ஒரு நாள் யசோதை தயிர் கடைந்துகொண்டிருந்தாள். தயிர் கடையும்போது கயிற்றின் தாள லயத்திற்கேற்ப கண்ணனின் லீலைகளைப் பாடலாகப் பாடிக்கொண்டே கடைந்தாள்.
ஒட்டியாணத்தால் இடுப்பில் பட்டாடை இறுகிப் போயிருந்தது. கயிற்றை இழுப்பதால் ஏற்படும் அசைவினால் அவள் காதிலிருந்த குண்டலங்களும், கழுத்திலிருந்த திருமாங்கல்யமும், கைவளையல்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு சீரான ஒலியை எழுப்பிக்கொண்டிருந்தன.
அப்போது கண்ணன் ஓடிவந்தான். அவனது சலங்கை, தண்டை மற்றும் கிண்கிணி ஒலிகள் அவன் வருகையைப் பறை சாற்றின.
ஓடிவந்த கண்ணன் மத்தைப் பிடித்துக்கொண்டு தயிர் கடைய விடாமல் தடுத்தான்.
அம்மா, பால். என்று கேட்க,
யசோதை தயிர் கடைவதை நிறுத்திவிட்டு கண்ணனை மடியில் அமர்த்திப் பால் குடிக்கச் செய்தாள். அதற்குள் அடுப்பில் வைத்திருந்த பால் பொங்கும் ஓசை வந்தது. பணிப்பெண்களை அழைத்துப் பார்த்தாள். அப்போதைக்கு எவரும் அங்கில்லை.
யசோதை தயிர் கடைவதை நிறுத்திவிட்டு கண்ணனை மடியில் அமர்த்திப் பால் குடிக்கச் செய்தாள். அதற்குள் அடுப்பில் வைத்திருந்த பால் பொங்கும் ஓசை வந்தது. பணிப்பெண்களை அழைத்துப் பார்த்தாள். அப்போதைக்கு எவரும் அங்கில்லை.
ஒரு கங்காளம் நிறைய பால் பொங்கி கோட்டை அடுப்பில் வழிந்தால், பால், பாலாடை எல்லாம் வீணாகும். அடுப்பைச் சுத்தம் செய்வதும் கடினம். மேலும் அந்தப்பாலும் கண்ணன் குடிப்பதற்காக காய்ச்சிய பால்தான். எனவே, சட்டென்று கண்ணனை இறக்கி விட்டுவிட்டு வேகமாக உள்ளே ஓடினாள் யசோதை.
தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்த கண்ணனுக்கு, குடித்து முடிப்பதற்கு முன் சடாரென்று இறக்கி விடப் பட்டதும், வந்ததே கோபம்.
கண்கள் சிவக்க, உதடுகள் துடிக்க, நறநறவென்று பற்களைக் கடித்துக்கொண்டு, பக்கத்தில் இருந்த அம்மிக் குழவியை எடுத்து தயிர்ப்பானையை உடைத்தான். கண்களில் பொய்யாக நீர் பெருக, கையில் கிடைத்த மத்தைக் கொண்டு அங்கு வைத்திருந்த மற்ற பானைகளையும் விளாசினான். இன்னொரு பானையை அடிக்கப்போனபோது, உள்ளிருந்து வெண்ணெய் எட்டிப் பார்த்தது. வெண்ணெய்ப்பானையை உடைக்க மனம் வரவில்லை. யசோதையின் கைப்பக்குவத்தால் கடைந்த வெண்ணெய்யின் ருசியை அறிவானல்லவா?
வெண்ணெய்ப் பானையை எடுத்து உண்ண ஆரம்பித்தான். அதைக் காலி செய்துவிட்டு, அடுத்த வெண்ணெய்ப் பானையை எடுத்தான். யசோதை வரும் சத்தம் கேட்டதும், மறக்காமல் பானையை எடுத்துக்கொண்டு தோட்டத்திற்கு ஓடினான்.
அங்கே ஒரு உடைந்த உரல் கிடந்தது. அதன் மீது ஏறி அமர்ந்து மடியில் பானையை வைத்துக்கொண்டு, நன்றாக ரசித்து உண்ணத் துவங்கினான். வழக்கம்போல் குரங்கார் அங்கு வர, அம்மாவின் வெண்ணெய்யை அதற்கும் கொடுத்து, முகத்திலும் அப்பிவிட்டான்.
யாராவது வரும் சத்தம் கேட்டால் ஊம் ஊம் என்று வாயில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டே பொய்யழுகை அழுதான்.
அடுப்பை அணைத்துவிட்டு வெளியில் வந்த யசோதைக்கு, வழி தவறி பாற்கடலை அடைந்துவிட்டோமோ என்று சந்தேகம் வந்துவிட்டது. வீடு முழுதும் வெள்ளை வெளேரென்று வெண்ணாறு ஓடியது. கண்ணனின் வேலைதான் என்றறிந்தவள்.
இத்துனூண்டு இருந்துண்டு இந்தப் பிள்ளைக்கு கோவத்தைப் பாரு என்று
தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
இருந்தாலும், இவ்வளவு கோவம் நல்லதுக்கில்லை. இன்று அவனைக் கண்டித்து புத்தி புகட்டவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.
கண்ணன் எங்கிருக்கிறான் என்று தேடினாள். தோட்டத்தில் உரலின் மீது அமர்ந்திருக்கக் கண்டாள். சத்தம் போடாமல், மெதுவாகப் பூனை நடையாகச் சென்று கண்ணனின் பின்னால் சென்றாள்.
கண்ணனுக்கு அம்மா வருவது தெரியாமல் இல்லை.
பிறகேன் கண்ணன் எழுந்து ஓடவில்லை என்றால், கையிலிருந்த பானையின் வெண்ணெய் தீரவில்லை. ஆறு அமர வெண்ணெய்யை ரசித்து விழுங்கவும், யசோதா கண்ணனின் அருகில் வரவும் சரியாக இருந்தது. யசோதா அவனை எட்டிப் பிடிக்கும் நேரம், காலியான வெண்ணெய்ப் பானையை எடுத்துத் தரையில் போட்டுடைத்துவிட்டு உரலிலிருந்து துள்ளி இறங்கி ஓடினான் கண்ணன்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment