Thursday, April 2, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 422

பரீக்ஷித் ஸ்ரீ சுகரைக் கேட்டான்

ரிஷியே! அறநெறிகளை வகுத்தவர் இறைவனே. அப்படியிருக்க அவற்றை மீறும் வகையில் அவர் பிறர் மனைவிகளை எவ்வாறு மகிழ்விக்கலானார்? இது எப்படி தர்மமாகும்? தயை கூர்ந்து சொல்லுங்கள் என்றான்.

ஸ்ரீ சுகர் கூறலானார்

நெருப்பில் விழும் பொருளின் தோஷம் நெருப்பைப் பாதிக்காது. அதுபோல் பூரண வஸ்துவான பகவானை தர்மம் அதர்மம் என்ற விஷயங்கள் பாதிப்பதில்லை. 

விஷத்தை உண்டால் அழிவு. உண்ணக்கூடாது. தெரிந்தே உண்டால் உயிர் போகும். ஆத்மஹத்தி மஹாபாபம். விஷத்தின் தோஷம் பரமேஸ்வரனைத் தாக்காது என்பது அவருக்குத் தெரியுமல்லவா? அதனால்தானே உண்டார். அதுபோலத்தான் இதுவும்.

பகவான் சொல்வது அனைத்தும் தர்மமே. அதைப் பின்பற்றவேண்டும். ஆனால் அவரது செயலைப் பின்பற்றமுடியாது. ஏனெனில் அது நம்மாலாகாத விஷயம். 

விலங்குகளின் அறிவு, செயல்பாடுகளுக்கு ஒரு வரையறை உண்டு. அவற்றால் அதை மீற இயலாது. அதே போல் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் கூட அவரவர் நிலையில் சக்தி, அறிவு, செயல்பாடுகள் ஆகியவற்றில் வரையறை உண்டு. அதைத் தாண்டி அவர்களால் செயல்பட இயலாது. 

வரைமுறையே இல்லாதது தெய்வம். அது தன் இயல்பைத் தொலைக்காமல், மனம் மயங்காமல் ஆத்மானுபவத்தில் திளைப்பதால் கர்மாக்களுக்கு பலன் இல்லை. நற்செயலால் நன்மையோ, தீயசெயலால் தீமையோ ஞானிக்கு இல்லை.

சித்தம் அழிந்த ஞானிக்கே கர்மபலன் ஒட்டுவதில்லை என்னும்போது இறைவனுக்கேது கர்மபலன்?

மேலும் கோபியர்கள் கண்ணனைக் காணக் கிளம்பி வந்தபோதிலும் அவர்கள் இல்லாததை அவர்களது குடும்பத்தினர் உணரவே இல்லை. அவர்கள் வீட்டிலிருப்பதாகவே நினைத்தனர்.  எனில் அவர்களும் பூத சரீரத்தை வீட்டில் விட்டு,  யோக சரீரம் எடுத்துக்கொண்டு வந்தார்கள் என்று கொள்ளலாம். ஒரு கோபி வர இயலவில்லையென்று அக்கணமே இறைவனை தியானித்து சரீரத்தை விட்டு முக்தியடைந்தாள் என்றும் பார்த்தோம். கண்ணனுக்கு மட்டுமல்ல, கோபியருக்குமே கணவனைத் தவிர இன்னொருவனை நினைத்த தோஷம் இல்லை. 

விடிவோரை வந்ததும் கோபிகள் திரும்பிச் செல்ல மனமில்லாவிடினும், கண்ணனின் ஆணையால்  வீடு திரும்பினர்.

இந்த ராஸத்தை சொல்பவரும் கேட்பவரும் பகவானின் மேல் பக்தி பெறுவர். அவர்கள் உள்ளத்திலிருக்கும் காமம் அழியும்.

இந்த ராஸலீலை ஐந்து அத்யாயங்களில் விவரிக்கப்படுகிறது. அவற்றை ராஸபஞ்சத்யாயீ என்று அழைக்கின்றனர்.

காஞ்சி மஹா ஸ்வாமிகள் ஒருமுறை சொல்லும்போது, ராஸபஞ்சத்யாயியை பலகோடி ஜென்மாக்களில் பாராயணம் செய்ததாலேயே எனக்கு இப்போது சன்யாஸ ஜென்மா கிடைத்திருக்கிறது என்றார். எனில் அதன் மகிமையை உணரலாம்.

ராஸத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து 
ஸம்ப்ரதாய பஜனையிலும் அதைப் புகுத்தியிருக்கிறார் மருதாநல்லூர் ஸ்ரீ ஸத்குரு ஸ்வாமிகள். 

இறைவனைப் பாடிக்கொண்டே ஆடுவர். நடுவில் அவன் மறைந்ததை உணர்ந்தும் விதமாக அனைவரும் வட்டமாக அமர்ந்து கோபிகா கீதம் பாடுவர். கோபிகா கீதத்தின் முடிவில் இறைவன் ஆவிர்பவிக்கும் ஸ்லோகத்தைப் பாடி அனைவரும் எழுந்து நிற்பர்.

பின்னர், கண்ணனுடன் இணைந்து கோலாட்டம், கும்மி, ராஸ லீலை பாடல்களைப் பாடி ஆடுவர். 

இவ்வாறு மிக அழகாக ராஸத்தை பஜனை பத்ததில் வடிவமைத்துள்ளார் ஸ்ரீ ஸத்குரு ஸ்வாமிகள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment