செய்யும் செயல்களையும் அவற்றின் பலன்கள் யாவற்றையும் இங்கேயே உதறிவிட்டு முக்தியின்பத்தை அடையச் செய்யும் மார்கம் கர்ம யோகம். அதைப் பற்றிக் கூறுங்களேன். முன்பொருமுறை நான் இதே கேள்வியை என் தந்தை இக்ஷுவாகுவின் எதிரில் ஸனகாதி முனிவர்களிடம் கேட்டேன். அவர்கள் பதில் கூறாமல் மௌனம் சாதித்தனர். அதற்கான காரணத்தையும் கூறுங்கள் என்றான் நிமிச் சக்ரவர்த்தி.
ஆறாவது யோகியான ஆவிர்ஹோத்ரர் கூறலானார்.
அறநெறிப்படி சில கர்மாக்கள் விதிக்கப்பட்டும், சில தடுக்கப்பட்டும் இருக்கின்றன. அவற்றை வேதமே பகுத்துக் கொடுக்கிறது.
வேதங்கள் அனைத்தும் மறைமுகமாகத் தத்துவங்களைக் கூறுபவையே. நெறியுடன் வாழ்வதற்கான வழிமுறையைக் கூறுபவை. நோய் தீரக் கொடுக்கப்படும் கசப்பு மருந்து இனிப்பு தடவிக் கொடுக்கப்படுகிறது. அதுபோல் கர்மாக்களைச் செய்வது எளிது. மனத்தை ஒருமுகப்படுவது கடினம். எனவே வேதம் கர்மாக்கள் மூலமாக மனத்தைப் பக்குவப்படுத்தி விடுதலைக்கு வழிவகுக்கிறது.
புலன்களைக் கட்டுப்படுத்த இயலாதவன், விதிக்கப்பட்ட கர்மாக்களைச் செய்வதாலேயே பக்குவமடைந்துவிடுகிறான். அதையும் தவறினால் அவனைப் பாவம் சேர்கிறது. பிறவிச் சுழலில் மாட்டிக்கொள்கிறான்.
பலனில் பற்றை விடுத்து, அதை பகவானுக்கு அர்ப்பணம் செய்வதன் மூலம் கர்ம மார்கமே சுலபமாக முக்திக்கு வழி செய்கிறது. பலன் பகவானுக்கு என்றாகிவிடுவதால் கர்மத்தைச் செய்தாலும் அது செய்யப்படாததே.
நற்கர்மத்தைச் செய்தால் மேல் உலகங்களை அடையலாம் என்று கூறப்பட்டிருந்தாலும் அது ஊக்கமளிப்பதற்காகவே சொல்லப்பட்டது. பலனை பகவானுக்கு அர்ப்பணம் செய்வதால் சுலபத்தில் கர்மத்தளை விடுபட்டுவிடும்.
அஞ்ஞானம் நீங்க வேத நெறிப்படி பகவானை ஆராதனம் செய்யவேண்டும். ஒரு குருவை ஆச்ரயித்து வழிபடும் முறையைக் கற்றுக்கொண்டு தன் இஷ்ட மூர்த்தியின் அர்ச்சாவதாரத்தை ஆராதனம் செய்யவேண்டும்.
பகவானின் உருவச்சிலை முன் அமர்ந்து ப்ராணாயாமம், நாடி சுத்தி ஆகியவற்றின் மூலம் தம்மைத் தூய்மைப் படுத்திக்கொண்ட பின் பூஜையைத் துவங்கவேண்டும்.
எதிரில் உள்ள மூர்த்தியை தியானிக்கவேண்டும். அதில் பகவான் எழுந்தருளியிருப்பதாகவும், தன்னைப் பார்ப்பதாகவும் பாவனை செய்யவேண்டும். பூஜைக்கான பொருள்களையும் தன்னையும், ஆசனத்தையும் மந்திரத்தால் புனிதமாக்கப்பட்ட நீரால் தெளித்து சுத்தம் செய்துகொள்ளவேண்டும்.
பின்னர் அந்த மூர்த்தியின் மூலமந்திரத்தால் அங்க நியாஸம், கர நியாஸம், ஹ்ருதய நியாஸம் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.
தன் தேவதை தன் கணங்கள், பார்ஷதர்களோடு விளங்குவதாக எண்ணி மூர்த்திக்கு பாத்யம், அர்க்யம், ஆசமனம், பால், ஸ்நானம், வஸ்திரம், ஆபரணங்கள், சந்தனம், புஷ்பம், தயிர், அக்ஷதை, மாலை, தூபம், தீபம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அர்ச்சனை, ஸ்லோகங்கள், ஸ்துதிகள் ஆகியவற்றைச் செய்து நமஸ்காரம் செய்யவேண்டும். பின்னர் நிர்மால்யத்தை தலையில் வைத்துக்கொள்ளவேண்டும். ஸ்வாமியை அதனிடத்தில் வைக்கவேண்டும்.
இவ்வாறு அக்னி, சூரியன், தண்ணீர், அதிதி, மற்றும் ஆத்மாவாக விளங்கும் பகவான் ஆகியவர்களைப் பூஜை செய்து வருபவன் வெகு விரைவில் சம்சாரச் சுழலினின்று விடுபடுவான்
என்றார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment