்களையும்‌ மகிழ்விக்குமே.

12 - 19. மழைக்காலமேகம் போல் கறுத்தது, அனைத்து அழகுகளுக்கும் கொள்கலன், நீண்ட கைகள், மனங்கவர் திருமுக மண்டலம், செந்தாமரைக் கண்கள், செம்பவளவாய், வளைந்த புருவம், உயர்ந்த நாசி, முத்துப்பற்கள், வழுவழுப்பான கன்னங்கள், அழகான காதுகள், அன்பு சிந்தும் புன்முறுவல், கருணைவழியும் கடைக்கண் நோக்கு, சுருண்டு நெளிந்த முன் நெற்றிக் கேசம், தாமரை போன்ற பாதங்கள், அரையில் பொன்னாடை, அசையும்‌ குண்டலங்கள், சூரியன் போல் ஒளிரும் மணிமகுடம், தோள்வளை, முத்துஹாரம், கால்களில் நூபுரங்கள், அரையில் தங்க ஒட்டியாணம், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், கதை, பத்மம், கழுத்தில் வனமாலை, திருமார்பில் கௌஸ்துபம், சிங்கம் போல் நிமிர்ந்த கழுத்து, திருமங்கையுடைத் திருமார்பம், மூச்சுவிடுவதால் அசையும் மூன்று மடிப்புகள் கொண்ட திருவயிறு, ப்ரளயத்தில் தன்னுள் உலகையே ஒடுக்குவது போன்ற சுழித்த ஆழ்ந்த தொப்புள், சமமான முழங்கால்கள், மன அழுக்கைத் துடைக்கும் நகங்களின் ஒளி சரத்காலத் தாமரைபோல் திருவடிகள் ஆகியவற்றோடு விளங்குவதும், பக்தர்களின் துயரைத் துடைப்பதுமான திருமேனிக் காட்சி எங்களுக்கு வேண்டும்‌. தன்னை வந்தடையும் வழியைக் காட்டித் தரும் நீங்களே எங்கள் ஞான குரு! தங்களுக்கு நமஸ்காரம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

ருத்ரகீதம் ஸ்லோகங்கள் இணைக்கப்பட்டுள்ள லிங்க்
https://drive.google.com/…/1dq1LCYJ6uvmTkxD2CUsiuoqRy…/view…

No comments:

Post a Comment