கண்ணன் கூறிய அனைத்தையும் கவனமாகக் கேட்ட உத்தவன் கேட்டான்.
கண்ணா! யோகேஸ்வரன் நீ. என்னதான் சொல்ல வருகிறாய்? நான் கர்மாக்களைச் செய்யவேண்டுமா? அல்லது வேண்டாமா?
குழந்தையைப் போல் கேட்ட உத்தவனைப் பார்த்துக் கண்ணனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
கண்ணன் மீண்டும் யோக தத்துவங்களை விளக்கத் துவங்கினான்.
உத்தவா! ஒரு உடலில் தங்கும் ஜீவன் மூலாதாரத்தில் நாதப்ரும்மமாக பரா என்ற பெயரில் இருக்கிறது. பின்னர் மணிபூரக சக்ரம் வந்து பஸ்யந்தி என்று பெயர் பெறுகிறது. அதன் பின் கழுத்துப் பகுதியில் விசுத்தி சக்ரத்தில் மத்யமா என்ற பெயர் பெறுகிறது. பின்னர் வாய் வழியாக வெளிப்படும்போது மாத்ரை, ஸ்வரம், வர்ணம் ஆகிய வடிவங்களை ஏற்று வைகரீ என்ற பெயரைக் கொள்கிறது. ஆகாயத்தில் மின் சக்தியாக விளங்குகிறது. சின்னஞ்சிறு பொறியாகத் தோன்றும் நெருப்பு பஞ்சு போன்றவற்றில் பற்றிக்கொள்ளும்போது பெரிய அக்னியாக மாறுகிறது.
அது போலவே சப்த ப்ரும்மம் சிறு வடிவெடுத்து பின்னர் பெரிய உருவம் கொள்கிறது. இவை அனைத்துமாக நானே வெளிப்படுகிறேன்.
இவ்வாறே பேசுவது, சிரிப்பது, நடப்பது, வேலை செய்வது, கழிவை வெளியேற்றுவது, நுகர்வது, உண்பது, தொடுவது, கேட்பது, சிந்திப்பது, அகங்காரம் கொள்வது, அறிந்துகொள்வது அனைத்துச் செயல்களும் ஸத்வ ரஜஸ், தமஸ் குணங்களின் சேர்க்கையால் நிகழ்வது. அனைத்தும் என் வெளிப்பாடுகளே என்றுணர்வாயாகில் இந்த சந்தேகம் வராது. பரமாத்மாதான் முக்குணக் கலவையான ப்ரும்மாண்ட வடிவிலான தாமரையைத் தோற்றுவிக்கிறார்.
அவரேதான் பல்வேறு சக்திகளாகப் பிரிந்து பல்லாயிரம் வடிவங்களாக வெளிப்படுகிறார்.
குறுக்கும் நெடுக்குமாகப் பாவப்பட்ட நூலில்தான் துணி உருவாகிறது.
அதே போல இவ்வுலகம் பகவானில் விளங்குகிறது. கர்மாக்கள் மலர் போன்ற உலகியங்களையும், பழம் போன்ற முக்தியையும் வழங்க வல்லவை.
உலக வாழ்வு என்பது மரம் என்று கொண்டால், பாவம், புண்ணியம் ஆகியவை இரண்டு விதைகள், கர்ம வாசனைகளே நூற்றுக்கணக்கான வேர்கள், முக்குணங்களே தண்டுகள், ஐந்து பூதங்கள் ஐந்து பெருங்கிளைகள், ஐந்து புலனின்பங்கள் ஐவகை சாறுகள், பத்துப் புலன்களுடன் மனம் சேர்த்து பதினோறு சிறுகிளைகள், ஜீவன், ஈஸ்வரன் ஆகிய இரு பறவைகளின் கூடுகள், வாதம், கபம், பித்தம் ஆகிய மூன்று பட்டைகள், சுகம் துக்கம் ஆகிய இரண்டு பழங்கள் என்று ஸம்ஸார வ்ருக்ஷம் சூரிய மண்டலம் வரை விரிந்து பரவியுள்ளது.
விஷய சுகங்களில் ஈடுபடுபவர்கள் கழுகு போன்றவர்கள். அவர்கள் புலன்களின் கூட்டான உடலால் துன்பப் பழத்தைப் புசிக்கிறார்கள். பற்றற்ற வாழ்வை மேற்கொள்பவர்கள் சுகம் என்ற பழத்தை உண்கிறார்கள்.
பரமஹம்ஸர்களான ஞானிகள் இவற்றை உணர்ந்துகொண்டு அனைத்தையும் மாயை என்று தள்ளுகிறார்கள். குருவிடம் உபதேசம் பெற்று மெய்ஞானம் என்ற கத்தியைத் தீட்டி நான் ஜீவன் என்ற எண்ணத்தை வெட்டி எறியவேண்டும். ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்ததும் ஞான வடிவான கத்தியையும் துறக்கவேண்டும். பரமாத்ம ஸ்வரூபத்தில் கலந்து எல்லைகளற்ற வெளியில் திளைக்கலாம்.
என்றான் கண்ணன்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment