பரமேஸ்வரன் உடனடியாக மகிழ்ச்சியடையக் கூடியவர் என்பதற்கு உதாரணமாக வ்ருகாஸுரனின் கதையைச் சொல்வர் பெரியோர்.
சகுனி என்பவனின் (மஹாபாரத சகுனி அல்ல) புதல்வன் வ்ருகன் என்பவன். அவன் ஒரு அசுரனாவான். அவன் உலகனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஆள விரும்பினான். அனைவரும் அவனைக் கண்டாலே அஞ்சி ஓடும்படி செய்தால், உலகை ஆளலாம் என்று எண்ணினான்.
அன்பினால் ஆள்பவருக்கே வெற்றி. அதிகாரத்தால் ஆள நினைப்பவருக்கு அப்போதைக்கு வெற்றி கிடைத்தாலும் அது நீடிக்காது. படுகுழியில் வீழ்வர் என்பதை அவன் அறியவில்லை போலும். அதிகாரம் தரும் போதை மிகக் கொடியது.
தவம் செய்து ஏதாவதொரு மாபெரும் சக்தியைப் பெற்றுவிட்டால் தன் எண்ணம் ஈடேறும் என்று எண்ணிக் கொண்டே சென்றான். அவன் செல்லும் வழியில் நாரதரைக் கண்டதும் வணங்கி, அவரிடம் கேட்டான்.
மஹரிஷீ! வணக்கம். ப்ரும்மா, விஷ்ணு, சிவன் மூவருள் எந்த தெய்வம் விரைவில் மகிழ்ந்து அருளும்?
என்று கேட்டான்.
அவருக்கு அவனது எண்ணம் புரியாமல் இல்லை. முக்காலமும் உணர்ந்த அவர் மிகவும் எச்சரிக்கையாக பதில் சொன்னார்.
வ்ருகா! பரமேஸ்வரனே விரைவில் மகிழ்பவர். விரும்பியதனைத்தையும் தருபவர். ஆனால், தவறு செய்தால் உடனே கோபிக்கவும் செய்வார். அவரிடம் அபசாரப் பட்டால் அழிவு நிச்சயம்.
ராவணனும் பாணனும் அவரைத் துதிபாடகர்கள்போல் விடாமல் துதி செய்து பெருஞ்செல்வம் பெற்றனர். அதனால் அவருக்குச் சங்கடம் உண்டாயிற்று. பின்னர் அதிகாரத்தினால் அவரையே அவமதித்து அழிவைத் தேடிக்கொண்டனர்.
என்றார்.
அவரை வணங்கிவிட்டுக் கிளம்பிய வ்ருகன் நேராக கேதாரம் சென்றான். அங்கே ஒரு அக்னிகுண்டம் மூட்டி, தன் உடலின் அங்கங்களையே அறுத்து ஹோமம் செய்து பரமேஸ்வரனை வழிபட்டான்.
ஆறுநாள்கள் அவ்வாறு பூஜை செய்தும் பரமேஸ்வரன் தரிசனமளிக்காததால், ஏழாவது நாள், கேதாரத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடி, தனது ஈரத்தலையை வெட்டி அக்னியில் போட்டு ஹோமம் செய்யத் துணிந்தான்.
அவனது உயிர்போகும் தறுவாயில், தற்கொலை செய்துகொள்பவனைக் காக்கும் கருணையுடன் பரமேஸ்வரன் தோன்றினார். அவன் அக்னி குண்டத்திலிருந்து மற்றொரு அக்னியைப் போல் காட்சியளித்தார். தன் திருக்கரங்களால் அவன் கரங்களையும் தலையையும் பிடித்து அறுபடாமல் காத்தார். பரமேஸ்வரனின் திருக்கரம் பட்டதும் அவனது தலை முன்போலாயிற்று.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment