கோகுலத்தில் கண்ணன் கோபியரின் கைப்பாவையாக இருந்தான்.
பல நேரங்களில், அவர்களின் கட்டளைக்கேற்ப படி, பலகை ஆகியவற்றை எடுத்துவந்து கொடுப்பான். ஒரு மூன்று வயதுக் குழந்தை எப்படி ஒரு பலகையைத் தூக்குமோ அப்படி, தூக்கமாட்டாமல் தூக்கிக்கொண்டு தள்ளாடித் தள்ளாடி நடந்து வருவான். அவனைப் பார்த்தால் இவனா அசுரர்களைக் கொன்றான் என்று தோன்றும்.
ஒரு சமயம் நந்தகோபரின் பாதரக்ஷைகளை தலைமேல் வைத்து எடுத்து வந்து கொடுத்தான்.
நந்தனுக்கு கண்ணன் தெய்வீகக் குழந்தை என்பது தெரியாமல் இல்லை. ஆனாலும் , கண்ணனின் மாயை அவரை அதற்குமேல் யோசிக்கவிடாமல் கட்டிப்போட்டிருந்தது. தன் பாதரக்ஷையைத் தலைமேல் சுமந்து வரும் கண்ணனை நினைந்து நினைந்து நெகிழ்ந்தார் அவர்.
தன்னுடைய பாலலீலைகளால் கோகுலத்தில் இருந்தவர்களுக்கு எல்லையில்லாத இன்பத்தை அளித்தான் கண்ணன்.
முத்தமிடுகிறேன் என்று சொல்லி கன்னத்தைக் கடித்துவைப்பதும், வெண்ணெய்யைத் திருடி உண்டுவிட்டு, அவர்களை யசோதையிடம் மாட்டிவிடுவதும், யசோதையிடம் அவர்கள் புகார் சொல்வதும், கன்றுக்குட்டிகளை அவிழ்த்துவிடுவதும், யசோதையிடம் சாமர்த்தியமாக பதில் சொல்வதும் கண்ணனின் லீலைகள் எண்ணில.
பகவானின் இயல்பை அறிந்த சான்றோர்களுக்கு அவன் பக்தர்களுக்கு ஆட்பட்டவன் என்பதை இத்தகைய லீலைகளால் நன்கு உணர்த்தினான்.
ஒருநாள், வாசலில் பழம் வாங்கலியோ பழம் என்ற நடுங்கும் குரல் கேட்டது.
குடுகுடுவென்று வாசலில் ஓடிய கண்ணன், பழக்கூடையைச் சுமந்துகொண்டு ஒரு பாட்டி நிற்பதைக் கண்டான்.
எனக்கு பழம் தருவீங்களாம்மா..
அன்பின் தலைவன் அன்பொழுகக் கேட்டால் மறுப்பவர் யார்?
அதுவும் யாருமில்லாத அநாதையாக வாழும் அவளை அம்மா என்று அழைக்கிறான்.
ஓ.. உங்களுக்கில்லாததா.. வாங்க சாமி என்றாள்.
அம்மா எது வாங்கினாலும் அதற்கு பதிலாக ஏதாவது தானியம் கொடுப்பதை கவனித்திருக்கிறான் கண்ணன். எனவே,
கொஞ்சம் இருங்கம்மா வரேன்.
என்று கூறிவிட்டு உள்ளே ஓடினான்.
உள் அறைக்குச் சென்று ஒரு பானையிலிருந்து கைநிறைய தானியத்தை அள்ளிக்கொண்டு தன் அழகு நடையுடன்
வந்துட்டேன்மா.. போயிடாதீங்க
என்று கூவிக்கொண்டு ததகா பிதகாவென்று ஓடிவந்தான்.
குட்டிக்குழதையின் விரலிடுக்குகளில் தானியம் நிற்குமா? ஓடி வந்த வேகத்தில் சிந்திக்கொண்டே வந்தது. அந்தக் கிழவியிடம் கையைக் கொண்டுவந்து நீட்டியபோது அதில் பத்து தானியம்கூட இல்லை. அவளோ அவனது தாமரை மொட்டுக் கையைப் பார்க்கவில்லை. கண்ணனின் அழகு சொட்டும் தாமரை முகத்தைப் பார்த்தாள்.
தலையிலிருந்த சும்மாட்டுத் துணியை எடுத்து விரிக்க, அதில் கையை உதறினான் கண்ணன். பின்னர் தன் கூடையிலிருந்த அத்தனை பழங்களையும் கண்ணன் கையில் அடுக்கினாள்.
அன்றைக்கு வியாபாரமே ஆகவில்லை அவளுக்கு. கண்ணனோ பத்து தானியங்களைக் கொண்டுவந்து கொடுத்திருக்கிறான். அப்படியும் அவள் எதையும் எண்ணவில்லை. அவளது மனம் நிறைந்திருந்தது.
குழந்தை அம்மா என்று அழைத்தானே. எவ்வளவு அழகான குழந்தை. அவன் குழந்தையா, தெய்வமா? அவன் குரல் இவ்வளவு இனிமை. நான் வணங்கும் தெய்வமே வந்தாற்போலிருக்கிறதே.
தன்னை மறந்தாள் அவள். சும்மாட்டுத் துணியை சுருட்டி பத்திரமாகக் கூடையில் வைத்துக்கொண்டு தள்ளாடி தள்ளாடி நடந்தாள். வண்டி மாட்டைப்போல் அநிச்சையாய் வீட்டை அடைந்தாள். போகும் வழியில் எல்லாம் கண்ணனின் முகமே கண்களில் நிற்க, வாயோ கான்ஹா கான்ஹா என்று அவன் பெயரைச் சொல்லிக்கொண்டே இருந்தது.
வீட்டை அடைந்ததும் கூடையைத் தலையிலிருந்து இறக்க முயற்சி செய்தாள். அவள் தள்ளாடுவதைப் பார்த்து பக்கத்துவீட்டுப் பெண்மணி ஓடிவந்து
விழுந்துடாதீங்க பாட்டீ. என்ன வியாபாரமாகலையா. கூடை இவ்ளோ கனமா இருக்கு?
என்று கூறிக்கொண்டே இறக்கி வைத்தாள். அப்போதுதான் பாட்டிக்கு உறைத்தது.
எல்லாப் பழத்தையும்கொடுத்துட்டேனே. கூடைல மிச்சம் இருக்கான்ன?
என்று கேட்டுக்கொண்டு அவசரம் அவசரமாகத் துணியைத் திறந்தாள். உள்ளே நவரத்னங்களும், வைரங்களும், வைடூர்யங்களும் அவளைப் பார்த்துச் சிரித்தன.
பாட்டீ பாட்டீ இதெல்லாம் என்ன என்று பக்கத்துவீட்டுப்பெண் அவளை உலுக்க, அந்த பாக்யவதிக்கு ஒவ்வொன்றும் கண்ணனாகவே தெரிந்தன.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
No comments:
Post a Comment