Sunday, June 10, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 7 கிரந்த மகிமை

கங்கை உள்பட ஸப்த புண்யநதிகளும் வந்து ஒருவருக்கு ஸேவை செய்து தங்களிடம் சேர்ந்த பாவங்களைத் தொலைக்கின்றன என்றால் அவர் எவ்வளவு புண்யசாலியாக இருக்கவேண்டும்?
நிச்சயயமாக அவரை நிந்தித்தது தவறுதான். மன்னிப்பு கேட்பதோடு, அவரின் புண்யத்திற்கான காரணத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
பலவாறு சிந்தித்துக்கொண்டு பயணியானவர் வீட்டுத்திண்ணையில் தவிப்போடு அமர்ந்திருந்தார்.
சற்று பொழுது புலரும் தருவாயில் வெளியே வந்த அந்த மஹாத்மாவின் கால்களில் ஓடிச் சென்று விழுந்தார்.
நான் செய்தது பெரும் தவறு ஸ்வாமி. மன்னிச்சுடுங்க.
உங்க பெருமை தெரியாம நேத்திக்கு தாறுமாறா பேசிட்டேன்.
அவருக்கோ ஒன்றும் புரியவில்லை.
பயணியை ஆசுவாசப்படுத்தி உட்காரவைத்து என்னவென்று விசாரித்தார்.
அதையெல்லாம் விடுங்க. எனக்கொன்னும் தெரியாது.
கங்கையாவது, ஸப்த நதியாவது. நான் பிறந்ததிலிருந்து இங்கேயேதான் இருக்கேன். என்றார்.
கங்கையே இவரை மஹாத்மா என்கிறாள். இவரோ கங்கையைத் தெரியாது என்கிறாரே. என்று குழம்பிப்போனார் பயணி. ஆனாலும் இந்தமுறை ஏமாந்துபோய்விடக்கூடாது என்று மேலும் விசாரித்தார்.
அதெல்லாம் இருக்கட்டும். நீங்க என்ன பூஜை பண்றீங்க? ஏதாவது ஜபம் செய்யறீங்களா? உங்கள் குரு யார்?
கேள்வி கேள்வி மேல் அடுக்கிக்கொண்டே போக, அவரோ திருதிருவென்று விழித்தார். பின்னர் பேச ஆரம்பித்தார்.
இதோ பாருங்க. பூஜையோ, ஜபமோ எனக்கொன்னும் தெரியாது. நான் செய்வதெல்லாம் ஒன்னேஒன்னுதான்
என்ன அது?
என் வீட்டில் ஒரு பழைய புத்தகம் இருக்கு. பரம்பரை பரம்பரையாக என் கொளுத்தாத்தா, தாத்தா, அப்பா எல்லாரும் பாராயணம் செய்த புத்தகம்.எனக்கு ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு அக்ஷரம் கூட தெரியாது. அதனால், நான் பாராயணம் செய்வதும் இல்லை. ஆனால், காலையில் ஸ்நானம் செய்துவிட்டு அந்த புத்தகத்திற்கு இரண்டு புஷ்பங்களைப் போட்டு ஒரு தீபம் காட்டுவேன். அவ்வளவுதான் நான் செய்யும் பூஜை. நான் வேறெந்த தெய்வத்தையும் வழிபடுவதில்லை. கோவில்களுக்கோ யாத்திரைகளோ சென்றதுமில்லை.
என்றார்.
வியப்பின் உச்சிக்கேபோன பயணி,
அந்தப் புத்தகத்தை நான் பார்க்கலாமா?
என்று தயங்கி் தயங்கிக் கேட்டார்.
வாருங்கள். காட்டுகிறேன். என்று வீட்டினுள் அழைத்துச்சென்று பூஜையில் இருந்த புத்தகத்தை ஜாக்கிரதையாக எடுத்துக் கொடுத்தார்.

தொட்டால் பொடிப்பொடியாக உதிர்ந்துபோகும் நிலையில் இருந்த அந்தப் புத்தகத்தைப் பிரித்தால் முதல் பக்கத்திலேயே ஸ்ரீமத்பாகவத மஹாபுராணம் என்ற எழுத்துக்கள் பளிச்சிட்டன.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment