பகவானிடம் நிலை பெற்ற மனத்துடையவர்களிடமிருந்து கர்ம வாசனைகள் விலகும். ஸத்வகுணம் வளர வளர, ரஜோ, மற்றும் தமோ குணங்கள் விலகும். அமைதி கிட்டும். நன்றாக ஆத்மாவில் நிலைபெற்றவர்க்கு சூழலில் நடைபெறுவது எதுவும் தெரியாது. பாதிக்காது.
முனிவன் எப்போதும் தனித்திருக்கவேண்டும். கூட்டத்தோடு சேரக்கூடாது. சொந்தமாக இருப்பிடம் வைத்துக்கொள்ளக் கூடாது. எப்போதும் கவனமாக இருக்கவேண்டும். தன் ஆசார அனுஷ்டானங்களை விளம்பரம் செய்யக்கூடாது. குறைந்த அளவு பேசவேண்டும்.
சிலந்தி தன் வாயிலிருந்து ஒரு நூலை வெளியே விடும். அதைக் கொண்டு முழு க் கூட்டையும் கட்டும். ஏதாவது சரியாக வரவில்லை என்றால் அந்த நூலை உள்ளிழுத்துக்கொண்டு மீண்டும் வெளியில் விடும். இதனால் அதன் உடம்பு இளைப்பதோ குண்டாவதோ இல்லை. அதன் இயல்பு மாறாமல் அப்படியே இருக்கும். அதே போல பகவான் தனக்குள்ளிருந்து இப்பிரபஞ்சத்தை வெளியே விடுகிறார். பிறகு மீண்டும் தனக்குள்ளேயே ஒடுக்கிக்கொள்கிறார்.
மனிதன் அன்பினாலோ, வெறுப்பாலோ, பயத்தாலோ எதைப் பற்றி எப்போதும் நினைக்கிறானோ அதன் குணங்கள் அவனுக்கு வந்துவிடும். மெதுவாக அவன் நினைக்கும் பொருளின் உருவத்தை அடைந்துவிடுவான்.
குளவி தான் கட்டும் கூட்டினுள் ஒரு புழுவை அடைத்துவைத்துவிட்டு மூடும்போது அதைக் கொட்டிவிடும். உள்ளிருக்கும் புழு தன்னைக் கொட்டிய குளவியை நினைத்து நினைத்து பயந்துகொண்டே இருக்கும். பின்னர் அதுவும் குளவியாகவே மாறிவிடும். பகவானையே எண்ணிக்கொண்டிருக்கும் பக்தன் பகவத் ஸ்வரூபமாகவே ஆகிவிடுகிறான்.
இவ்வாறு இருபத்து நான்கு ஜீவன் களிடமிருந்து பற்பல பாடங்களைக் கற்றேன்.
வைராக்யத்திற்கும் விவேகத்திற்கும் காரணம் இவ்வுடலே. இதைப் பார்க்கும்போதே இது அழியக்கூடியது என்ற எண்ணம் உண்டாகிறது. அதனால் இவ்வுடல் நானல்ல என்று புரிகிறது. இவ்வுடல் எனக்கானது அல்ல என்றெண்ணும்போது உடல்மீதுள்ள பற்று அழிந்துபோகிறது.
மனைவி, மக்கள், வீடு, செல்வம் என்று சுகத்தை எதிர்பார்த்து இவைகளைப் போஷித்தாலும் முடிவில் அவற்றால் துக்கமே. பற்றினால் அடுத்த பிறவிக்கான விதை விதைக்கப்படுகிறது.
பல மனைவிகள் கொண்ட ஒருவன் அவர்களால் அலைக்கழிக்கப்படுவான். அதுபோல் புலன்கள் மனிதனை அலைக்கழிக்கின்றன. அதனால் அவனது நிம்மதி பறிபோகிறது.
எல்லா ஜீவன்களையும் படைத்த பகவானுக்குத் திருப்தி ஏற்படவில்லை. அதனால் மனிதப் பிறவியை, சிந்தித்து முக்தியடையும் வழியைக் காண்பவனாகப் படைத்து மகிழ்ச்சியடைந்தார்.
இந்த நரஜென்மம் மிகவும் அரிதானது. இது நிலையற்றதென்றாலும் இப்பிறவியில்தான் முயற்சி செய்து ஞானத்தை அடைய இயலும். எந்த ஜந்துவாகப் பிறந்தாலும் சிற்றின்பங்கள் கிடைக்கும். மனிதப்பிறவியால் மட்டுமே பேரின்பத்தின் கதவைத் திறக்க இயலும். எனவே கிடைத்தற்கரிய இம்மானுடப் பிறவியை வீணாக்கலாகாது. நல்ல சமயமிதை நழுவவிடாதே.
இவ்வாறு யதுவிற்கு உபதேசம் செய்தார் தத்தாத்ரேயர். யது மன்னன் அவரை கௌரவித்து வணங்கினான். பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.
என் முன்னோரான யது மஹாராஜா அவரது உபதேசத்தால் பற்றுக்களை நீக்கி ஞானத்தை அடைந்தார் என்று உத்தவரிடம் கூறினான் கண்ணன்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment