Monday, June 21, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 652

மார்க்கண்டேயர் பல கோடி காலம் பிரளய அனுபவம் பெற்றார் என்று சொல்லும்போது அது பகவானின் மாயை என்பது புலப்படுகிறது.

அது அவருக்காக தனிப்பட்ட முறையில் பகவானால் கற்பிக்கப்பட்ட ப்ரளயமாகும். பகவானின் சுவாசத்தில் ஏழுமுறை உட்புகுந்து திருவயிற்றினுள் சென்று வெளிவந்ததால் அந்த ஏழு நொடிப் பொழுதுகள் ஏழு கல்பங்களாக மாயையால் காட்டப்பட்டது என்பர் பெரியோர்.
ஶௌனகர் ஸூதரைப் பார்த்துக் கேட்டார்,
முனிவரே!
இம்மை மறுமை பற்றிய உண்மைகளை அறிந்தவர்களுள் சிறந்தவர் தாங்கள். எங்களுக்கு க்ரியா யோகம் பற்றி விளக்குங்கள்.
பாஞ்சராத்ரம், வைகானஸம், மற்றும் தந்திர மார்கங்களில் பகவானை ஆராதனை செய்வது எங்ஙனம்? அவரது அங்கங்கள், கருடன், சுதர்சனம் முதலிய உப அங்கங்கள், கௌஸ்துபம் முதலான ஆபரணங்கள் எவ்வாறு அறியப்படுகின்றன. இவை பற்றியும் விளக்குவீராக. என்றார்.
ஸூதர் பதிலிறுக்கத் துவங்கினார்.
என் குருவான வியாஸரின் திருவடிகளை வணங்கி ப்ரும்மா முதலான ஆசார்யர்களும், வேதங்களும், ஆகமங்களும் கூறும் பகவானின் விராட் ரூபத்தையும் அதன் பெருமைகளையும் கூற முயல்கிறேன்.
அனைத்து உலகங்களுக்கும் ஆதார ஸ்தலமாக விளங்குவது பகவானின் விராட் ஸ்வரூபமாகும். ப்ரக்ருதி, சூத்திரம், மஹத், அஹங்காரம், ஐந்து தன்மாத்திரைகள், அறிவுப்புலன்கள் ஐந்து, செயற்புலன்கள் ஐந்து, மனம், ஐந்து மஹா பூதங்கள், ஆகிய அனைத்து தத்துவங்களுக்கும் நிலைக்களனாய் விளங்குவது விராட் ஸ்வரூபம் ஆகும்.
பூமியே அவரது திருவடி, தேவலோகமே தலை, ஆகாயம் தொப்புள், சூரியனே கண்கள், வாயு மூக்கு, எட்டுத் திசைகளும் இரு காதுகள், எண்டிசை லோகபாலர்களும் பகவானின் திருக்கரங்கள், சந்திரனே மனம், யமன் புருவங்கள், வெட்கம் மேலுதடு, பொறாமை கீழுதடு, புன்னகையே மயக்கம், மரங்களே ரோமங்கள், மேகங்களே கேசங்கள்.
பகவான் பிறப்பற்றவர். கௌஸ்துப மணி என்ற சுத்த ஜீவ சைதன்யமான ஆன்மஜோதியை அணிந்திருக்கிறார்.
அதன் ஒளியை ஸ்ரீ வத்ஸமாக அணிகிறார்.
ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்கள்‌கொண்ட வனமாலையை மார்பில் அணிகிறார்.
வேதஸ்வரூபமே பீதாம்பரம். அகரம், உகரம், மகரம் என மும்மாத்திரைகள் உடைய ப்ரணவம் முப்புரிநூலாகும்.
ஸாங்க்யம், யோகம் ஆகிய இரண்டும் மகர குண்டலங்கள். ப்ரும்மலோகமே கிரீடமாகும். அனந்தனாகிய ஆதிசேஷன் மூலப்ரக்ருதி. ஸத்வகுணமே தொப்புள்.
மனம், இந்திரியம், உடல்‌ ஆகியவற்றோடு தொடர்புள்ள பிராண தத்வமே கௌமோதகீ எனப்படும் கதை. ஜலதத்துவம் பாஞ்சஜன்யமாகும். சுதர்சனம் தேஜஸ் ஆகும்.
ஆகாயத்தின் நீல நிற தத்துவம் நந்தகி எனப்படும் வாள். தமோ குணம் கேடயம்‌. காலதேவதையே சார்ங்கமாகும். கர்மங்களே அம்புறாத்தூணி.
இந்திரியங்களே அம்புகள். க்ரியா சக்தி கொண்ட மனமே தேர். ஐந்து தன்மாத்திரைகளும் தேரின் வெளிப்புறமாகும். அபயம், வரதம் எனும் முத்திரைகள், பயத்தைப் போக்குவது, வரங்களை அருள்வது ஆகியவற்றைச் செய்கின்றன.
சூரிய மண்டலம் மற்றும் அக்னி மண்டலம் ஆகியவை பகவானின் இருப்பிடங்கள்.
ஆசார்யன் அளிக்கும் மந்திர தீட்சையே சித்த சுத்தி. அதுவே பகவானைப் பூஜிப்பதற்கான தகுதியாகும்.
பக என்னும் சொல்லின் பொருளான ஐஸ்வர்யம், தர்மம், செல்வம், ஞானம், புகழ், வைராக்யம் ஆகிய ஆறும் ஒன்றாகச் சேர்ந்து அவரது திருக்கரத்தில் தாமரையாக விளங்குகிறது. தர்மமும் புகழும் வெண்சாமரமும், விசிறியுமாகும்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

No comments:

Post a Comment