கண்ணனின் பேச்சில் சமாதானம் அடைந்த கோபியர் அனைவரும் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.
அவர்கள் வட்டமாக நிற்க நடுவில் நின்றுகொண்டு சிறிது நேரம் குழலூதினான். பின்னர் இரண்டிரண்டு கோபியரின் நடுவே ஒரு கண்ணனாக உருக்கொண்டான்.
ராஸநடனம் துவங்கிற்று.
இரண்டு கோபிகளின் கழுத்தில் கையைப் போட்டுக்கொண்டு நின்றான்.
ஒவ்வொரு கோபியும் தன் பக்கத்தில் கண்ணனைக் கண்டாள்.
அதைக் காண தேவர்கள் அனைவரும் வானில் கூடினர்.
துந்துபிகள் முழங்க, பூமாரி பொழிய, கந்தர்வர்கள் பாடினர். தங்கமாலையில் பொன் மணிகளுக்கிடையே ரத்தினம் பதித்தாற்போல் தங்கமயமான கோபிகளுக்கிடையில் நீலமணியான கண்ணன் விளங்கினான்.
கோபிகள் ஒன்று சேர்ந்து மிக இனிமையாக கண்ணனின் லீலைகளைப் பாடிக்கொண்டே ஆடினர்.
அவ்வினிய நாதம் உலகைச் சூழ்ந்தது.
தாளம் தப்பாமல் ஒருத்தி ஸ்வரஜதியைப் பாட கண்ணன் பாராட்டினான். இன்னொருத்தி அதே ஸ்வர ஜதியை துருவதாளத்தில் இன்னும் அழகாகப் பாட கண்ணன் அவளுக்கு வெகுமதியாக முத்தமிட்டான்.
ஒவ்வொரு கோபியும் தன்னருகே இருந்த கண்ணனைத் தங்கள் விருப்பம்போல் அனுபவித்தனர். தங்கள் அருகில்தான் கண்ணன் இருப்பதாக எண்ணினர்.
சிறு குழந்தை நிழலுடன் விளையாடுவதுபோல் ஆத்மாராமனான கண்ணன் தன்னுடைய ஸ்வரூபங்களுடனேயே விளையாடினான்.
தேவர்கள் அனைவரும் மயங்கி அசையா நின்றனர். சந்திரனும் அசையவில்லை.
வெகுநேரம் கோபிகளுடன் நடனமாடிய கண்ணன், அவர்களின் சிரமம் தீர அவர்களை அமரவைத்து வியர்வையைத் துடைத்து விட்டுப் பணி செய்தான். பின்னர் களைப்பு தீர நீராடுவதற்காக அத்தனை பெண்களையும் அழைத்துக்கொண்டு யமுனையில் இறங்கினான். எத்தனை கோபிகளோ அத்தனை கண்ணன். நீரில் இறங்கி ஆண்யானை தன் கூட்டத்தோடு விளையாடுவதுபோல் ஜலக்ரீடை செய்தான். ஒருவர் மீது ஒருவர் நீரை வாரியடித்து வெகு நேரம் விளையாடினர்.
நீர் விளையாட்டு முடிந்து கரையிலேறி மீண்டும் யமுனைக்கரையிலிருந்த மலர்வனங்களில் விளையாடினான் கண்ணன்.
அன்பால் தன்னுடன் இணைந்த கோபிகளின் விருப்பத்தை நிறைவு செய்த கண்ணன் தான் காமவயப்படவில்லை. அதனாலேயே இந்த ராஸக்ரீடை காமஜெயம் என்னும் பெயருடன் விளங்குகிறது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment