ஸ்ரீ சுகர் மேலும் தொடர்ந்தார்.
ஹே பரீக்ஷித்! ஒரு முறை ப்ரும்மா தன் மானஸ புத்திரர்களான ஸநகாதி முனிவர்கள், ப்ரஜாபதிகள், பூதகணங்கள், பரமேஸ்வரன், மருத் கணங்கள், இந்திரன், பதினோரு ஆதித்யர்கள், அஷ்ட வசுக்கள், அஸ்வினி குமாரர்கள், ரிபு, ஆங்கீரஸர், ருத்ரர்கள், விஸ்வே தேவர்கள், ஸத்யர்கள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், நாகர்கள், ஸித்த சாரணர்கள், குஹ்யர்கள், ரிஷிகள், பிதரர்கள், வித்யாதரர்கள், மற்றும் கின்னரர்கள் ஆகிய அனைவரும் புடை சூழ துவாரகை வந்தார்.
அனைவரும் எல்லா மங்களங்களையும் அருளும் அழகிய வடிவினனான கண்ணனைக் கண் இமைக்காமல் வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பின்னர் தாங்கள் கொண்டுவந்த மலர்களால் பூமாரிப் பொழிந்து துதித்தனர்.
கர்மத்தளையிலிருந்து விடுபட்டு இறையுணர்வில் திளைக்கும் பக்தர்களின் ஹ்ருதயத்தில் தங்கள் திருவடிகள் ப்ரகாசிக்கின்றன. அவற்றை மனம் வாக்கு காயம் ஆகியவற்றால் வணங்குகிறோம்.
வெல்லமுடியாதவரே! தங்களுடைய ஏவலான முக்குண வடிவு கொண்ட மாயையை வெல்வது கடினம். ஆனால் அது உங்களிடம் ஒட்டுவதில்லை.
தீய எண்ணம் கொண்டவர்க்கு எத்தகைய உயர்ந்த சடங்கினாலும் மனத்தூய்மை ஏற்படாது. தங்கள் அடியார்க்கோ தங்கள் புகழ், லீலை, குணம் ஆகியவற்றைக் கேட்பதாலேயே சித்த சுத்தி எளிதாகிறது.
பக்தர்கள் சரணடையும் தங்கள் திருப்பாதங்கள் எங்களின் தீய எண்ணங்களை அழிக்கும் கொள்ளியாகட்டும்.
புலன்களைக் கட்டிய சாதுக்கள் சதுர்வியூக வடிவில் தங்களை வழிபட்டு பரமபதம் அடைகிறார்கள்.
வேத நெறியில் செல்லும் பக்தர்கள், ஞானநெறியில் ஆன்மவிசாரம் செய்பவர்கள், தங்கள் லீலைகளைப் பாடிப்பரவும் பக்தர்கள் அனைவரும் த்யானிப்பது தங்கள் திருப்பாதங்களைத்தான்.
அடியார்கள் சாற்றும் வனமாலைகள் தங்கள் மார்பிலுள்ள மஹாலக்ஷ்மி தேவியுடன் போட்டி போடுகின்றன. அந்த மாலைகளில் இருக்கும் துளசியால் தங்கள் மனம் மகிழ்கிறது.
வாமன அவதாரம் செய்யும்போது இரண்டாவது அடியைத் தேவலோகத்தில் வைத்தீர்கள். அதைக் கண்டு தேவ அசுரப் படைகள் அனைத்தும் நடுங்கின.
தங்கள் திருப்பாதங்கள் சாதுக்களுக்கு நற்கதியையும் தீயோர்க்கு நரகத்தையும் அளிக்கின்றன. அவை எங்களைப் புனிதப்படுத்தட்டும்.
ப்ரும்மா முதல் சரீரம் கொண்ட அனைத்து ஜீவன்களுக்குள்ளும் சண்டை சச்சரவு உண்டு. ஆனாலும் அனைவரும் மூக்கணாங்கயிற்றால் பிணைக்கப்பட்ட மாடுகள் போல் தங்களது ஆளுமைக்குக் கீழ்ப்படிகின்றனர்.
ஹிரண்யகர்பனாக இருந்து மஹத் தத்வத்தைக் கருவாகத் தாங்குகிறீர்கள். பின்னர் மாயையைச் சேர்த்து நிலம், நீர், ஆகாயம், காற்று, அக்னி, மஹத் தத்வம், அஹங்காரம் ஆகியவற்றுடன் ஏழு உறைகளைக் கொண்ட பொன்வண்ணமான அண்டத்தைப் படைக்கிறீர்கள்.
இந்த அண்ட சராசரம் முழுவதற்கும் தாங்களே தலைவர். அனைத்து புலன்களின் ஆதார சக்தி தாங்களே எனினும் அவற்றில் ஒட்டுவதில்லை. புலன்களை வென்றவர்களோ அவற்றைப் பார்த்து பயந்துகொண்டே இருக்கிறார்கள்.
தங்களது பதினாறாயிரம் மனைவிகளும் ஆன வரை முயன்றும் தங்களைக் காமவசப்படுத்த இயலவில்லை.
தங்கள் சரணங்களிலிருந்து இரண்டு நதிகள் பெருகுகின்றன.
முதலாவது நதி தங்களது நாம கீர்த்தனம். அதில் மூழ்குபவர் அனைவரும் மனத்தூய்மை பெற்று தங்களை அடைகின்றனர். இரண்டாவது நதி கங்கை. தங்கள் திருவடிகளைக் கழுவிய அதன் நீரில் மூழ்குபவர்கள் புனிதமடைகின்றனர். புண்ணியாத்மாக்கள் இவ்விரண்டு நதிகளிலும் நீராடுகிறார்கள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment