பகவான் சங்கரர் ஸதீதேவியை தக்ஷன் நடத்தும் யாகத்திற்குப் போகவேண்டாம் என்று சொல்லி அதற்குப் பல்வேறு காரணங்களையும் சொல்லி நிறுத்திக்கொண்டார்.
ஆனால், ஸதீதேவியின் மனம் ஊசலாடியது. வெளியில் போவதும் அவர் என்ன நினைப்பாரோ என்று உள்ளே வருவதுமாக அலைந்தாள்.
தன் உறவினரைப் பார்க்கப் போகவேண்டாம் என்ற பரமேஸ்வரன் மீது கோபம் கொண்டாள். அவள் உடல் நடுங்கியது. மனம் கலங்கிய தேவி, அன்பினால் தன் திருமேனியில் பாதி அளித்த சிவனை விட்டுப் பிரிந்து பிறந்தகம் சென்றாள்.
அவள் போவதைக் கண்ட மணிமான் முதலிய பார்ஷதர்கள் சிவனின் அனுமதியுடன் நந்திதேவரை அழைத்துக்கொண்டு அவள் பின்னால் சென்றனர். அவளை நந்தியின் மீது அமரச் செய்து, உரிய அரச மரியாதையுடன் வாத்யங்களை முழக்கிக்கொண்டு சென்றனர்.
இவ்வாறு ஸதீதேவி பணியாட்கள் புடைசூழ யாகசாலையில் நுழைந்தாள்.
அங்கு நாற்புறமும் வேதம் ஒலித்தது. யாகத்திற்கான மிக விமரிசையான ஏற்பாடுகளைக் கண்டாள்.
தன் வீட்டை நாடி வந்த பெண்ணை வா என்று கூட தக்ஷன் அழைக்கவில்லை. மாறாக அவமதித்தான். அவனிடம்கொண்ட அச்சத்தால் வேதியர்களும் வாளாவிருந்தனர்.
அவளது உடன் பிறந்தோரும் அன்னையும் மகிழ்ந்து கட்டிக்கொண்டு உச்சிமோந்து வரவேற்றனர்.
தந்தையால் அவமதிக்கப்பட்ட ஸதீதேவி எதையும் ஏற்கவில்லை.
வேள்வியைக் கவனித்தபோது பரமேஸ்வரனுக்கு ஹவிர்பாகம் அளிக்காததைக் கண்டு துணுக்குற்றாள். மூவுலகையும் எரிப்பாள் போலச் சினம் கொண்டாள்.
தேவியின் கோபத்தைக் கண்டு தக்ஷனைக் கொல்ல எழுந்த தன் பூதகணங்களைக் கையமர்த்திவிட்டு கோபத்துடன் கரகரத்த குரலில் தக்ஷனைப் பார்த்து உரக்கப் பேசினாள்.
தந்தையே! அகில சராசரங்களிலும் அன்பு கொண்டவர் சங்கரர். அவருக்கு வேண்டியவர் வேண்டாதவர் யாருமில்லை.
மிகவும் உயர்ந்தவர். அவரிடம் உம்மைத் தவிர வேறு யார் பகைமை கொள்வார்?
தங்களைப் போன்றோர் மற்றவரின் நற்குணங்களையும் குற்றமாகவே காண்பர்.
பிணமாகப்போகும் இவ்வுடலை ஆத்மா என்று கொண்டாடுபவர் சான்றோரைப் பழிப்பதில் வியப்பேது?
சான்றோர் பொறுமைக்கடல் ஆவர். ஆனால் அவரை அவமதிப்பதைப் பொறுக்காத சான்றோரின் திருவடித்துகள் அவமதிப்பவரின் புகழை அழித்துவிடும்.
இரண்டே எழுத்துக்கள் கொண்ட 'சிவ' என்னும் நாமம் மிக உயர்ந்தது. அதை அறிந்தோ அறியாமலோ சொல்பவர்க்கு பாவங்கள் அனைத்தும் விலகி மங்களம் உண்டாகும்.
அனைத்து ஜீவராசிகளுக்கும் உறவான அவரிடம் பகைமை கொண்டீர்.
தர்மரக்ஷகனான பகவானை அறிவிலி என்று எவராவது நிந்திப்பாரேயாகில் அவரைத் தடுத்தி நிறுத்தவேண்டும். அதற்குத் திறனில்லையெனில் காதுகளைப் பொத்திக்கொண்டு அவ்விடத்தை விட்டுச் சென்றுவிடவேண்டும்.
நீலகண்டனை அவமதிக்கும் உங்களால் தோற்றுவிக்கப்பட்ட இவ்வுடலை இனி ஒரு கணமும் தரிக்கமாட்டேன். உடலுக்கு ஒவ்வாத உணவை உட்கொண்டு விட்டால் வாந்தி எடுத்தாவது அதை வெளியேற்றவேண்டும். இல்லையெனில் தீமை நேரிடும்.
ஆன்மாவை உணர்ந்த ஞானிகளது மனம் வேதத்தில் கூறிய கர்மகாண்டத்தைப் பின்பற்றாது. அவர்களது நடவடிக்கைகளை எவரும் புரிந்துகொள்ள இயலாது.
கர்ம காண்டம் அனைத்துமே ப்ரவிருத்தி தர்மம். உலக வாழ்வை நடத்த உதவுவது. வாழ்வை வெறுப்பவர் பின்பற்றுவதோ நிவ்ருத்தி தர்மம். இரண்டுமே வேதத்தில் கூறப்பட்டவைதாம்.
சங்கரரோ ப்ரும்மஸ்வரூபம். அவர் இவையனைத்தையும் கடந்து நிற்பவர்.
பரமேஸ்வரன் என்னை தாக்ஷாயணீ என்றழைப்பார். சிவத்வேஷியான உமது பெயரால் இனி என்னை அவர் அழைக்க நேரிட்டால் நான் தலைகுனிந்து வருந்த நேரிடும். உம்மால் ஏற்பட்ட இவ்வுடலை ஒழிக்கிறேன்
என்று சொல்லி
ஸதீதேவி மஞ்சள் ஆடை அணிந்து மௌனம் மேற்கொண்டு இருகண்களையும் மூடி வடக்கு நோக்கி யோகாசனத்தில் அமர்ந்தாள்.
ஸதீதேவி மஞ்சள் ஆடை அணிந்து மௌனம் மேற்கொண்டு இருகண்களையும் மூடி வடக்கு நோக்கி யோகாசனத்தில் அமர்ந்தாள்.
யோகசக்தியானால் ப்ராணனை மேலே எழுப்பி இதய சக்கரத்தில் நிறுத்தினாள். பின்னர் புருவ மத்திக்குக் கொண்டுவந்தாள். அங்கிருந்து அக்னியை மூளச்செய்து உடலெங்கும் நிரப்பினாள். அவளது திருமேனி முழுதும் யோகத்தீ சூழ்ந்தது. பரமேஸ்வரனையே மனத்தில் தியானித்து மிகுந்த தூய்மை மிக்கவளாகி உடலை நீத்தாள்.
அங்கிருந்த தேவரும் ரிஷிகளும் 'ஹாஹா' என்று கூக்குரலிட்டனர்.
பின்னர் அனைவரும் தக்ஷனைத் தூற்றினர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment