கண்ணன் சொன்ன ஒவ்வொரு விஷயத்திற்கும் பதில் கூறினாள் ருக்மிணி.
எங்கும் நீக்கமற நிறைந்துள்ள தங்களை ஞானிகளும் ஸாதுக்களும் விரும்புகின்றனர். என்னை எவரோ விரும்புவதாகச் சொன்னீர்களே அவர்கள் அனைவரும் அறிவிலிகள்.
எல்லோரிடமும் பகை கொண்டு கடலின் நடுவில் குடியிருப்பதாகச் சொன்னீர்கள். அவ்வரசர்கள் அனைவரும் முக்குணங்களால் பாதிக்கப்பட்டு ஐம்புலன்களின் அடிமைகளாக விளங்குபவர்கள். தாங்களோ தூய சைதன்ய வடிவமாவீர். ஐம்பொறிகளுக்காட்பட்டவர்கள் தங்கள் ஸ்வரூபத்தில் எப்படி நட்பு பாராட்டுவார்கள்? அவர்கள் தம்மைப் பகையாகத்தானே நினைப்பார்கள்?
தங்கள் பக்தர்களே அரசு கட்டிலைத் துறந்து வனம் செல்லும்போது தாங்கள் அரச பதவியைத் துறப்பதில் என்ன வியப்பு?
உங்களது செயல்பாடுகள் யாருக்கும் புரியாதென்று கூறினீர்கள். நீங்கள் மற்றும் தங்கள் அடியவர்களின் நடைமுறைகள் எப்போதும் உலக நெறிக்கு மாறுபட்டதே. தங்களை எவரால் உணர இயலும்?
தாங்கள் காலஸ்வரூபன் மட்டுமல்ல உயிர் போகும் நேரத்தில் நினைத்தால் பிறவிச் சங்கிலியையே அறுப்பீர்கள் என்பதையும் அறியாதவர்கள் அவர்கள்.
நான்கு விதமான புருஷார்த்தங்களையும் தரவல்ல தங்களை அடையவிரும்புபவர் அனைத்தையும் தியாகம் செய்கின்றனர். சிற்றின்பத்தில் உழல்பவர்க்குத் தாம் எட்டாக்கனியாவீர்.
தம்மைத் துன்புறுத்துபவரையும் காக்கும் தன்மை கொண்ட தங்கள் கருணையை முனிவர்கள் பாராட்டுகின்றனர். அத்தனை தேவர்களும் திக்பாலர்களும் தமது புருவ அசைவிற்கேற்ப செயல்படுகிறார்கள் என்பதை அறிந்தே உங்களைக் கணவராக வரித்தேன்.
மற்ற அரசர்களிடம் பயந்து போய் கடலைச் சரணடைந்ததாகச் சொல்வது பொருந்தவில்லை. ஏனெனில் அவர்கள் அனைவரையும் சிதறடித்து வென்ற பின்பே என்னை அழைத்துவந்தீர்.
உங்களைத் தஞ்சமடைந்தவர் அனைவரும் துன்பக்கடலிலிருந்து கரையேறிவிடுகின்றனர் என்பதே உண்மையாகும்.
நிலையான சுகத்தை வழங்க வல்ல தங்களைவிட்டு எந்தப் பெண்ணாவது பிறப்பு, இறப்பு, நோய், மூப்பு ஆகியவற்றில் பயம் கொண்டவனைக் காதலிப்பாளா?
அனைத்துலகிற்கும் ஈசனாகவும், ஆன்மாவாகவும் திகழும் தாங்களே எனக்கு அத்தனை பிறவிகளிலும் புகலாக அமைய வேண்டுகிறேன்.
ருக்மிணிக்காக தவம் கிடந்த அரசர்களின் பெருமைகளைக் கண்ணன் வர்ணித்தான். அதைக் கேட்டு சற்றே வெறுப்புடன் பதிலுரைத்தாள் ருக்மிணி.
கழுதைபோல் கர்மப் பொதி சுமப்பவர்களும், எருதுகள் போல் தங்களது சிந்தனையே இல்லாமல் வேலை செய்து மடிபவர்களும், நாய்களைப் போல் எஜமானன் இட்ட வேலையைச் செய்பவர்களும், பூனைகள்போல் அவர்கள் தின்ற எச்சிற்சோற்றை உண்பவர்களும்,
வஞ்சனையுடையவர்களும், பெண்ணடிமைகளும், தங்களது திருவடி மகிமைகளைச் செவியுறாத பெண்களின் கணவர்களாகட்டும்.
தோலும் மீசையும், நகமும், முடியும் மறைக்க உள்ளே மாமிசமும், குருதியும், புழுக்களும் மலமும், கபமும் பித்தமும் வாதமும் கொண்ட உயிருள்ள நடைபிணத்தை ஆணழகன் என்று நினைப்பவள் மதிகெட்டவள். சாஸ்வத சுகத்தை அறியாதவள்.
நீங்கள் என் ஆன்மாவை ரசிப்பவர். என் தோற்றத்தை நோக்காதவர். அனைவரிடமும் சமமாகப் பழகுபவர். உம்மிடம் எனது பற்று இன்னும் ஆழ்ந்துவிளங்கட்டும்.
நீங்கள் என்னை வேறு கணவனை நாடிச் செல்லலாம் என்று கூறியதை நான் தவறாக எண்ணவில்லை. இப்போதைய காலம் அவ்வாறிருக்கிறது. காசிராஜனின் பெண்ணான அம்பை சால்வனிடம் ஆசை கொண்டாள். தாங்கள் என்னை அவ்வாறு எண்ணலாகாது.
திருமணமான பின்பும் சில பெண்டிருக்கு வேறு ஆடவன் மீது இச்சை வருமாயின் அவளை ஏற்பவனுக்கு நிம்மதி இருக்காது.
இவற்றைக் கேட்ட கண்ணன் நெகிழ்ந்துபோனான்.
கற்பகத்தருவே! நீ உயர்ந்த பேச்சுக்களைப் பேசக்கூடியவள் என்பதை அறிவேன். உனது பவளவாய் திறந்து பேசிக் கேட்கவே கேலி செய்தேன். நீ எதையெல்லாம் விரும்புகிறாயோ அவையனைத்தையும் உனக்குத் தந்தேன். நீ விரும்புபவை அனைத்தும் உன்னைக் காமத்தில் தள்ளாமல் என்னிடம் பக்தி அதிகரிக்கச் செய்யும்.
உனது அன்பையும் கற்பையும் நன்கறிவேன் திருமகளே. நீ என்னிடம் கொண்ட ஈடுபாட்டினால் ஸம்ஸாரத் தளைகள் உன்னை ஒன்றும் செய்யாது. உனதன்பு தன்னிகரற்றது. உன்னைப்போல் ஒரு மனைவியை இதுவரை காணவில்லை. என் புகழை மட்டுமே கேட்டு என்னை மணக்க விரும்பினாய் நீ.
உன் சகோதரனை அவமதித்ததையும், அநிருத்தனின் திருமணத்தில் வீண் தகறாறு செய்த அவனை பலராமன் கொன்றதையும் நீ என்னோடு பிரிவு நேருமோ என்ற அச்சத்தால் பொறுத்தாய். பிறந்தவீட்டுப் பாசத்தை எனக்காகப் பொறுத்தாய். உனக்குக் கைம்மாறு செய்யும் வகையறியேன்.
என்று பலவாறு சமாதனம் செய்தான் கண்ணன்.
இவ்வாறு பலவாறான கேலிப் பேச்சுகளும் ஊடல்களும் சமாதானங்களுமாக கண்ணன் மற்றும் ருக்மிணியின் வாழ்க்கை ஆனந்தமயமாக விளங்கியது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment