இடைச் சிறுவர்கள் நாகரீகமான உடை வேண்டுமென்று கண்ணனிடம் கேட்டனர்.
அப்போது எதிரே ஒரு வண்ணான் வந்து கொண்டிருந்தான். பல்வேறு அரச உடைகளைத் துவைத்து சாயமேற்றி, அழகுறச் செய்து எடுத்து வந்து கொண்டிருந்தான்.
கண்ணன் அவனெதிரே போய் நின்றான். தன் தாமரைக் கண்களால் அவனை முழுவதுமாகக் கண்களால் அளந்தான். என்னே! அவனது பாக்யம்!
பின்னர், ஐயா! உமக்குப் பெரு நன்மை உண்டாகும். எங்கள் அனைவர்க்கும் நல்ல ஆடைகளைக் கொடுக்க இயலுமா? என்று கேட்டான்.
எங்கும் நிரம்பிய வஸ்துவான கண்ணன் வேண்டிக் கேட்க, அரசனின் பணியாளான அவ்வண்ணானுக்கோ அகங்காரம் தலைக்கு மேல் இருந்தது.
கொடுத்திருக்கலாம் அல்லது இல்லையென்று தன்மையாகச் சொல்லியிருக்கலாம்.
அவன் செய்த நற்செயல்களின் பயனால் மிகுந்த கோபத்துடன் கன்ணனை ஏசத் துவங்கினான்.
மலையிலும் காட்டிலும் சுற்றும் பரதேசிகளான உங்களுக்கு அரச உடைகள் கேட்குதோ. சிறுபிள்ளைகள் என்று விடுகிறேன். உயிர் மீது ஆசையிருந்தால் பேசாமல் தள்ளிப் போங்கள். அரசரைச் சார்ந்தவரிடம் முறை தவறி நடந்தால் சிறைவாசம்தான். உங்களின் சொத்துக்களும் பறிக்கப்படும்.
என்றான்.
அவனுடைய பிதற்றலைக் கேட்டு கண்ணன் விளையாட்டாக நகத்தினாலேயே அவன் தலையைக் கிள்ளிப் போட்டான். நட்டநடு கடைவீதியில் அனைவரும் பார்க்க தலைமை வண்ணான் தலையற்று வீழ்ந்தது கண்டு அவனுடைய உதவியாளர்களும் மற்ற வண்ணான்களும் கைகளிலிருந்த துணி மூட்டைகளை அப்படியே போட்டுவிட்டுச் சிதறி ஓடினர்.
கண்ணன் தனக்குப் பிடித்த ஆடைகளான புதிய மஞ்சள் பட்டாடையையும், சிவப்பு உத்தரீயத்தையும், அழகிய வேலைப்பாடுள்ள முத்தங்கியையும் எடுத்து அணிந்துகொண்டான்.
பலராமனும் தனக்குப் பிடித்த நீலப்பட்டாடை, மஞ்சள் உத்தரீயம் மற்றும் ஒரு முத்தங்கியை எடுத்து உடுத்தினான். மற்ற சிறுவர்களும் அவரவர்க்கு விருப்பமான உடைகளை நாம் துணிக்கடைகளில் தேர்வு செய்வதுபோல் தேர்ந்தெடுத்தனர்.
மீதியை அங்கேயே ஒரு ஓரமாகக் கீழே போட்டனர்.
ஆனால், பாவம் அவர்களுக்கு உடைகள் பொருத்தமான அளவில் இல்லை. உடலைப் பிடிக்குமாறோ அல்லது தளர்வாகவோ இருந்தன.
அவற்றைப் போட்டுக்கொண்டு தசாபுசாவென்று குட்டியானைகளைப்போல் கைகளை வீசி வீசி நடந்தனர். பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது.
அங்கிருந்த ஒரு தையல்காரர் அவர்களைத் தாமாகவே அழைத்து அனைவரின் உடைகளையும் அவரவரின் அளவிற்கேற்ப சரி செய்து தைத்துக்கொடுத்தார். கச்சிதமான உடைகளில் அனைவரும் மிகவும் அழகாக விளங்கினர்.
தன் தோழர்களுக்கும் தையல்காரர் உதவி செய்ததைக் கண்ட
கண்ணன் கேட்காமலே பல நன்மைகளை அருள்புரிந்தான்.
பெருஞ்செல்வம், வலிமை, புலன்களின் கூர்மை, தன்மீது பக்தி, இறுதியில் சாரூப்ய முக்தி ஆகிய அரிய வரங்கள் அவருக்குக் கிடைத்தன.
ராஜ மிடுக்குடன் தோழர்கள் புடைசூழ மதுரா நகரின் வீதிகளில் கண்ணன் மீண்டும் உலாவத் துவங்கினான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment