பரீக்ஷித் கேட்டான்.
உத்தவர் பதரிக்குச் சென்ற பின் கண்ணன் என்ன செய்தார்? அவர் எவ்வாறு தன் அவதாரத்தை முடித்துக் கொண்டார்? அவருடைய ரூப வர்ணனையைக் கேட்ட மாத்திரத்தில் அவரது திருவுருவம் நெஞ்சில் வந்து குடிகொள்ளுமே.
அவருடைய திருமேனியழகைப் பாடி பாடி காவியங்கள் உயர்வு பெறுகின்றன. அந்த நீலமேகத் திருமேனியைப் பார்த்துக் கொண்டே குருக்ஷேத்திரத்தில் உயிரை விட்ட லட்சக் கணக்கான வீரர்கள் சாரூப்ய முக்தியை அடைந்தனரே. அந்தத் திருமேனியை எவ்வாறு மறைத்துக்கொண்டார்?
ஸ்ரீ சுகர், தீர்கமான பெருமூச்சுடன் கூறத் துவங்கினார்.
ஹே பரீக்ஷித்! வானம், பூமி, எல்லா இடங்களிலும் பல்வேறு துர்நிமித்தங்கள் தோன்றலாயின. அதைக் கண்ட கண்ணன், துவாரகையின் சுதர்மா என்ற அரசவையில் அனைவரையும் கூட்டினான்.
மேலோரே! நன்றாகப் பாருங்கள். துவாரகையில் நிறைய உற்பாதங்கள் தோன்றுகின்றன. இவை யமனின் வருகையின் அறிகுறிகளாகும். இனியும் நாம் இங்கு ஒரு முஹூர்த்தம் கூட தாமதிக்கலாகாது. விரைந்து புறப்படுங்கள். பெண்களும் குழந்தைகளும், முதியோரும் சங்கத்வாரம் செல்லட்டும். நாம் அனைவரும் ப்ரபாஸ க்ஷேத்ரம் செல்வோம். அங்கே நீராடி உபவாசம் இருந்து பூஜைகள் செய்யலாம். வேத விற்பன்னர்களை அழைத்து தானங்கள் அளிப்போம்.
தேவதைகள், வேத விற்பன்னர்கள், பசுக்கள் ஆகியவற்றைக் கொண்டாடுவது நன்மை அடைவதற்கான சுலபமான வழியாகும். என்றான்.
அதைக் கேட்டதும் அனைவரும் ஆமோதித்து அக்கணமே கிளம்பி ஒரு ஓடத்தில் ஏறிக்கொண்டு கடலைக் கடந்தனர். பின்னர் பிரபாஸத்தை நோக்கிச் சென்றனர்.
ப்ரபாஸத்தை அடைந்ததும் கண்ணன் உத்தரவுப்படி ஏராளமான மங்களகரமான செயல்களைச் செய்தனர். அதே சமயம் காலதேவனின் கட்டளைப்படி மைரேயம் என்றழைக்கப்படும் மதுவைக் குடிக்கத் துவங்கினர்.
குடித்தவுடனேயே புத்தியை மழுங்கடித்துவிடும் அம்மதுவை அளவுமீறிக் குடித்து குடித்து அனைவருமே மதி மயங்கிப் போனார்கள். நிலைதடுமாறி அடாவடிகளில் இறங்கி, சண்டையில் முடிந்தது. அவர்கள் கையில் கிடைத்த ஆயுதங்கள் அனைத்தையும் கொண்டு ஒருவர்க்கொருவர் தாக்கிக்கொண்டனர்.
மிகுந்த வலிமை படைத்த அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வது யானைகள் மோதிக்கொள்வதைப் போல் இருந்தது. ப்ரத்யும்னன்- சாம்பன், அநிருத்தன் - ஸாத்யகி, ஸுபத்ரன் - ஸங்க்ராமஜித், கதன் - கதன், சுமித்ரன் - சுரதன் இவர்களுக்குள் நிகழ்ந்த கடும்போரால் அவ்விடமே ரணகளமாகியது.
இவ்வளவு நாள்களாக உயிருக்குயிராய்ப் பழகிய பந்துக்களும் நண்பர்களும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு படுகாயமடைந்தனர்.
அத்தனை பாணங்களும் ஆயுதங்களும் தீர்ந்துபோயின. கை முஷ்டிகளால் அடித்துக்கொள்ளத் துவங்கினர். பின்னர் சமுத்திரக் கரையில் உயரமாக வளர்ந்திருந்த நாணல்களைப் பிடிங்கி அடிக்கத் துவங்கினர். அவை பார்க்கத்தான் நாணற்புற்களே தவிர அவர்கள் பறித்ததும் இரும்புத்தடிபோலாகிவிட்டன.
அவர்கள் சண்டையிடுவதைப் பார்க்கச் சகியாத கண்ணனும் பலராமனும் தடுக்க வந்தனர். அவர்கள் மதியிழந்து தம்மைக் காத்த தெய்வத்தையும் கொல்லும் எண்ணத்துடன் தாக்கத் துவங்கியதும் கண்ணனும் பலராமனும் கோபம்கொண்டு மீதமிருந்த நாணல்களைப் பிடுங்கி அவர்களை அடித்தனர்.
ஒருவர் கூட மிச்சமின்றி அனைவரும் அழிந்துபோயினர்.
பூமிக்கு பாரமாக இருந்த அனைத்து அரசர்களும் அழிந்த பிறகு, இந்த யாதவ சேனை பெரும் பாரமாக இருந்தது. அவர்களும் ப்ராம்மண சாபம் என்னும் காரணத்தைக் கொண்டு அழிந்ததும் கண்ணன் தன் எல்லாக் காரியங்களும் முடிவடைந்தது என்று மன நிறைவடைந்தான்.
அடுப்பு நன்றாக எரிவதற்காக ஒரு குச்சியை வைத்து கிளறிக்கொண்டிருப்பார்கள். கடைசியில் அந்தக் குச்சியையும் அடுப்பிலேயே போட்டு விடுவார்கள். அதுபோல் பகவான் யாதவ சேனையைக் கருவியாகக் கொண்டு பூபாரத்தைக் குறைத்த பின்பு பெருவீரகள் நிரம்பிய கணக்கிலடங்காத யாதவ சேனையையும் அழித்துவிட்டான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment