Wednesday, September 5, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 90 விதுர மைத்ரேய ஸம்வாதம்‌ - 34

இறைவனை மகனாகப் பெற்ற தேவஹூதி, குருவிடம் சிஷ்யை கேட்பதுபோல் கேட்டாள்.

ப்ரும்மத்தை அறிந்த ஞானியாகிய என் ப்ரபுவே!
ப்ரக்ருதியும்‌ புருஷனும் ஒன்றையொன்று தழுவிய நித்ய வஸ்துக்கள். ப்ரக்ருதி புருஷனைவிட்டுப் பிரிவதே இல்லை.

பூமியும் அதன் குணமான மணமும், நீரும் அதன் தன்மையான சுவையும் எப்படி ஒன்றை விட்டு ஒன்று பிரியாதோ அவ்வாறே ப்ரக்ருதியும் புருஷனும் பிரிவதில்லை.

இயற்கையில் ஆன்மா செயலற்றதாக இருப்பினும் ப்ரக்ருதி அவனைச் செயல்பட வைக்கிறது. ப்ரக்ருதியோடு சம்பந்தம்‌ உள்ளவரை ஆன்மாவிற்குச் சுதந்திரம்‌ இல்லையே.
பிறகு எப்படி விடுபடும்?
என்றாள்.

பகவான் சிரித்தார்.
பின்னர் கூறலானார்.

அம்மா! அக்னியை உண்டாக்க அரணிக்கட்டையைக் கடைவது வழக்கம். அக்னியானது தான் தோன்றக் காரணமாயிருக்கும் அரணிக்கட்டையையே எரித்துவிடும்.

விறகடுப்பை எரிக்க ஒரு குச்சியைப் பயன்படுத்துவோம். அந்தக் குச்சியால், மற்ற விறகுகளை அடுப்பில் தள்ளுவோம். கடைசியில் இவ்வளவு நேரமாக அடுப்பை எரிக்கப் பயன்படுத்திய குச்சியும் அடுப்பினுள்ளேயே போடப்பட்டு எரிந்துபோகும்.

ப்ரக்ருதியால் உண்டாக்கப்பட்ட புத்தி, மனம், இந்திரியங்கள்‌ ஆகியவை ப்ரக்ருதியை எரித்துவிடும்.

எப்படி என்றால், ஸ்வதர்மத்தை, அதாவது தனக்கென்று நிச்சயிக்கப்பட்ட கர்மத்தை ஒருவன் பலனை எதிர்பார்த்துச் செய்யாமல், பகவத் அர்ப்பணமாகச் செய்யவேண்டும். அவ்வாறு செய்தால் மனத்தூய்மை ஏற்படும். அதனால், இறைவனின் திருவிளையாடல்கள் பற்றிய கதைகளில் ஊக்கம் ஏற்படும். அதனால் தீவிரமான பக்தி ஏற்படும்.
அதன் மூலம் தத்துவத்தை உணரும் அறிவும் திடமான வைராக்யமும், சித்தம் ஒருமைப்படுவதால், புருஷனுடைய அறியாமை நாளடைவில் குறைந்துகொண்டே வந்து பின்னர் முற்றிலும் அழிந்துவிடும்.

கனவில் வரும் பற்பல துன்பங்களால் கனவில் மிகவும் கஷ்டப்படுகிறான்.விழித்துக்கொண்ட பின்னர், கனவில் வந்த கஷ்டங்கள் அவனைப் பாதிக்கவில்லை என்று உணர்கிறான்.

அதுபோல் உண்மை நிலையை உணர்ந்தவனை ப்ரக்ருதியால் சம்சார பந்தத்தில் சிக்கவைக்க முடியாது.
இவ்வாறு ஒருவன் பற்பல பிறவிகள் தோறும் பகவானான என்னைப் பற்றிய நினைவாகவே வெகுகாலம்‌ இருப்பானாகில், அவனுக்கு ப்ரும்மலோகம் உள்பட அனைத்து போகங்களிலும் வெறுப்பு தோன்றி வைராக்யம்‌ சித்திக்கும்.

அம்மா! வைராக்யம்‌ கைவரப்பெற்ற என் பக்தன் மிகுந்த துணிவுடையவன் ஆகிறான். என் கருணையினால், தத்வங்கள் அனைத்தின் ஸாரமான காண்பதனைத்தும் பொய், இறைவனே சத்யம் என்ற அனுபவத்தைப் பெற்றுகிறான். அவனது அத்தனை சந்தேகங்களும்‌ நீங்கப்பெறுகிறான்.
தேகமே ஆன்மா என்ற அபிமானம் அவனை விட்டொழியும். சூக்ஷ்ம உடலை விட்டு யோகிகள் எப்படி திரும்பி வர இயலாத இடத்தை அடைகிறார்களோ, அதே இடத்தை என் பக்தன் அடைகிறான். அவ்விடம் கைவல்யம் எனப்படும் ஆனந்தவடிவான என் உலகமே ஆகும்.

அஷ்டமா சித்திகளும் கடினமான யோகசாதனையால்‌ மட்டுமே கைகூடும். வேறு சாதனைகளால் அவற்றை அடைய முடியாது.
ஆனால், பக்தியோகம்‌ கூடியவனுக்கு அணிமாதி சித்திகள் தானே கைகூடும்.
அவை மாயையே உருவானவை. ஆகவே மனத்தைத் தன்பால் இழுத்துவிடும். உலகியல் தளைகளை மேன்மேலும் தோற்றுவிக்கும். அவைகளில் பற்று வைப்பவர்கள் மீளவே இயலாத சம்சாரக் கடலில் விழுந்துவிடுகிறார்கள்.

பக்தியோகம் கைவரப் பெற்றவர் அவற்றில் மனம் வைக்காமல் இருப்பாராயின், உலகியல் பற்றுக்கள் விடுபட்டு, உடலின் தொடர்பு நீங்கி, மரணபயமற்ற ஆனந்தமே வடிவான என் பரமபதத்தை அடைந்து விடுகிறார்.
இதற்குச் சிறந்த உதாரணம்..

குருவிடம் பக்தி செலுத்திய கணிகண்ணன் கிழவியைக் குமரியாக்கினார். ஆனால், அந்த சித்தியில் மயங்காமல், குருவருளால் நிகழ்ந்ததென்று அர்ப்பணம் செய்தார். அந்த கணிகண்ணன் ஊரை விட்டுப் போனால், அவர் பின்னால், குருவான திருமழிசை ஆழ்வாரும், பகவானும், காஞ்சியில் இருக்கும் தெய்வங்களும் நடந்து போகிறார்கள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment