Thursday, June 14, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 11 ஆத்மதேவன் - 3

கோகர்ணன் தந்தைக்கு ஸ்ரீமத் பாகவதத்தின் தசமஸ்கந்தம் பாராயணம் செய்யுங்கள் என்றும் கூற, ஆத்மதேவன் ஸ்ரீமத்பாகவத புராணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டை நீங்கினார் என்கிறது மாஹாத்மியம்.
தீர்த்தயாத்திரை சென்ற கோகர்ணன் கயாவில் இருந்தபோது, தன் ஊர்க்காரர்கள் சிலரைப் பார்த்தார். அவர்களிடம் தாயும் சகோதரனும் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரித்தார். அவர்கள் நடந்த வ்ருத்தாந்தங்களைச் சொல்லி, துந்துலியும், துந்துகாரியும் இறந்துவிட்டார்கள் என்று கூறினர். மிகவும் வருந்திய கோகர்ணன் கயாவிலேயே அவர்களுக்குச் செய்யவேண்டிய அந்திம கிரியைகளையும், பிண்டதானங்களையும் செய்தார்.
மந்திரபூர்வமான கிரியைகளை ஒருவரின் வாரிசுகளும், தாயாதிகளும் செய்தால் மட்டுமே அது இறந்தவரைச் சென்றடையும். ஆனால், கயா க்ஷேத்திரத்தில் மட்டும் யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் பிண்டதானங்களைச் செய்யலாம். பயணத்தில் உடன் வந்தவர், அண்டை அயலார், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், நம் செல்லப்ராணிகளுக்காகக்கூட கயாவில் ச்ராத்தம் செய்யலாம். அப்படிச் செய்தால் இறந்தவருக்கு ஸ்வாமியான கதாதரன் உயர்ந்த பதத்தைக் கொடுத்துவிடுவார்.
கோகர்ணனும் கயாவில் ச்ராத்தம் செய்துவிட்டு, ஊருக்கு வந்து பார்க்கலாம் என்று திரும்பி வந்தார்.
வீடு பாழடைந்து பூட்டியிருந்தது. வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கண்களை மூடி, ஜபம் செய்யத் துவங்கினார். சற்று நேரத்தில் ஆடு கனைப்பதுபோலவும், யாரோ அலறுவது போலவும், ஊளையிடுவது போலவும் விதம்விதமான சப்தங்கள் அவரது காதில் விழுந்தன. கண்களைத் திறந்தார். எதிரே புகைபோல் ஒரு உருவம் இருந்தது. அது இவரிடம் பேச விழைகின்றது என்று புரிந்துகொண்டு, சில மந்திரங்களைச் சொல்லி தீர்த்த பாத்திரத்திலிருந்து சிறிது நீரை அதன்மீது தெளித்தார். இப்போது அந்த உருவம் பேச ஆரம்பித்தது.
கோகர்ணா...
என்னைக் காப்பாத்து
என்னைக் காப்பாத்து
அலறியது அந்த உருவம்.
கோகர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.
யார் நீ? ஏன் இப்படி இருக்க?
நான்தான் உன் அண்ணன் துந்துகாரி.
துந்துகாரியா? இதென்ன கோலம்?
நான் பஞ்சமாபாதங்களையும் செய்ததால துர்மரணமாகி இறந்துட்டேன். ப்ரும்மராக்ஷஸாகிட்டேன். எனக்கு உடம்பெல்லாம் எரியுது. அகோரப்பசி. என்னால் இந்த அவஸ்தையைத் தாங்கமுடியல. இந்த ராக்ஷஸ அவஸ்தை என்னை விட்டுப் போனாப் போதும். தயவுசெய்து ஏதாவது செய் கோகர்ணா
அழுதது அந்த உருவம்.
நீயும் அம்மாவும் இறந்துட்டீங்கன்னு கேள்விப்பட்டு நான் உங்களுக்காக கயாவில் ச்ராத்தம் செய்தேனே. அப்றம் எப்படி இந்த அவஸ்தை உனக்கு?
நூறு கயா ச்ராத்தம் செய்தாக்கூட என் பாவங்கள் போகாது கோகர்ணா. அவ்வளவு பண்ணிருக்கேன். என்னால் தாங்கமுடியல கோகர்ணா. நான் உன்கிட்ட அன்பா ஒரு வார்த்தைகூட பேசினதில்ல. ஆனா, நீ மஹாத்மாவாச்சே. அண்ணனாச்சேன்னுகூட வேண்டாம். கஷ்டப்படற ஜீவன்னு நினைச்சாவது இரக்கம் காட்டு. என்னை இந்த அவஸ்தைலேர்ந்து விடுவிக்க ஏதாவது செய்யப்பா..
கோகர்ணன் பல சாஸ்திர நூல்களை ஆராய்ந்தார். வழி ஒன்றும் புலப்படவில்லை. ஊரிலுள்ள அத்தனை சான்றோர்களையும் கூட்டி ஏதாவது வழி உண்டா? சாஸ்திரம் என்ன சொல்கிறது? என்று கேட்டார்.
பலவாறு விவாதங்கள் நடந்தன. முடிவில் கயா ச்ராத்தத்தை விட உயர்ந்த மார்கம் இல்லை. எல்லா சாஸ்திரங்களும் அதைத்தான் சொல்கின்றன என்றார்கள்.
ஒரு பழுத்த ஸாது சொன்னார்,
கோகர்ணா, கதியில்லை என்று ஒருவரையும் சாஸ்திரம் தள்ளுவதில்லை. நிச்சயம் ஏதாவது வழி இருக்கும். நமக்குத்தான் தெரியவில்லை. ஸூரிய பகவான் ப்ரத்யக்ஷ தெய்வமாவார். அத்தனை சாஸ்திரங்களையும் அறிவார். அவரை உபாசித்தால் ஏதாவது வழி புலப்படும்.
கேட்டதும் மகிழ்ந்தார் கோகர்ணன். அவர் காயத்ரியை கோடிக்கணக்கில் ஜபம் செய்து தேஜஸ்வியாக விளங்கியதால்,
அவ்வளவுதானே என்று சொல்லி சூர்ய மந்திரங்களைச் சொல்லி அவரை நிறுத்தி விட்டார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment