Saturday, April 11, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 428

வைகுண்டத்திலும் கிட்டாத லீலைகளும்,  நாமஸ்மரணமும், ஸத்சங்கமும் கோகுலத்தில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவ்வேளையில் ஒரு நாள் அரிஷ்டன் என்ற அசுரன் கோகுலத்தில் புகுந்தான். பெரிய திமிலுடன் காளை உருவத்தில் பயங்கரமாக  உறுமினான். பூமியைக் குளம்புகளால் கீறிக்கொண்டும், கொம்பினால்‌ தரையைக்  குத்திக்கொண்டும் திமுதிமுவென்று ஓடிவந்தான். அவன் வந்த வேகத்திற்கு வானளாவ புழுதி கிளம்பியது.

ஆங்காங்கு சிறுநீரும் சாணமும் போட்டுக்கொண்டு வாலைத் தூக்கிக்கொண்டு இமை கொட்டாமல்‌ வெறித்துப் பார்த்தான். அவனது உறுமலைக் கேட்ட கோபியர்க்குக் குலை நடுங்கிற்று. 
அனைவரும் பயந்து நடுங்கினர்.

பசுக்கள் மிரண்டுபோய்க் கத்திக்கொண்டு கொட்டிலை விட்டு ஓடின.

அனைவரும் கண்ணா கண்ணா என்று குரலெழுப்பிக்கொண்டு கண்ணனை நோக்கி ஓடிவந்தனர்.

கண்ணன் அவர்களைப் பார்த்து பயப்படாதீர்கள் என்று அபயக்குரல் கொடுத்தான். பின்னர், முன்னால் வந்து அந்த அசுரனைத் தன்னை நோக்கி வாவென்றழைத்தான்.

இப்படி அவன் அழைக்க ஈரேழுலோகத்தாரும் ஏங்கிக்கொண்டிருக்க அசுரனுக்கடித்தது யோகம்.‌

ஹே! மூடனே! ஏன் அப்பாவிகளை பயமுறுத்துகிறாய்? அதனால் உனக்கு ஆவதென்ன? உன் கொழுப்பை அடக்கும் எதிரி இதோ நான் இருக்கிறேன். என்னை நோக்கி வா 

என்று கூறி, தன் தோள்களைத் தட்டினான். 

அந்த ஒலியால் அரிஷ்டனுக்குக் கடுங்கோபம் உண்டாயிற்று. 

வேண்டுமென்றே ஒரு புன்சிரிப்புடன் ஒயிலாக நண்பனின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு நின்றான் கண்ணன். அதைக் கண்டு அரிஷ்டன் வாலைத்தூக்கி மேகங்களைச் சுழற்றி அடித்தான். காது ஜவ்வுகள் கிழிவது போல் நாராசமாக உருமிக்கொண்டு கொம்புகளை முன்னே நீட்டிக்கொண்டு கண்ணனை நோக்கி இந்திரனின் வஜ்ராயுதம் போல் வேகமாக ஓடிவந்தான்.

கண்ணன் அவனது கொம்புகளை லாவகமாகப் பிடித்து அவனை நிறுத்தினான். பின்னர் ஒரு யானை இன்னொரு யானையைத் தள்ளுவதுபோல் 18 அடிகள் தூரம் அவனைப் பின்னே தள்ளினான்.

பின்னால் சென்று நிலைகுலைந்து விழுந்த அரிஷ்டன், விழுந்த வேகத்தில் எழுந்து பெருமூச்சுடன் கண்ணனை நோக்கிப் பாய்ந்து வந்தான்.

அவனை மீண்டும் பிடித்து அவன் கொம்புகளை ஈரத்துணியைப்‌ பிழிவதுபோல் பிழிந்து பிடுங்கினான் கண்ணன். அந்தக் கொம்புகளாலேயே அரிஷ்டனைக் குத்திக் கொன்றான்.

குருதியைக் கக்கிக்கொண்டு, கால்களை உதறி, கண்கள் நிலைகுத்த பெரும் மரண ஓலத்துடன் கண்ணனைப் பார்த்துக்கொண்டே உயிரை விட்ட அரிஷ்டன் கண்ணனையே அடைந்தான். 

தேவர்கள் பூமாரி பெய்து துதித்தனர். கண்ணன் பிறந்ததிலிருந்து  தினந்தோறும் ஒரு அதிசய லீலையோ, அசுர வதமோ ‌நடப்பதால் தேவர்கள் அனைவரும் கோகுலத்தின் மேலேயே குழுமியிருந்தனர். எப்போதும் பூமாரி பொழியவும், வாத்யங்களை முழங்கிக்கொண்டு பாடவும் தயார் நிலையிலேயே இருக்கவேண்டியதாயிற்று.

மாபெரும் வீரனைப்போல் காளையைக் கொன்ற கண்ணனைக் கோகுலவாசிகள் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தனர். கண்ணனின் காட்சி அலுக்குமா என்ன?  கண்களுக்குப் பெருவிருந்தல்லவா நம் கண்ணன்?

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.



No comments:

Post a Comment