உத்தவர் மெதுவாகப் பேசலானார்.
கண்ணா! நீங்கள்தான் அனைத்திற்கும் மூலகாரணம். என்னுள் இருந்த மோகங்கள் அனைத்தும் தங்கள் காட்சியினாலே நீங்கிவிட்டன. நெருப்பின் அருகில் இருப்பவனுக்கு குளிர், மற்றும் இருள் பற்றிய அச்சம் ஏது?
எம் குலத்தவருடன் எனக்குச் சிறிய பிடிப்பு இருந்தது. தாங்கள் அதையும் ஞானம் என்ற கத்தியால் அறுத்துவிட்டீர்கள். தங்களுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம். தங்கள் சரணத்தில் எனக்கு குறைவிலாத பக்தி எப்போதும் இருக்கட்டும்.
என்றார். கண்ணன் தொடர்ந்து கூறினான்.
உத்தவா! இனி நீ இங்கிருக்கவேண்டாம். பதரிவனம் சென்றுவிடு. அங்கு என்னை தியானம் செய்துகொண்டு கங்கையில் ஸ்நானம் செய்துகொண்டு புனிதமடைவாய். அளகநந்தா நதியைப் பார்த்தாலே போதும். மனமாசுகள் அனைத்தும் அகன்றுவிடும். மரவுரி அணிந்து காட்டில் கிடைக்கும் வேர், கிழங்கு, பழங்கள் ஆகியவற்றை உண்டு எந்த வசதிக்கும் ஆட்படாமல் வாழ்வை நகர்த்து.
குளிர், சூடு போன்ற இரட்டைகளைச் சகித்துக்கொண்டு இனிய இயல்புடன் புலன்களை வசப்படுத்தி ஞானத்தை அடைவாயாக. தனியாக இருந்து நான் உபதேசம் செய்தவற்றை மனத்தில் இருத்தி ஆராய்ந்துகொண்டிரு. என்னையே எப்போதும் எண்ணுவாய். பாகவத தர்மத்தைக் கடைப்பிடி. கடைசியில் என் ஸ்வரூபத்தை அடையலாம். என்றான்.
கண்ணனின் ஆணையை மீற இயலாத உத்தவர், கண்களில் நீருடன் நடை தளர்ந்தவராய், கண்ணனை வலம் வந்தார். பின்னர் அவன் திருப்பாதங்களில் தம் தலையை வைத்து வணங்கியெழுந்தார். கண்ணனின் பாதுகைகளைத் தலைமேல் சுமந்துகொண்டு பிரிந்து சென்றார்.
மெல்ல மெல்ல அடிவைத்து எப்படியோ பதரியை அடைந்தார். கண்ணனின் வாக்கின்படி வாழத் துவங்கினார். பின்னர் காலக்கிரமத்தில் பகவானை அடைந்தார்.
உத்தவ கீதை எனப்படும் இந்த ஆத்மதத்துவத்தை சிரத்தையுடன் சேவிப்பவர்க்கும், கேட்பவர்க்கும் கண்ணனின் திருவடித் தொடர்பு ஏற்பட்டு முக்தியடைவர்.
வண்டு பலவகை மலர்களிலிருந்து தேனைச் சேகரிப்பதுபோல, வேதங்களிலிருந்தும் பல்வேறு புராணங்களிலிருந்தும் ஞான விஷயங்களை சேகரித்து பக்தர்களுக்காக அளித்தார். பாற்கடலிலிருந்து அம்ருதத்தைக் கடைந்தெடுத்தார். கிழத்தன்மை மரணம் ஆகியவற்றிலிருந்து விடுபட தேவர்க்கு அம்ருதத்தையும், உத்தவன் போன்ற உத்தம பக்தர்க்கு ஞானாம்ருதத்தையும் அளித்தார். இத்தகைய உத்தம புருஷனான கண்ணனை வணங்குகிறேன். என்றார் ஸ்ரீ சுகர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment