நிமிச் சக்ரவர்த்தி நடத்திய ஸத்ர யாகத்திற்கு நவ யோகிகள் எதேச்சையாக வந்தனர்.
நவயோகிகளிடம் பாகவத தர்மத்தை எடுத்துக்கூற வேண்டி நிமிச் சக்ரவர்த்தி கேட்டார்.
நவ யோகிகளுள் ஒருவரான கவி என்பவர் பதிலிறுத்தார்.
பகவான் தன்
அடியார்களை ஒரு போதும் கைவிடுவதில்லை. பகவானின் திருவடியை எப்போதும் பற்றிக்கொள்பவர்களுக்கே நிரந்தரமான பேரானந்தம் சாத்தியமாகிறது.
நான் எனது என்ற அஹங்கார, மமகாரங்களும் இறைவனின் திருவடியைப் பற்றுவதால் விலகிப்போகின்றன. அவர்களுக்கு உலகப்பொருள்களில் வெறுப்பு உண்டாகிறது. இதையே பகவான் பகவத் கீதையிலும் சொல்கிறான்.
அத்தகைய அடியார்களுக்கு எல்லாப் பொருள்களும் பரமாத்மாவின் வடிவங்களாகவே தெரிகின்றன.
பாமரர்களும் தன்னை எளிதில் அடைவதற்காக பகவான் தன் வாயாலேயே கூறியருளிய மார்கம் இந்த பாகவத தர்மம்.
இதைக் கடைப்பிடிப்பவர்க்குத் துன்பங்களே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு ஓடினாலும் கீழே விழமாட்டார். பாதை தவறமாட்டார். நிச்சயமாகப் பலனை அடைந்துவிடுவார். அவர்கள் எப்போதாவது விதிமுறைளிலிருஎது விலகினாலும் அது அவர்களைப் பாதிக்காது.
தன்னுடைய உடல், சொல், மனம், புலன்கள் புத்தி, தன்முனைப்பு, இயல்பு, அனைத்தினாலும் செய்கின்ற எல்லாச் செயல்களையும் பகவானுக்கு அர்ப்பணம் செய்துவிடுவதே எளிய வழி.
பகவானைத் தவிர வேறு பொருளில் நாட்டம் வருமானால் அது அச்சத்திற்கு வழி வகுக்கும். அவர்கள் தங்களுடைய உண்மைத் தோற்றத்தை மறந்துபோகிறார்கள்.
கனவுக்காட்சிகள் அனைத்தும் பொய்த்தோற்றம் என்பது விழித்ததும் தெரியும். அதைப்போலவே விழித்துக்கொண்டிருக்கும்போது நாம் காணும் பொருள்களும் தோற்றமும் பொய்யானவை. எனவே அவற்றில் சிக்கித் தவிக்கும் புத்தியின் எண்ண ஓட்டத்தை நிறுத்துவதே தெளிந்த ஞானம் பெறும் வழி.
பகவான் இவ்வுலகில் பிறந்து பற்பல லீலைகளைச் செய்துள்ளார். அவற்றைக் குறிக்கும் பல்வேறு பெயர்களும் அவருக்கு ஏற்பட்டுள்ளன. மங்களமயமான அத்திஉப்பெயர்களைக் கேட்டும் பாடியும் பரவியும் அனுபவிக்க வேண்டும்.
நாமகீர்த்தனம் செய்பவரின் உள்ளம் கனிந்து கசிந்து கொஞ்சம் கொஞ்சமாக பகவானின் பேரன்பை உள்ளத்தில் நிரப்பி விடுகிறது. அதன் விளைவாக அவர் சில சமயங்களில் உலக இயல்புக்கு மாறாக நடக்க்கக்கூடும். பக்தி மேலீட்டால் ஆடுவார், பாடுவார், கூவுவார், பித்து பிடித்தவர் போல் அலைவார்.
ஆகாயம், காற்று, அக்னி, நீர், நிலம், விலங்குகள், ஜீவன்கள், திசைகள், மரம், செடி கொடிகள், ஆறு, கடல் ஆகிய அனைத்துமே பகவானின் உருவங்களே. எனவே எதைக் கண்டாலும் பகவானின் நினைவு வரவேண்டும். காக்கைச் சிறகினில் நந்தலாலாவைக் கண்டார் நமது முண்டாசுக் கவி.
பக்தி, பகவத் தரிசனம், எல்லாப் பொருள்களிலும் பற்றை விடுதல் ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் நிகழும். அதாவது பக்தி பூரணமாக சித்திக்கும் அதே கணத்தில் பகவத் தரிசனம் ஏற்படும். அப்போதே பற்றுகள் விடும். எப்படியெனில், உணவை உண்ணும்போதே, த்ருப்தி ஏற்படுகிறது, அதே நேரத்தில் பசி நீங்குகிறது, உடலுக்கு சக்தி கிடைக்கிறது, ருசியும் உணரமுடிகிறது. அனைத்தும் உணவை உண்ணும் அதே நேரத்தில் நிகழ்கின்றன.
இத்தகைய பக்தர் பகவானுக்கு மிகவும் பிரியமானவர். அவர் பேரமைதியை அடைந்து அதை ஆழ்ந்து அனுபவிக்கிறார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..