எல்லா தேவர்களும் துதி செய்ததும் ப்ரும்மா பேசத் துவங்கினார்.
எல்லாவற்றிற்கும் தலைவரான ப்ரபோ! பூமியின் பாரத்தைக் குறைக்கவேண்டும் என்று நாங்கள் முன்பொரு முறை வேண்டிக்கொண்டோம். பெருங்கருணையால் எங்கள் வேண்டுகோளுக்கிணங்க தாங்கள் இப்புவியில் அவதாரம் செய்து எங்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து விட்டீர்கள்.
தர்மத்தை நிலைநிறுத்தும் சான்றோர்களுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தோற்றுவித்தீர்கள்.
மிகவும் அழகிய வடிவெடுத்து யாதவ குலத்தில் அவதரித்து கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட பல லீலைகளைச் செய்தீர்கள்.
சாமான்ய மக்கள் எண்ணிக்கையில் அடங்காத அந்த லீலைகளைக் கேட்டும், பாடியும் அஞ்ஞான இருளைக் கடந்துவிடுவர்.
நீங்கள் இப்புவியில் தோன்றி நூற்றி இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. எங்களால் வேண்டப்பட்ட எல்லா காரியங்களும் நிறைவேறிவிட்டன. தாங்கள் விரும்பினால் தங்களது நிலயான ஸ்தானமான ஸ்ரீவைகுண்டத்திற்கு எழுந்தருளலாம். எங்கள் அனைவரையும் காப்பவர் தாங்களே.
என்றார்.
கண்ணன் அனைவரையும் பார்த்து ஒரு மோஹனப் புன்முறுவல் செய்தான்.
ப்ரும்மதேவரே! நானும் அதையே தான் முடிவுசெய்துள்ளேன். பூமியின் சுமை குறைந்துவிட்டது.
இப்போது இந்த யாதவகுலம் வெல்லவே முடியாத அளவு பெரும்பலத்துடன் விளங்குகிறது. அவர்கள் இவ்வுலகைக் கைப்பற்றும் எண்ணத்துடன் மிகுந்த சக்தியுடன் செயல்படுகிறார்கள். என் கட்டளைக்குப் பணிந்து சற்றே அமைதி காக்கிறார்கள்.
இப்போது நான் கிளம்பிவிட்டால் பெரும் சக்தியாக மாறி நிற்கும் இவர்கள் கட்டுப்பாடின்றி நடந்து மக்களைத் துன்புறுத்துவார்கள்.
அந்தண சாபம் என்ற காரணம் கொண்டு அவர்களையும் அழிக்கத் திட்டமிட்டுள்ளேன். அதன் செயலாக்கம் இப்போது துவங்கியுள்ளது. அவர்கள் அனைவரும் அழிந்ததும், நான் என் இருப்பிடமான வைகுண்டம் திரும்புவேன்.
என்றான்.
அதைக் கேட்டதும் ப்ரும்மா முதலிய அத்தனை தேவர்களும் தங்கள் திருமுடி தரையில் படுமாறு கண்ணனை விழுந்து வணங்கிவிட்டுத் தத்தம் இருப்பிடம் சென்றனர்.
பின்னர் துவாரகையில் மிகவும் கோரமான உற்பாதங்கள் ஏற்படத் துவங்கின.
கண்ணன் துவாரகையிலுள்ள சான்றோரையும் முதியோரையும் அழைத்து,
பெரியவர்களே! இப்போது துவாரகையில் பெரிய ஆபத்துகளுக்கான நிமித்தங்கள் தோன்றுகின்றன. நமது குலத்திற்கு பிராம்மண சாபம் ஏற்பட்டிருக்கிறது. எனவே நாம் அனைவரும் இங்கிருந்து கிளம்பி பிரபாஸ க்ஷேத்ரம் செல்வோம்.
அதன் மஹிமை சொல்லில் அடங்காதது. முன்பொரு சமயம் தக்ஷ ப்ரஜாபதிக்கு ராஜபிளவை என்ற கொடிய நோய் ஏற்பட்டது. அப்போது அவர் அந்த ப்ரபாஸ தீர்த்தத்தில் நீராடியதும் உடனேயே அந்நோயிலிருந்து விடுபட்டார். நாமும் அங்கு சென்று தேவர்க்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செலுத்தி தானங்கள் செய்வோம். இவற்றால் பெரிய இன்னல்களை சுலபமாகக் கடக்க இயலும் என்றான்.
கண்ணனின் சொல்லே துவாரகாவாசிகளுக்கு வேதம் என்பதால் அனைவரும் ப்ரபாஸம் நோக்கிப் புறப்பட ஆயத்தம் செய்யத் துவங்கினார்கள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment