சௌனகர் அடுத்த கேள்வி கேட்டார்.
ஸ்வாமி! ஐந்தாவது ஸ்கந்தத்தில் ரிஷிகள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், நாகர்கள், யட்சர்கள், ராக்ஷஸர்கள், தேவர்கள், ஆகிய 7 பிரிவும் சேர்ந்தது சூரியகணம் என்று கூறினீர்கள். இவை ஒவ்வொரு மாதமும் மாறிக்கொண்டே இருப்பதாகக் கூறினீர்களே. பன்னிரண்டு மாதங்களுக்குரிய பன்னிரண்டு கணங்களும், பன்னிரண்டு ஆதித்யர்களும் யாவர்? அவர்கள் என்ன பணி செய்கிறார்கள்? என்று கேட்டார்.
ஸூதர் விடையிறுக்கத் துவங்கினார்.
ஸ்ரீ மன் நாராயணனின் மாயையால் உருவாக்கப்பட்டது சூரியமண்டலம். அவரே உலகம் முழுவதும் பயணிக்கிறார்.
பகவான் ஸ்ரீ ஹரியே அனைத்திற்கும் அந்தர்யாமியாக இருப்பவர். அவர் ஒருவராயினும் அனைவரும் பல வடிவங்களில் காண்கின்றனர். அவரே வேதத்தில் கூறப்படும் அத்தனை காரியங்களுக்கும் மூல காரணமாவார்.
விடியும் காலம் முட்கலிய அனைத்துக் காலங்கள், மேடு, பள்ளம், சமம் ஆஹியவை உடைய இடம், வேள்வி முதலான கர்மாக்கள், கர்த்தா, நெயை ஆஹுதி செய்யப் பயன்படும் ஸ்ருக் எனும் கரண்டி, நெல் முதலானவை, வேள்வியின் பயனான ஸ்வர்கம் அனைத்தும் பகவானே.
இவ்வுலக நடைமுறைகள் குறைவின்றி நடைபெறுவதற்காக பகவான் சூரிய நாராயணன் பன்னிரண்டு மாதங்களிலும் பன்னிரண்டு கணங்களுடன் சுற்றி வருகிறார்.
தாதா என்ற சூரியன், க்ருதஸ்தலி என்ற அப்ஸரஸ், ஹேதி என்ற அரக்கன், வாசுகி என்ற நாகம், ரதகிருத் என்ற யட்சன், புலஸ்த்ய ரிஷி, தும்புரு என்ற கந்தர்வன் ஆகியோர் சித்திரை மாதத்தில் பணி செய்கிறார்கள்.
அர்யமா என்ற சூரியன், புலஹர், அதௌஜஸ் என்ற யக்ஷன், ப்ரஹேதி என்ற ராக்ஷஸன், புஞ்ஜிகஸ்தலி என்ற அப்ஸரஸ், நாரதன் என்ற கந்தர்வன், கச்சனீரன் என்ற நாகம் ஆகியோர் வைகாசி மாதம் பணி செய்பவர்கள்.
மித்ரன்என்ற சூரியன், அத்ரி ரிஷி, பௌருஷேயன் என்ற ராக்ஷஸன், தக்ஷகன், மேனகை, ஹாஹா என்ற கந்தர்வன், ரதஸ்வனன் என்ற யக்ஷன் ஆகியோர் ஆனி மாதத்தின் பணியாளர்கள்.
ஆஷாட (ஆடி) மாதத்தின் பணியாளர்கள் வருணன் எனப்படும் சூரியன், வசிஷ்டர், ரம்பை, ஸகஜன்யன் என்ற யக்ஷன், ஹூஹூஎன்ற கந்தர்வன், சுக்ர நாகம், சித்ரஸ்வனன் என்ற ராக்ஷஸன் ஆகியோர்.
சிரவண (ஆவணி) மாதம் பணியாற்றுபவர்கள் இந்திரன் என்ற சூரியன், விஸ்வாவசு என்ற கந்தர்வன், சுரோதா என்ற யக்ஷன், ஏலாபத்ர நாகம், ஆங்கிரஸ் ரிஷி, பிரம்லேசா என்ற அப்ஸரஸ், வர்யன் என்ற
ராக்ஷஸன் ஆகியோர்.
புரட்டாசி மாதம் விவஸ்வான் என்ற சூரியன், உக்ரஸேனன் என்ற கந்தர்வன், வியாக்ரன் என்னும் அரக்கன், ஆஸரணன் என்ற ய்க்ஷன், பிருகு, லோசை என்ற அப்ஸரஸ், சங்கபால நாகம் ஆகியோர் பணியாற்றுவர்.
#மாஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.
No comments:
Post a Comment