சட்டென்று மார்க்கண்டேயருக்கு இவை அனைத்தும் யோகமாயையின் விளைவு, தாம் கேட்ட வரத்தைப் பூர்த்தி செய்யவே இக்காட்சிகள் என்று புரிந்துவிட்டது.
இப்படிப்பட்ட மாயையிலிருந்து விடுபட ஒரே வழி பகவானின் திருவடித் தாமரைகளை தியானிப்பதே என்று அறிந்துகொண்டார்.
உடனே பகவானைத் துதிக்கத் துவங்கினார்.
இறைவா! தங்களது மாயையின் சக்தியை நன்கு கண்டேன். அவை அனைத்தும் மாயக்காட்சிகள், பொய் என்று தெரிந்தாலும், சத்யமான வஸ்துவைப் போல் எங்கும் விளங்குகிறது. பெரிய ஞானிகள் கூட இதில் விதிவிலக்கல்ல. இந்த மாயையின் பயம் நீங்க தங்கள் திருவடிகளைத் தொழுகிறேன். அபயமளியுங்கள்.
என்று ப்ரார்த்தனை செய்துகொண்டே தன்னிலை மறந்து துரீய நிலைக்குச் சென்றுவிட்டார்.
அப்போது வான்வழியில் பரமேஸ்வரனும் பார்வதி தேவியும் ரிஷபத்தின் மேலேறி தம் சிவகணங்கள் சூழ சென்றுகொண்டிருந்தனர்.
கீழே மார்க்கண்டேயரைப் பார்த்த பார்வதி தேவிக்கு தாயன்பு பெருகிற்று.
ஐயனே! காற்றில்லாதபோது அசையாமல் அமைதியாக இருக்கும் பெருங்கடலைப்போல அனைத்து இந்திரியங்களையும் ஒடுக்கி மனம் அடங்கி தன்னிலை மறந்து இருக்கும் இந்த அந்தணர் மீது கருணை வையுங்கள். இவரது தவத்திற்கேற்ற பலனைத் தாங்கள் அருளவேண்டும் என்றார்.
பரமேஸ்வரனும் அதைக் கேட்டுமிகவும் மகிழ்ந்து பதிலிறுத்தார். எனக்கும் கூட இவருடன் உரையாட மிகவும் விருப்பமாயிருக்கிறது. இவர் பகவான் நாராயணனை மனத்தில் இருத்தி புலன்களை வென்றுவிட்டார். முக்தியில் கூட விருப்பமில்லாதவர்க்கு என்ன பலனைக் கொடுத்து விட முடியும்.
இத்தகைய ப்ரும்ம ஞானிகளைப் பார்ப்பதே மிகவும் அரிது. இவர்களுடன் பேசுவது பெரும் பேறன்றோ. வா. போய்ப் பார்க்கலாம். என்று கூறினார். அனைவரும் அந்த ஆசிரமத்திற்குள் இறங்கினார்கள்.
இதயத்தில் பகவான் நிலை பெற்றிருந்த படியால் மார்க்கண்டேயர் தன்னைச் சுற்றி நிகழும் எதையும் உணர்ந்தாரில்லை.
பரமேஸ்வரன் அவர் அருகில் சென்று அழைத்துப் பார்த்தார்.
ம்ஹூம்.. சலனமே இல்லை.
அணிமாதி ஸகல சித்திகளிலும் வல்லவரான கைலாசநாதர் தன் யோக மாயையால் மார்க்கண்டேயரின் ஹ்ருதயத்தினுள் புகுந்தார்.
மின்னல் போன்ற பளீரென்ற மேனி, மஞ்சள் நிறத் திருச்சடைகள், மூன்று கண்கள், பத்து கரங்கள், நெடிய திருவுருவம், சூலம், மழு, பரிகம், கேடயம், ருத்ராக்ஷ மாலை, உடுக்கை, ப்ரும்மகபாலம், கத்தி மற்றும் வில்லுடன் திடீரென்று தானே இதயத்தில் வந்து நின்ற பரமேஸ்வரனைக் கண்டு திகைத்தார் மார்க்கண்டேயர். மேனி சிலிர்க்க, ஸமாதி கலைந்தது.
கண்ணைத் திறந்தால் உள்ளே கண்ட காட்சி கண்முன்னே உருக்கொண்டு பரிவாரங்களுடன் நிற்பதைக் கண்டார்.
கிடைத்தற்கரிய பேறு.
தானே வந்து ஆட்கொண்டதே.
கண்டவுடன் கைநழுவிய தடிபோல அப்படியே திருவடிகளில் விழுந்தார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment