Wednesday, June 10, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 486

தன் மீது விழுந்த அபாண்டமான பழியைத் துடைக்க கண்ணனே செயலில் இறங்கினான்.

நகர மக்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு ப்ரசேனனைத் தேடிச் சென்றான்.

காட்டில் சற்று தூரம் சென்றதும், ப்ரசேனனின் உடலும், குதிரையின் உடலும் கிடைத்தன. அவர்கள் மீதிருந்த காயங்களைக் கொண்டு சிங்கத்தால் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று அறிந்தனர்.

மேலும் ஆங்காங்கு தெரிந்த சிங்கத்தின் காலடிகளைத் தொடர்ந்து அத்திசையில் சென்றார்கள்.

வழியில் ஒரு மலை எதிர்ப்பட்டது. மலை மீது சிறிது தூரம் ஏறியதும் ஒரு  சிங்கம் இறந்து கிடந்ததைக் கண்டனர். அதன் அருகில் பெரிய கரடியின் காற்சுவடுகள் தென்பட்டன.

அவற்றைப் பின்பற்றிக்கொண்டு அனைவரும் போனார்கள். அது ஒரு குகையில் சென்று முடிந்தது. குகைக்குள் மிகவும் இருட்டாக இருந்ததால் மக்கள் உள்ளே செல்ல அஞ்சினர். கண்ணன் அவர்களை குகை வாசலிலேயே இருக்கும்படி பணித்துவிட்டுத் தான் மட்டும் உள்ளே சென்றான்.

இருட்டான அந்த குகைக்குள் சிறிது தூரம் சென்றதும் உள்ளே பெரிய அறை போல் விரிந்தது. அவ்வறையில் ஒரு ப்ரகாசம் இருந்தது.

உற்று கவனித்ததில் அறையின் நடுவிலிருந்த தொட்டிலில் ஸ்யமந்தக மணி கட்டப்பட்டிருந்தது. அதன் ஒளியே குகையை நிறைத்திருந்தது. 

தொட்டிலில் இருந்த குழந்தைய ஒரு பெண் பார்த்துக்கொண்டிருந்தாள்.

திடீரென குகைக்குள்‌ ஒரு ஆடவன் நுழைவதைப் பார்த்ததும் பயந்துபோய் அப்பா என்று அலறினாள்.

அவளது அலறலைக் கேட்ட ஜாம்பவான் ஓடிவந்தார்.

முந்தைய அவதாரத்தில் ராமனுக்கு ஆலோசனைகள் சொன்ன அதே ஜாம்பவான்தான். யுகங்கள் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவருக்குக் கண்ணனை அடையாளம் தெரியவில்லை. அதுவும் கண்ணனின் மாயையே. யாரோ மனிதன் என்றெண்ணி தாக்கத் துவங்கினார்.

ஒருவரையொருவர் வெல்லும் எண்ணத்துடன் படு பயங்கரமாகத் தாக்கிக்கொண்டார்கள்.

இருபத்தெட்டு நாள்களுக்கு இரவு பகல் பாராமல் சண்டை தொடர்ந்தது. குகைக்கு வெளியே நின்றிருந்த மக்கள் கண்ணனுக்கு ஏதோ ஆபத்தென்று அஞ்சி புலம்பிக்கொண்டிருந்தனர்.

கண்ணனின் அடி தாங்காமல் ஜாம்பவானுக்கு உடல் முழுவதும் உள்ள எலும்புகள் நொறுங்க ஆரம்பித்தன.

பெருவலிமை பொருந்திய தன்னை ஒரு சாதாரண மனிதனால் இவ்வாறு அடிக்க இயலாதென்று ஐயம் கொண்டார்.

சற்று நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவராக
கண்ணனை வணங்கினார்.

அனைத்து உயிர்களின் மனம் மற்றும் உடல் வலிமை அனைத்தும் தாங்களே என்றெண்ணுகிறேன். தாங்கள் உயிர்களைக் காக்கும் பரம்பொருளாகத்தான் இருக்கவேண்டும்.

சிறிது கோபம் கொண்டு கண்கள் சிவந்ததற்கே ஸமுத்ரராஜன் நடுநடுங்கி கலங்கிப்போய் தன்னைக் கடக்க வழி தந்தான். அவன் மீது சேதுபாலம் கட்டப்பட்டது. எண்ணற்ற ராக்ஷஸர்கள் அம்புகளால் வீழ்த்தப் பட்டனர். அத்தகைய வலிமை பொருந்திய ஸ்ரீ ராமச்சந்திரப்ரபு தாங்களே. வேறு உருவில் வந்து என்னை வஞ்சிக்காமல், அருள் புரியுங்கள்.

கண்ணனின் அழகுத் திருமேனியின் காட்சி கண்ட பின்னரும் ஒருவர் ராமனை நினைவு கூர்வார் என்றால் அவருக்கு ராமன் மீது எத்தகைய பக்தி இருக்கவேண்டும்.

கண்ணன் கருணையோடு அவரருகில் வந்தான். தன் மங்கலமான அமுதக் கரத்தால் கரடியரசனைத் தடவிக் கொடுத்தான். அவரது காயங்களும் வலிகளும் பறந்தன.

இடிபோன்ற குரலில் கம்பீரமாகப் பேசினான்.
நான் இப்போது யதுகுலத்தில் கண்ணனாக அவதரித்திருக்கிறேன். இந்த ஸ்யமந்தக மணியால் எனக்கு வீண்பழி ஏற்பட்டுவிட்டது. அதைப்போக்கிக் கொள்வதற்காக மணியைத் தேடி என் மக்களுடன் இந்த குகைக்கு வந்தேன்.

என்றான்.

ஜாம்பவான் அடடா..
என் ஸ்வாமியான உங்களைப் போய் அடித்துவிட்டேனே என்று மிகவும் வருந்தினார். பச்சாதாபப்பட்டார்.

மணியைக் கண்ணனிடம் திருப்பிக் கொடுத்தும் அவரது மனம் ஆறவில்லை. அழகே உருவான தன் மகளை அழைத்தார்.
இவள் பெயர் ஜாம்பவதி. இவளைத் தங்கள் மனைவியாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வேண்டினார்.

கண்ணன் சம்மதிக்க அக்கணமே குகைக்குள் இருவருக்கும் விவாஹம் நடைபெற்றது.

குகைக்கு வெளியே காத்திருந்த மக்கள் பன்னிரண்டு நாள்கள் கழித்து கண்ணன் இறந்துவிட்டான் என்று முடிவு செய்து ஊருக்குத் திரும்பி விட்டனர்.

ஆனால் கண்ணனுக்கு ஆபத்து நேர வாய்ப்பில்லை என்றும் ஒரு பக்கம் நம்பிக்கை இருந்ததால் மஹாமாயையான துர்கையை விமரிசையாக வழிபாடுகள் செய்து கண்ணன் திரும்பி வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.

கண்ணனின் உறவினர்களும் ருக்மிணியும் அழுது புலம்பினார்கள்.

அனைவரின் துயரையும் துடைக்கும் வண்ணம், கண்ணன் புது மனைவியான ஜாம்பவதியுடனும் ஸ்மந்தக மணியுடனும் நகரத்தின் எல்லையில் வந்து நின்றான்.

கண்ணன் வந்துவிட்ட விஷயம் காற்றாய்ப் பரவ, ஊரே விழாக்கோலம் பூண்டது. 

ஓடோடி வந்து அனைவரும் வரவேற்றனர். தேரிலேறி ஊர்வலமாக அரண்மனை வந்து சேர்ந்தான் கண்ணன்.

பின்னர், ஸத்ராஜித்தை சபைக்கு  அழைத்து அனைவர் முன்னிலையிலும் நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறினான். ஊர் மக்கள் கண்ணனுக்கு சாட்சியாய் நிற்க ஸ்யமந்தகமணியை ஸத்ராஜித்திடமே ஒப்படைத்தான் கண்ணன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment