ஜ்வர தேவதை கண்ணனிடம் சரணடைந்தது.
எல்லையற்ற சக்தி படைத்த பரம்பொருளே! அனைத்து ஜீவன்களுக்கும் ஆன்மாவாக விளங்குபவரே!
உலகின் தோற்றம், இருப்பு மற்றும் அழிவிற்கும் காரணமான மூலப்பொருள். மாறுபாடற்ற ப்ரும்ம ஸ்வரூபமான தம்மை வணங்குகிறேன்.
தாங்கள் காலரூபியாவீர். நல்வினை தீவினைகளின் பயனை அளிக்க அத்ருஷ்டமாக விளங்குபவர். ஐம்புலன்களின் தன்மை நீரே. பூதங்களின் மூலங்கள், இந்திரியங்கள் பதினொன்று, அவற்றின் மாறுபாடுகள், அவைகளின் கூட்டான உடல், நியாங்களுக்கேற்ற செயல், அவற்றின் விளைவுகள், இவை அனைத்தும் தாங்களே. மாயைகளற்ற எல்லை தாங்களே.
லீலையாகப் பல அவதாரங்கள் செய்து தேவர்கள் மற்றும் நல்லோரைக் காக்கிறீர்கள். உலகத்திற்குத் துன்பம் விளைவிப்பவர்களை அழிக்கிறீர்கள்.
(பரித்ராணாய ஸாதூனாம் - ஸாதுக்களைக் காப்பது முதற்கடைமை, விநாசாய ச துஷ்க்ருதாம் - கேடு விளைவிக்கும் செயல்களைச் செய்வோரை அழிப்பது அடுத்த கடைமைதான்)
அமைதியானதும் ஆனால் உக்ரமானதும் அளப்பரிய சக்திகொண்டதும் தங்களது தேஜஸால் உருவானதுமான ஜ்வரதேவதையால் கடுமையாகத் தாக்கப்பட்டேன். அதனால் மிகவும் துன்பப்படுகிறேன். என்னைக் காத்தருளுங்கள் என்றது.
கண்ணன் நடுங்கிக்கொண்டு நிற்கும் அதைப் பார்த்து
மூன்று தலைகள் கொண்ட ஜ்வர தேவதையே! என்னால் உனக்கு அபயம் அளிக்கப்பட்டது. இந்த உரையாடலையும், நீ செய்த துதியையும் கூறுபவர்களுக்கு உன்னால் துன்பம் நேரக்கூடாது. என்றான்.
கண்ணனை வணங்கி அப்பால் சென்றது அந்த ஜ்வரதேவதை.
கண்ணன் ரதத்தின் மீதேறி பாணனைத் தேடினான்.
பாணாசுரன் அதற்குள் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஆயிரம் கரங்களிலும் பல்வேறு விதமான ஆயுதங்களை ஏந்திக்கொண்டு கண்ணனைத் தாக்க வந்தான்.
கண்ணன் சக்ராயுதத்தை ஏவினான். அது பாணனின் கரங்களை மரத்தை வெட்டுவதுபோல் சடசடவென்று வெட்டத் துவங்கியது.
தன் பக்தன் மீது இரக்கம் கொண்ட சிவன் அங்கு வந்தார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment