கண்ணன் ருக்மிணியின் பவனத்தில் இருந்தபோது ஒரு சமயம் அவளுடன் ஒரு லீலை செய்ய எண்ணினான். ருக்மிணி கண்ணனுக்கிணையான கல்யாண குணங்கள் கொண்டவள். பொறுமையின் கடலாவாள்.
உணவேற்றபின் கண்ணன் ஊஞ்சலில் அமர்ந்திருந்தான். ருக்மிணி தன் தோழிகளுடன் சேர்ந்து பணிவிடைகள் செய்து கொண்டிருந்தாள்.
அந்த பவனம் மலர்கள் பூத்துக்குலுங்கும் தோட்டத்தின் நடுவில் இருந்தது.
தோட்டத்து மலர்களின் நறுமணம் காற்றை நிறைக்க, அகிற்புகை அவற்றோடு போட்டியிட்டுக்கொண்டிருந்தது. சாளரத்தின் வழியே நிலவொளி எட்டிப் பார்த்தது.
தோழியிடமிருந்து சாமரத்தை வாங்கி ருக்மிணி தானே வீசத் துவங்கினாள்.
ஊஞ்சலின் ஆட்டத்திற்கேற்ப முன்னும் பின்னும் அவள் அசைய அவளது காற்சிலம்பின் ஒலி மதுரமாக இசைத்தது. கைவளைகள் சேர்ந்திசை பாடின.
முத்து மாலைகளும் ரத்தினங்கள் ஒளிரும் தங்க ஒட்டியாணமும் அவளது அசைவிற்கு ஈடு கொடுத்தன.
அழகிய திருமுகம், சுருண்ட கேசம், காதுகளில் குண்டலங்கள், கழுத்தில் அட்டிகைகள், கருணை சிந்தும் பார்வை தனக்கேற்ப திருமகள் அவதரித்திருப்பதை எண்ணி மகிழ்ந்தான் கண்ணன். தன்னிடம் மீளாக் காதல் கொண்ட அவளை சொற்களால் சீண்டினான்.
ராஜகுமாரி! உன்னை மணக்க இந்திரன், திக்பாலர்கள் அனைவரும் போட்டிபோட்டனர்.
சிசுபாலன் அரசவம்சத்தினன். அவனுக்காக வாக்கினால் தானம் செய்யப்பட்ட பின்பும் நீ எப்படி இடையனான என்னை விரும்பினாய்?
எங்களைப் பார்த்தாயா? அவர்களுக்கெல்லாம் பயந்து ஓடிவந்து கடலின் நடுவில் நகரம் அமைத்து வாழ்கிறோம். எங்கள் பழக்க வழக்கங்கள் விசித்திரமானவை. உலகோர்க்குப் புரியாதவை.
எங்களை மணந்த பெண்கள் பலர் இவ்வாழ்க்கை முறை புரியாமல் துன்பப்படுகின்றனர்.
செல்வம், குலம், ஆளுமை, அழகு, அந்தஸ்து ஆகியவற்றில் சமமானவர்களே சம்பந்தம் செய்யத் தகுந்தவர்கள். இவற்றில் ஒன்று உயர்வாகவோ தாழ்வாகவோ இருப்பின் திருமணம் பொருந்தாமல் போக வாய்ப்புகள் அதிகம்.
விதர்ப்ப இளவரசியான நீ அதையெல்லாம் அறியாமல், எதிர்காலம் பற்றிச் சிந்திக்காமல் அந்தணர்கள் என்னைப் பற்றிக் கூறிய புகழுரையைக் கேட்டு என்னைக் கணவனாக வரித்தாய் போலும். நீ விரும்பினால் இப்போதே உனக்கேற்ற வீரமான க்ஷத்ரியன் ஒருவனை மணந்துகொள்ளலாம். இதனால் உனக்கு தோஷங்கள் எதுவும் நேராது.
சிசுபாலன், சால்வன், ஜராசந்தன், தந்தவக்த்ரன், உன் அண்ணன் ருக்மி ஆகிய பலம் பொருந்திய அரசர்கள் அனைவரும் என்னைப் பகைவனாக எண்ணுகின்றனர்.
அவர்களின் அகந்தையை அழிக்கவே நான் உன்னை எடுத்துவந்தேன்.
மற்றபடி எனக்கு மனைவி, மக்கள், செல்வம் என்று எதிலும் பற்றில்லை. எல்லாவற்றிற்கும் சாட்சியாக விளங்குகிறேன். ஆத்மாவில் ரமிப்பவன். என்னால் உனக்கு என்ன மகிழ்ச்சி ஏற்பட்டுவிடப்போகிறது. உன் அருமைகள் தெரிந்து ரசித்து உன்னைக் கொண்டாடத் தெரியாதவன் நான்.
இவ்வாறாக கண்ணன் பேசிக்கொண்டே போனான்.
ஆயிரமாயிரம் மனைவியர் இருப்பினும் தன் மீது ஒரு தனித்த அன்புடையவன் கண்ணன் என்று எண்ணியிருந்தாள் ருக்மிணி. கண்ணனிடமிருந்து வந்த அன்பற்ற சொற்களைக் கேட்டு அந்தோ என்று அலறினாள்.
அவளது கண்ணீரால் கண்மையும் குங்குமமும் கரைந்து அவள் அணிந்திருந்த வெண்பட்டு கறையாயிற்று. கைவளைகள் நழுவி விழுந்தன. உடல் தளர்ந்து போய்க் கீழே விழுந்தாள்.
ஊஞ்சலிலிருந்து குதித்த கண்ணன் அவள் தரையில் விழுமுன் கரங்களில் ஏந்தினான்.
அவளது கண்ணீரைத் தன் திருக்கரங்களால் துடைத்தான். கலைந்துபோயிருந்த தலையை அழகாக வாரிமுடிந்துவிட்டு புதிய மலர்களைச் சூட்டினான்.
சமாதானம் செய்யும் கலையில் தலைசிறந்தவனான கண்ணன் அவளைத் தன்னுடன் ஊஞ்சலில் அமர்த்திக்கொண்டு பேசத் துவங்கினான்.
நான் விளையாட்டுக்காகச் சொன்னேன் ருக்மிணீ! உன் இனிய குரலில் நீ ஏதாவது பதிலிறுப்பாய் என்று எதிர்பார்த்தேன். இப்படித் தளர்ந்துபோகலாமா? என்னை அறியாதவளா நீ..
என்றான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment