Saturday, September 5, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 555

#ச்ருதி_கீதை

வேதங்கள் பகவானைப் பார்த்துக் கூறுகின்றன.

இவ்வுலகம் ஸத் ஆன தங்களிடமிருந்து தோன்றினாலும் பொய்யான பல தோற்றங்களைக் கொண்டிருப்பதால் ஸத் அல்ல. இவ்வுலகில் கர்மானுஷ்டானங்களைச் செய்வதால் அவற்றிற்குப் பலன் சொல்லப்பட்டிருக்கிறதுதான்‌. ஆனால் அவற்றை உள்ளத் தூய்மையுடனும், உயிர்களிடத்து அன்புடனுடம் பற்றின்றிச் செய்துவந்தால் தங்களை அடையும் மார்கம் திறக்கும். இல்லாவிடில் கர்மாக்களின் பயன்களில் மாட்டிக்கொள்வார்கள்.

உலகை வெளிப்படையாகத் துறந்தாலும் உள்ளத்தில் காமவாசனைகள் இருப்பவன், நீங்கள் உள்ளத்திலேயே குடியிருந்தபோதிலும் உணரமுடியாதவன் ஆகிறான். 

ரத்தினமாலையைக் கழுத்தில் போட்டுக்கொண்டே ஊரெல்லாம் தேடுவதைப் போன்றது இது.

புலன் இன்பங்களை வெறுக்காதவரை ஒருவனுக்குச் சுகம் என்பது இம்மையிலும் இல்லை. மறுமையிலும்‌ இல்லை.

தங்கள் ஸ்வரூபத்தை அறிந்த பக்தன், கர்மங்களின் பயனாகிய இன்ப துன்பங்களைத் துச்சமாக எண்ணுகிறான். அனுபவம், பொருள் இரண்டின் தொடர்பையும் மனத்தளவில் அறுக்கிறான்.

இதைச் செய்யவேண்டும், செய்யக்கூடாது என்ற விதிகளும் அவன் வரையில் ஒதுங்குகின்றன. அத்தனை விதிகளும் உடலை ஆன்மா என்று எண்ணும் அறிவிலிகளை நெறிப்படுத்துவதற்காக கொடுக்கப்பட்டவை. அவனுக்கு உடல் பற்றிய அபிமானம் இல்லாததால் அவன் அதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. அவனுக்குத் தாங்கள் முக்தியளிக்கிறீர்கள்.

இந்திரன், ப்ரும்மா முதலியவர்களுக்கும் தங்கள் ஸ்வரூபம் பற்றிய பூரண அறிவு இல்லை. வியப்பு யாதெனில் தங்களுக்கே கூட தங்களுடைய பூரண ஸ்வரூபம் தெரியாது.

ஒரு பெரிய கோடீஸ்வரனுக்குப் பல நாடுகளில் சிறியதும் பெரியதுமாக பல‌நிறுவனங்களும் அசையும், அசையா சொத்துக்களும்‌ இருக்கும். அவற்றைப்‌ பற்றிய முழு விவரங்களை அவனே அறியமாட்டான். அவற்றை நிர்வாகம்‌ செய்ய பல நிலைகளில் அலுவலர்களை வைத்துக்கொள்வான். அதுபோலத்தான் தாங்களும்.

அனைத்துலகும் அதற்கு அப்பாற்பட்டவைகளும் தங்களுடையவைதான். அவற்றின் விவரங்கள் தங்கள் பேரறிவையும் விஞ்சி நிற்பவை. 

காற்றில் தூசி பறப்பது போல ஏழு ஆவரணங்கள் கொண்ட கோடி கோடி ப்ரும்மாண்டங்களும் தங்கள் வயிற்றினுள் கூட்டம் கூட்டமாக காலச் சக்கரத்திற்காட்பட்டு சுழன்று கொண்டிருக்கின்றன. 

இப்போது சொல்லுங்கள் தங்கள் பேராளுமைக்கு எல்லைதான் எது?

தங்களுக்கு ஒப்புமையாக ஏற்றிக்கூற ஒரு பொருளும் இல்லை. அதனால் இது இல்லை, இது இல்லை என்று ஒவ்வொரு பொருளாகத் தள்ளிக்கொண்டே வந்தால் கடைசியாக விஞ்சும் எல்லைநிலம் தாங்களே.

எனவே வேதங்களாகிய நாங்களும் தங்களிடமிருந்தே துவங்கி தங்களுக்குள் அடங்குகிறோம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment