கண்ணன் உத்தவனைப் பார்த்து மேலும் கூறத்துவங்கினான்.
உத்தவா என்னையே புகலாகக் கொண்டவன், என்னால் உபதேசிக்கப்பட்ட விஷயங்களை மிகுந்த கவனத்துடன் பின்பற்றவேண்டும். கனவில் காணும் விஷயங்கள் எப்படி பொய்யானவையோ அதுபோல் விழித்திருக்கும் போது காண்பவையும் பொய்யே. ஒன்றேயான பரமாத்மாதான் எல்லாப் பொருள்களிலும் வியாபித்திருக்கிறது.
என்னிடம் நிலைபெற விரும்புபவன் உலகாயத வேலைகளைத் துறந்து ஆன்ம மேம்பாட்டிற்கான பணிகளைச் செய்யவேண்டும். கர்மாவை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபடலாகாது.
என் பக்தன் அஹிம்சை, ஸத்யம், திருடாமை, ப்ரும்மசர்யம், தேவைக்கதிகமாகப் பொருள் சேர்க்காதிருத்தல் ஆகியவற்றைப் பின்பற்றவேண்டும்.
குரு ஸேவை செய்பவன் பொறாமை, அகந்தை, மமதை ஆகியவை இல்லாமல் இடுக்கவேண்டும். திட்டமிட்டுச் செயலாற்றும் தன்மை கொண்டு அதே சமயம் பரபரப்பின்றி இயங்க வேண்டும். எப்போதும் எல்லோரிடத்தும் அன்பு பாராட்டவேண்டும். தத்துவத்தை அறியும் வேட்கையுள்ளவனாக இடுக்கவேண்டும். மனைவி, உற்றார், உறவினர், செல்வம் ஆகியவற்றில் ஒட்டுதலின்றி இருக்கவேண்டும். அவன் தன்னுடைய நலன் போலவே பிறரின் நலனையும் காண்பவன் ஆகிவிடுகிறான்.
ஆத்மா தன்னொளி கொண்டது. எல்லாவற்றிற்கும் சாட்சியாக விளங்குவது. பாஞ்சபௌதிகமான மற்றும் சூக்ஷ்ம உடலினின்று மாறுபட்டது. எரியும் பொருளில் பொருள் வேறு, நெருப்பு வேறு. அதுபோல் ஆத்மா உடலினின்று வேறானது.
இவ்வுடல் மூன்று குணங்களின் கலவை கொண்டு மாயையால் ஆக்கப்பட்டது. பிறப்பும் இறப்புமற்ற ஆன்மாவின் மேல் ஒரு போர்வை போல மாயை மூடியிருக்கிறது.ஞானம் ஏற்பட்டால் இந்த பிரமை அகன்றுவிடும்.
எனவே மற்ற பொருள்களின்மேல் இருக்கும் அபிமானத்தை விட்டொழித்து தனிப்பரம்பொருளாகத் தனக்குள்ளேயே ஒளிந்திருக்கும் ஆன்மாவைக் கண்டுபிடிக்கவேண்டும்.
தூய்மையடைந்த புத்தி, மாயையின் செயல்பாடுகளைச் சரியாக இனம் கண்டு உதறித்தள்ளிவிடும். கட்டை முழுவதும் எரிந்தபின் அக்னி தானே அடங்கும். மாயையின் குணங்களை எரித்தபின் புத்திக்கு விஷயமில்லாமல் போகிறது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment