Monday, January 18, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 623

உத்தவர் கேட்டார்.

கண்ணா! பெரும் யோகிகளும் உம்மிடம்‌ மனத்தை ஒருமைப்படுத்த இயலாமல் தோல்வியைத் தழுவுகின்றனர். தங்கள் திருவடித் தாமரைகளில் சரணடைபவர்களை மாயை மயக்குவதில்லை.

தம்மைச் சரணடைந்த பக்தரிடம் தாங்கள் தங்களை முழுமையாக ஒப்படைத்துவிடுகிறீர்கள். அடைக்கலம் புகுந்தவர்க்கு நால்வகைப் புருஷார்த்தங்களையும் வழங்குகிறீர்கள்.

எல்லா உயிர்களிடத்தும் அந்தர்யாமியாகவும் வெளியில் குருவாகவும் இருந்து எல்லா விதமான தாபங்களையும் போக்கி தங்களின் ஸ்வரூபத்தைக் காட்டுகிறீர்கள்.

அதுமட்டுமல்லாமல் பல்வேறு உதவிகளையும் செய்கிறீர்கள். தங்களை எண்ணி எண்ணி ஆனந்தக் கடலில் மூழ்குவது தவிர வேறென்ன செய்ய இயலும்? ப்ரும்மாவின் ஆயுள் காலம் வரை உயிரோடிருப்பினும் தங்களின் இந்த உதவிக்கு நன்றி செலுத்த இயலாது.
என்றார்.

கண்ணன் மிகுந்த அன்புடனும் புன்முறுவலுடனும், பதில் சொல்லத் துவங்கினான்.

உத்தவா! எந்தக் காரியம் செய்தாலும் என் ப்ரீதிக்காகச் செய்கிறேன் என்ற எண்ணத்தை உள்ளோட்டமாக வைத்துக்கொள்ளவேண்டும். மனத்தை என்னிடம் நிறுத்தி என்னிடமே ரமிக்கவேண்டும்.

என் பக்தர்களான சாதுக்கள் வசிக்குமிடத்திலேயே வசிக்கவேண்டும். தேவ, அசுர, மனிதர் எவராயினும் என்னிடம் உத்தம பக்தி செலுத்துபவரைப் பார்த்து அவர்களது ஒழுக்கத்தை மேற்கொள்ளவேண்டும்.

தனியாகவோ, பிறருடன் சேர்ந்தோ என் புகழ், நாமங்கள் ஆகியவற்றைப் பாடுதலும், ஆடுதலும், ராஜோபசாரங்களும், ஆண்டுவிழாக்களும் உற்சவங்களும் செய்யவேண்டும். எல்லா ப்ராணிகளிடத்தும் என்னையே பார்க்கவேண்டும். தூய்மையான ஞானத்தைக் கொண்டு ப்ராமணன், மற்ற குலத்தவன், திருடன், உயர்ந்த சீலமுள்ளவன், சூரியன், சிறு சுடர், தயை உள்ளவன், கொடுமைக்காரன், என்றெல்லாம் எவரிடமும் வேறுபாடின்றி அனைவரையும் சமம்மாக நோக்கவேண்டும்.

எல்லா ப்ராணிகளிடத்தும் பரமாத்மா விளங்குகிறார் என்பதை உணர்ந்து விட்டதால் தன்னைப் பரிஹாசம் செய்பவனையும் நல்லவன், கெட்டவன் என்ற உணர்வுகளை விட்டு வணங்கவேண்டும். அவ்வாறு உணரும் வரை, எல்லாப் பிராணிகளிடத்தும் நான் இருப்பதாக மனம், மொழி, காயம் ஆகியவற்றால் பயிற்சி மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு பயிற்சி செய்பவனுக்கு வெகு சீக்கிரத்தில் ஞானம் வந்துவிடும். இதுவே பாகவத தர்மம் ஆகும். இதைப் பின்பற்றுபவனுக்கு கடுகளவும் கெடுதல் நேராது. பயன் கருதாத, குணங்களற்ற இந்த தர்மம் மிகவும் உயர்ந்தது.

பாகவத தர்மத்தை மேற்கொண்டுள்ள சாதகன், பயம், சோகம், அழுதல், விழுதல் ஆகிய வீண் விஷயங்களைக் கூட எனக்கு அர்ப்பணம் செய்வானாகில் அவையும் தர்மமாகிவிடும்.

அழியும் தன்மை கொண்ட இவ்வுடலைக் கொண்டுதான் அழியாத் தன்மையை அடைய இயலும். ப்ரும்மவித்யையின் ரகசியத்தை உனக்கு மிக சுருக்கமாகக் கூறினேன் உத்தவா! இதை அறிந்துகொள்பவனின் அனைத்து சந்தேகங்களும் நீங்கிவிடும். நமது இவ்வுரையாடலை நினைப்பவர் ப்ரும்மத்தை அடைவார். யார் இதை என் பக்தர்க்கு விளக்கமாகக் கூறுகிறாரோ அவர்க்கு நான் என்னையே கொடுக்கிறேன். இது மிகவும் புனிதமானது‌. படிப்பவர், பிறர்க்குச் சொல்பவர் அனைவரும் ஞானதீபத்தால் என்னை தரிசிப்பதோடு பிறர்க்கும் தரிசித்துவைக்கும் புண்ணியத்தை அடைகிறார்.

பக்தியோகமாகிய ஞானத்தை அடைந்து விட்டவனுக்கு அதற்கு மேல் அறிவதற்கு ஒன்றுமில்லை. மற்ற யோகங்களால் அனைவரும் நால்வகைப் புருஷார்த்தங்களையும் அடைவர். ஆனால் உம்மைப்போன்ற உத்தம பக்தர்க்கு எல்லாப் புருஷார்த்தங்களும்‌ நானே ஆவேன்.

எவன் என் பொருட்டு எல்லா செயல்களையும் செய்கிறானோ அவனுடைய அத்தனை காரியங்களுக்கும் நான் துணை நிற்கிறேன். அவனுக்கு இன்னும் என்ன நன்மை செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே இருப்பேன்.
அனைத்தையும் கேட்ட உத்தவர், கண்களில் நீர் பெருக அசையாமல் நின்றார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment