கர்பத்திலிருக்கும் ஜீவனுக்கு இறைவனின் நினைவு வந்து தொழத் தொடங்குகிறது.
என்னைப்போன்ற பாவி எவரும் இலர். நான் எவ்வளவோ வாய்ப்புகள் கிடைத்தும் துர்மதியால் அவரது திருவடிகளைச் சரண்புகவில்லை.
தன்னைச் சரணடையும் உயிர்களைக் காக்கவே அவர் பல்வேறு அவதாரங்கள் செய்கிறார்.
கல்லும் முள்ளும் நிறைந்த நிலவுலகில் திருப்பாதங்கள் நோக அலைகிறார். அத்தகைய திருவடிகளை இப்போது சரணடைகிறேன்.
மாயைக்கு ஆட்பட்டு பஞ்சபூதங்களாலும், பத்து பொறிகளாலும் கட்டப்பட்டு என் முன் வினைப் பயனால் கர்பவாசம் இருக்கிறேன்.
பகவானோ மாயைக்கு ஆட்படாதவர். பூரணஞான வடிவானவர். ஆனாலும் என் இதயத்திலும்கூட வாசம் செய்பவர். அவரையே சரணமடைகிறேன்.
ஜீவனான நான் உண்மையில் தேகமற்றவன். ஆனால், எனக்கு உடல் இருப்பதுபோல் தோற்றம் கொண்டிருக்கிறேன்.
ப்ரக்ருதி புருஷனை ஆளும் அந்த பகவானை சரணமடைகிறேன்.
மாயையினால் என் உண்மை ஸ்வரூபம் மறைக்கப்பட்டு ஜனன மரணச் சுழலில் சிக்கிகொண்டேன்.
உண்மையான ஸாதுக்களின் அல்லது பகவானின் அருளின்றி எப்படி மீண்டுவர இயலும்?
அத்தகைய ஸாது சங்கம் எனக்குக் கிட்டுமோ கிட்டாதோ?
இப்போது எனக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி கொடுத்திருப்பவர் அந்த பகவான் ஒருவரே.
என் மூன்று விதமான தாபங்களையும் போக்கி அமைதி பெற அவரையே வணங்குகிறேன்.
தாய் என்ற பெயரில் வேறொரு பெண்ணில் கருப்பையில் விழுந்து ஜாடராக்னியால் சுடப்பட்டு துன்புறுகிறேன்.
எனக்கு எப்போது விடுதலை கிட்டுமோ?
பத்து மாதங்களே ஆன இந்த ஜீவனுக்கு இப்படிப்பட்ட ஞானத்தை இறைவா ! உங்களைத் தவிர வேறார் அளிக்கமுடியும்?
தம்மைக் கைகூப்பி வணங்குகிறேன்.
பகுத்தறிவு கொண்டு, அனைத்தையும் தெரிந்த உம்மைச் சரணமடைகிறேன்.
இக்கருக்குழியில் எனக்கு மிகுந்த துன்பமாய் இருக்கிறது. ஆனாலும் வெளி உலகம் இன்னும் அதிகமாக அச்சுறுத்துகிறது.
வெளியில் சென்றதும் மாயை சூழும். இவ்வுடலே நான் என்று தோன்றும்.
இந்த ஸம்சாரச் சுழல் எனக்கு மீண்டும் நேராவண்ணம் விவேகத்தோடு பகவான் நாராயணனின் பதகமலங்களை ஹ்ருதயத்தில் நிறுத்துவேன்.
என்றெல்லாம் கருப்பையில் இருக்கும் ஜீவன் வேண்டுகிறது.
பத்து மாதங்கள் கழித்து சூதிகா வாயுவினால் தலைகீழாகத் தள்ளப்படுகிறது.
அப்போது அதன் மூச்சு தடைபட்டு, உச்சந்தலையில் சடம் என்ற வாயுவினால் தாக்கப்படுகிறது.
கர்பத்தில் இருந்த சிசு மிகவும் துன்பப்பட்டபோதிலும், ஞானம் இருந்தது. வெளியில் வரும்போது அந்த ஆனந்தம் சட்டென்று மறந்துவிடுவதால் 'தேகமே ஆன்மா' என்னும் மாயையினால் மூடப்பட்டு அழத் துவங்குகிறது.
க்வா க்வா என்று அழுதழுது ஆனந்தம் எங்கே எங்கே என்று கேட்கிறது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment