Saturday, June 12, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 647

நர நாராயணர்கள் மார்க்கண்டேயர் முன் தோன்றினர்.


ஒருவர் பளீரென்று தங்க நிறத்தில் இருந்தார். மற்றொருவர் கார்மேக வண்ணத்தவர். செவ்வரியோடிய நீண்ட கண்கள், பவித்ரம், முப்புரிநூல், நீண்ட மூங்கில் தண்டம், மற்றும் கமண்டலம், கழுத்தில் தாமரை மணிமாலை, துணிக்குஞ்சலம், ஒளி பெருக்கும் மேனி, நாற்கரங்கள் கொண்ட தோற்றத்தில் இருந்தனர். ஒருவர் மான்தோலும் மற்றவர் மரவுரியும் அணிந்திருந்தனர்.

தவமே உருக்கொண்டதுபோல வந்த அவ்விருவரையும் கண்ட மார்க்கண்டேயர் வேகமாக எழுந்தார். நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.

மேனி சிலிர்த்தது. ஆனந்தக் கண்ணீர் கண்களை மறைத்தது. நாத்தழுதழுக்க ஓடிப்போய் தழுவுவார் போல‌ இருந்தாலும்‌ இரு கரம் கூப்பியபடி வணக்கம் வணக்கம் என்று கூறிக்கொண்டே இருந்தார். வேறெதுவும் பேச நா எழவில்லை.

சற்று நேரம் கழித்து தன்னுணர்வு வந்தவராய் ஓடிப்போய் ஆசனங்கள் இட்டு அமரவைத்து, அர்க்கியம் அளித்து, சந்தனமிட்டு, மாலை அணிவித்து பூஜை செய்தார்.
பின்னர் துதிக்கலானார்.

அற்ப ஜந்துவாகிய நான் தங்கள் பெருமைகளை எவ்வாறு அறிவேன்? எப்படிப் போற்றுவேன்? தங்கள் இயக்கத்திலேயே பிரும்மா உள்பட அனைவரும் வாழ்கின்றனர். உடலின் பிராணனுக்கு ஆதாரம் தாங்களே. பிராணன் இயங்குவதாலேயே மற்ற பொறிகளும் புலன்களும் இயங்குகின்றன.

எவ்வகையிலும் சுதந்திரமற்றதாக ஜீவன் இருப்பினும், மனம், வாக்கு, உடல் ஆகியவற்றால் தங்களையே போற்றுவோர்க்கு தாங்கள் ஆத்ம பந்துவாயிற்றே.

சுதந்திரமானவர் என்றாலும் எங்கள் அன்பு வலைக்கு அகப்படுகிறீர்கள்.

ப்ரபஞ்சத்தைக் காக்க, மீன், ஆமை, பன்றி போன்ற உருவங்களிலெல்லாம் அவதாரமாகத் தோன்றுகிறீர்கள். இப்போதும் உலக நன்மைக்காக இரு உருவங்கள் எடுத்து வந்திருக்கிறீர். ஒப்பற்ற தலைவராகிய தம்முடைய திருவடிகளை வணங்குகிறேன். தங்கள் திருவடிகளைப் பற்றியவனை எத்தகைய கர்மவினையும் ஒன்றும் செய்வதில்லை.

அனைத்து ஜீவன்களுக்குமான ஒரே பயம் மரணபயம். காலனைக் கண்டு ப்ரும்மாவே பயப்படுகிறார். அவருக்கும் இரண்டு பரார்த்த ஆயுள்தான். அவரால் படைக்கப்பட்ட பஞ்சபூதங்களுக்கும் ஆயுள் உண்டு. அவற்றின் துளிகளால் படைக்கப்பட்ட ஜீவன்களும் பயப்படுகின்றன.

அனைத்து விதமான பயங்களிலிருந்தும் விடுவிப்பது தங்கள் திருவடிகளே ஆகும்.

தங்கள் திருமேனி ஸத்வகுணத்தால் ஆனது. அதை தியானிப்பவர்களுக்கு வைகுண்டம் கிடைக்கிறது. ரஜோகுணமோ, தனோகுணமோ இருப்பவர்களுக்கு தாங்கள் அரிதானவர்.

எல்லாப் பொருளிலும் நீக்கமற நிறைந்தவரே. அனைத்து ஜீவராசிகளின் ஸ்வரூபமானவரே. உலகின் குருவே. உயர்வுக்கெல்லாம் உயர்வானவரே. தூய்மையே உருவானவரே. வேதங்களின் தலைவரே. தங்களை வணங்குகிறேன்.

தங்களைப் பற்றிய உண்மையான அறிவை வெளிக்கொணரும் உபாயம் வேதங்களில் உள்ளது. ஆனால், ப்ரும்மா முதலானோரும் தெளிவின்றி தம்மை அறிய இயலாமல் மயங்குகின்றனர்.
தங்களின் உண்மை நிலையை உணராத மதவாதிகள் எவ்வெந்த வழியிலெல்லாம் தம்மை வழிபடுகிறார்களோ அவ்வாறாகவே தாங்கள் குணம், உருவம் மற்றும் வைபவங்களைத் தாங்கி அவர்களுக்கு வெளிப்படுகிறீர்கள்.

உண்மையில் அனைத்தும் தங்கள் ஸ்வரூபத்தின் ஒரு சிறு தோற்றமே. அப்படிப்பட்ட ஆதார புருஷரான புருஷோத்தமரான தம்மை வணங்குகிறேன்.
என்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment