கண்ணன் மேலும் தொடர்ந்தான்.
பூமியில் வேதிகை அமைத்து ஆராதனம் செய்யலாம். என்னுள் விளங்கும் பரமாத்மாதான் இவ்வுணவை உண்கிறார் என்ற எண்ணத்துடன் உண்பதாலும், எல்லாப் பொருளிலும் விளங்கும் ஜீவன் பரமாத்மாவின் அம்சமே என்ற என்ற எண்ணத்தாலும் சமத்ருஷ்டி உண்டாகும்.
சங்கு சக்ரம் கதை பத்மம், நான்கு திருக்கரங்கள், கொண்ட பகவான் எல்லாப் பொருளிலும் மன அமைதியின் உருவமாக விளங்குகிறார். இவ்வாறு மன ஒருமைப்பாட்டுடன் எந்தக் காரியம் செய்தாலும் அது என்னை வழிபடுவதே ஆகும்.
சொந்த விஷயமான கர்மாக்கள், பொதுச்சேவை அனைத்தையும் என்னிடம் அர்ப்பணமாகச் செய்பவனுக்கு என்னை உணர்தல் எளிது. சாதுக்களுக்கு சேவை செய்வதால் என்னுடைய நினைவு ஏற்படும்.
உத்தவா! பக்தி யோகம், சத்சங்கம் ஆகிய இரண்டு வழிகளைத் தவிர இந்த சம்சாரக்கடலைக் கடக்க வேறு வழியில்லை.
சான்றோர்களின் புகலிடம் நானே.
நான் உனக்கு இன்னுமொரு ரகசியத்தைச் சொல்ல விழைகிறேன். ஏனெனில் நீ எனக்கு மிகவும் அணுக்கமான சேவகன். மேலும் சத்விஷயங்களைக் கேட்பதில் உனக்கு மிகுந்த ஆர்வம் இருக்கிறது.
கவனமாகக் கேள் உத்தவா! யோகம், சாங்க்யம், தர்மம், தவம், தியாகம், விரும்பியதற்காகச் செய்யும் கர்மா, சுய ஒழுக்கம், தட்சிணை (பணம்) ஆகிய எதுவும் என்னைக் கட்டுப்படுத்தாது.
விரதங்கள், நியமங்கள், வேதமந்திரங்கள், ஆசார அனுஷ்டானங்கள் ஆகியவற்றையெல்லாமும் விட என்னை மிகவும் வசப்படுத்துவது ஒன்றுண்டு. அது யாதெனில் சத்சங்கம். மஹான்களின் சேர்க்கை.
கலியுகத்தில் மட்டுமல்ல, நான்கு யுகங்களிலுமே சத்சங்கத்தினால் என்னைச் சுலபமாக அடைந்தவர் பலர். அசுரர்கள், ராட்சஸர்கள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், நாக, சித்த, குஹ்ய, வித்யாதரர்கள், பெண்கள் ஆகியோர் வெவ்வேறு யுகங்களில் சத்சங்கத்தினால் என்னை அடைந்திருக்கிறார்கள்.
வ்ருத்திராசுரன், ப்ரஹ்லாதன், வ்ருஷபர்வா, பலி, பாணாசுரன், மயன், விபீஷணன், சுக்ரீவன், ஹனுமான், ஜாம்பவான், கஜேந்திரன், ஜடாயு, வைசியன், தர்மவியாதன், குப்ஜை, கோபிகைகள், யக்ஞ பத்னிகள், மற்றும் பலரும் சத்சங்கம் வாயிலாக என்னை அடைந்தார்கள்.
கோபிகள், பசுக்கள், மரங்கள், வ்ரஜ பூமியின் மான்கள் முதலிய ஜீவன்கள், இவர்களைத் தவிர மந்த புத்தியுடைய காளியன் முதலிய பாம்புகள் ஆகியவர்கள் பக்தியாலும் ப்ரேம பாவத்தாலும் என்னை அடைந்தார்கள்.
கடும் முயற்சி செய்து யோகம், சாங்க்யம், தானம், விரதம், தவம், வேள்வி, வேத அத்யயனம், சுய ஒழுக்கம், துறவு ஆகியவற்றைப் பழகினாலும் என்னை அடைவது சுலபமன்று. அவற்றால் சித்த சுத்தி ஏற்படும்.
அக்ரூரர் என்னையும் பலராமனையும் மதுராவிற்கு அழைத்துச் சென்றபோது ஆழங்காண இயலாத அன்பினால் கோபிகளின் இதயம் தளும்பியது. என்னுடைய பிரிவால் பாதிக்கப்பட்ட அவர்கள் அதன் பின் என்னைத் தவிர வேறெதையும் நினைக்க இயலாதவர்கள் ஆனார்கள்.
என்னுடன் பல இரவுகள் ராஸக்ரிடையில் ஆழ்ந்திருந்தார்கள். அப்போதெல்லாம் நீண்ட இரவுகள் அவர்களுக்கு நொடி போல் கடந்தன. என்னைப பிரிந்ததும் அவர்களது ஒவ்வொரு நொடிப்பொழுதும் கல்ப காலம் போல் கழிந்தது.
முனிவர்கள் சமாதி நிலையில் உடல் உணர்வை இழந்து என்னுடன் ஒன்றுவார்கள். அதேபோல கோபிகள் ப்ரேமையினால் சரீர உணர்வை இழந்துவிட்டார்கள்.
அவர்கள் என் பரமாத்ம வடிவை முழுமையாக அறிந்தவர்கள் அல்லர். வெறும் அளவுகடந்த ப்ரேமையினால் என்னை அடைந்தார்கள்.
எனவே உத்தவா! இவ்வுலகம், அவ்வுலகம், வாழ்க்கை, கேட்பது, சொல்வது என்ற ஆராய்ச்சிகளை யெல்லாம் விட்டுவிட்டு முழுமையாக ஒன்றிய மனத்துடன் என்னைச் சரணடைவாய். அப்போது உனக்கு எதைப் பற்றியும் பயம் ஏற்படாது. உன் செயல்கள் அனைத்தும் எனதாகிவிடும்.
என்றான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment