கபிலர் ஜீவன்களின் கதியைத் தொடர்ந்து கூறியபின் பக்தியின் மேன்மையை தாய்க்கு மனத்தில் படியும்படி அழுத்திச் சொன்னார்.
தாயே! வாசுதேவரது திருவடிகளையே எப்போதும் நினைத்துப் போற்றுங்கள். அவரது கல்யாண குணங்களைக் கேட்டதுமே பக்தி பெருகும். பெருகிய பக்தியால் மனம், வாக்கு, காயம் மூன்றையும் அவருக்கே அர்ப்பணம் செய்து பஜனை செய்யுங்கள்.
பக்தி யோகத்திற்கு அடிப்படை வைராக்யம். அது இல்லாமல் பக்தி எப்படி உண்டாகும் என்று கேட்கவேண்டாம்.
பகவான் வாசுதேவனின் குணங்களை ஆசையோடு கேட்க கேட்க பக்தியும், உலக விஷயங்களில் வைராக்யமும் தானே வரும்.
அதனால் ஸாக்ஷாத்காரமான அறிவு தோன்றும். பின்னர் பகவானை நேரில் காணலாம்.
உண்மையில் எல்லாப் பொருள்களும் பகவானின் தோற்றமே. அதனால் சமமானவை. பகவத் பக்தனின் மனம், புலன்களின் செயல்களால் பிரியத்தையோ பிரியமின்மையையோ காண்பதில்லை. புகழ்வதையும், இகழ்வதையும் ஒன்றாகவே எண்ணுகிறான்.
பற்றற்ற சம புத்தியால், ஆத்மாவை ப்ரும்மத்துடன் இணைத்துக் காண்கிறான்.
ப்ரும்மம் ஒன்றே. அது ஞானவடிவானது. குணங்களற்றது. இருப்பினும் பொறி புலன்களுக்கு வசப்படுவோர்க்கு பல்வேறு ரூபங்களாகக் காட்சியளிக்கிறது.
பரப்ரும்மம், மஹத் தத்வம், வைகாரிகம், ராஜஸம், தாமஸம், ஐம்பெரும் பூதங்கள், பதினோரு இந்திரியங்கள் அனைத்தும் பகவானே. ஸ்வயம்ப்ரகாசரான பகவான் மஹத் தத்வத்துடன் சேர்ந்து ஜீவன் எனப்படுகிறார்.
ஜீவாத்மாவின் உடலாக இருக்கும் ப்ரும்மாண்டமும் ப்ரும்மமே..
அண்டத்தில் உள்ளது அனைத்தும் பிண்டத்திலும் உண்டு.
அண்டத்தில் உள்ளது அனைத்தும் பிண்டத்திலும் உண்டு.
போற்றத்தக்கவளே!
இதுவரை ப்ரும்ம ஸ்வரூபத்தை அறிந்துகொள்ளும் முறைகளை விளக்கினேன்.
இதுவரை ப்ரும்ம ஸ்வரூபத்தை அறிந்துகொள்ளும் முறைகளை விளக்கினேன்.
நிர்குண ப்ரும்மத்தை விளக்கும் ஞான யோகம், என்னையே பற்றி நிற்கும்பக்தியோகம் இரண்டின் குறிக்கோளும் என்னை அடைவதே.
அன்னையே!
சாஸ்திரங்களில் பல்வேறு வழிகள் கூறப்படுகின்றன.
ஸகல் ஜீவராசிகளுக்கும் உதவும் குளம், கிணறு வெட்டுதல்,
ஸ்ம்ருதிகளில் கூறியபடி எல்லா ஜீவராசிகளிலும் என் ஸ்வரூபத்தைக் கண்டு அவர்க்கு உதவி செய்தல்,
சாந்திராயணம் முதலிய விரதங்கள்,
பிறர்க்கின்னா செய்யாமை என்னும் தவம்,
வேதம் ஓதுதல், அதன் திரண்ட பொருளை ஆராய்தல்,
மனத்தையும் பொறி புலன்களையும் தன்வயப்படுத்துதல்,
செய்யும் செயல்கள் அனைத்தையும் பகவத் அர்ப்பணமாகச் செய்தல்,
நியமம் முதலிய கட்டுப்பாடுகளுடன் யோகப்பயிற்சி செய்தல்,
பக்தியோகம்,
பயன் கருதிச் செய்யும் இல்லற தர்மம்,
பயன்கருதாமல் செய்யும் துறவு,
ஆன்ம தத்வத்தை அறியச் செய்யும் ஞானயோகம்,
பற்றற்ற திடமான வைராக்யம்
- இவற்றுள் எதைச் செய்தாலும் ஸகுண, நிர்குண ஸ்வயம்ப்ரகாசரான இறைவனை அடையலாம்.
ஞானம் பற்றிய இவ்வுண்மைகளை என்னை அடைய ஈடுபாடில்லாதவர்க்கும், விநயமற்றவர்க்கும், தீய பழக்கமுள்ளவர்க்கும், என் அடியார்களிடம் பகைமை கொண்டவர்க்கும் ஒருபோதும் சொல்லலாகாது.
ஆனால்,
தாயே! என்னையே மனத்தில் கொண்டு இதை ஈடுபாட்டுடன் எவன் கேட்பானோ, பிறருக்குச் சொல்வானோ அவன் நிச்சயம் எனது பரமபதத்தை அடைவான்.
தாயே! என்னையே மனத்தில் கொண்டு இதை ஈடுபாட்டுடன் எவன் கேட்பானோ, பிறருக்குச் சொல்வானோ அவன் நிச்சயம் எனது பரமபதத்தை அடைவான்.
கபிலரின் ஞானோபதேசத்தைக் கேட்ட தேவஹூதி அஞ்ஞானத் திரை நீங்கப் பெற்றாள்.
கபிலரை வணங்கிப் பலவாறு துதித்தாள். வணங்கினாள்.
பின்னர் கபிலர் தாயிடம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.
தேவஹூதி ஸரஸ்வதி நதிக்கு கிரீடம் வைத்தாற்போல் விளங்கும் பிந்துஸரஸின் கரையிலேயே யோகாப்யாசம் செய்து மனத்தை அடக்கி சமாதியில் இருந்தாள்.
கணவரையும் மகனையும் பிரிந்து முகம் வாடியிருந்தாள். எனினும் தவத்தினால் ஒளிர்ந்தாள்.
கபிலர் சொன்னவாறே பகவானை பாதாதிகேசம் தியானம்செய்தாள்.
சிலநாள்களிலேயே நித்ய முக்தரான பகவானை அடைந்தாள்.
அவள் செய்த யோக சாதனைகளால் அவளது திருமேனி தூய்மை பெற்று நதியாகப் பெருகிற்று.
சித்தர்களால் சூழப்பெற்று விளங்கும் அப்புண்ய நதி அனைத்து சித்திகளையும் வழங்கவல்லது.
பகவான் கபிலர் தாயிடம் விடை பெற்றுக்கொண்ட பின் வடகிழக்கு திசை நோக்கிச் சென்றார்.
சித்தர்கள், சாரணர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள் அனைவரும் அவரைத் துதித்துக் கொண்டு பின் சென்றனர்.
வடகிழக்கு எல்லையை அடைந்ததும் அவரை ஸமுத்திரராஜன் வரவேற்று உபசரித்து இடமளித்தார்.
அங்கு அவர் உலகநலனுக்காக யோகம் மேற்கொண்டு விளங்கிவருகிறார்.
கபிலர் வாசம் செய்யும் இடம் தான் கபிலாரணயம் என்றும் தற்போது கலிஃபோர்னியா என்றும் வழங்கிவருவதாகப் பெரியோர் சொல்கின்றனர்.
மூன்றாம் ஸ்கந்தம் முற்றிற்று.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment