உரலில் கட்டுப்பட்டு அங்கேயே நின்று கொண்டிருந்த கண்ணன், சுற்றுமுற்றும் பார்த்தான். எல்லோரும் தூரத்தில் வேலை செய்துகொண்டிருந்தனர். ஒருவரும் அவனைப் பார்க்காத சமயம் உரலைப் பிடித்துத் தள்ளினான். அது கீழே விழுந்து உருளத் துவங்கியது. அதில் கட்டியிருந்த கயிற்றைப் பிடித்து இழுத்தான்.
அது உருண்டு கண்ணன் இழுத்த இழுப்பிற்கு வந்தது. அதை இழுத்துக்கொண்டு நடப்பது கடினமாக இருந்ததால் தவழத் துவங்கினான்.
அங்கே இரட்டை மருதமரங்கள் இருந்தன. அவற்றிற்கிடையே நுழைந்து அந்தப் பக்கம் சென்றுவிட்டான். உருண்டு சென்ற உரலால் மரங்களின் இடுக்கில் செல்ல இயலவில்லை. சிக்கிக்கொண்டன. திரும்பிப் பார்த்த கண்ணன், உரல் வராததைக் கண்டு, கயிற்றைப் பிடித்து இழுத்தான். உரலால் இடிபட்டதும் மடமடவென்ற பெரிய சத்தத்துடன் இரண்டு மரங்களும் முறிந்து விழுந்தன.
அம்மரங்களிலிருந்து இரண்டு யக்ஷர்கள் வெளியில் வந்தனர். அவர்கள் கண்ணனைத் துதித்துவிட்டுக் கிளம்பிச் சென்றனர்.
மரங்கள் முறிந்து விழுந்ததும், அனைவரும் அதிர்ந்துபோனார்கள். தூரத்திலிருந்த கோபர்களும் கோபிகளும் கண்ணனுக்கு என்னவாயிற்றோ என்று பயந்துபோய் ஓடிவந்தனர்.
அதற்குள் சற்று அருகிலிருந்த சிறுவர்கள் கண்ணா கண்ணா என்று அழைத்துக்கொண்டு ஓடிவரவும், கந்தர்வர்கள் கிளம்பிச் செல்லவும் சரியாக இருந்தது.
மரங்களைத் தாண்டி தாண்டி ஓடிவந்த கோபர்கள், அங்கே திருதிருவென்று விழித்துக்கொண்டு அமர்ந்திருந்த கண்ணனைப் பார்த்ததும், குழந்தைக்கு ஒன்றும் அடிபடவில்லை என்று ஆறுதலடைந்தனர். பின்னர் உரலின் கட்டை அவிழ்த்து குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்தனர். யசோதை போட்ட முடிச்சை அவிழ்க்கவில்லை. கயிறு கண்ணன் இடுப்பிலேயே தொங்கிக்கொண்டு வந்தது.
டமடமவென்ற சத்தம் கேட்ட யசோதை கையிலிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு அலறிக்கொண்டு ஓடிவந்தாள். அவளிடம் குழந்தையைக் கொடுத்ததும், வாரி முத்தமழை பொழிந்தாள். கண்ணனின் உடல் முழுவதும் தடவி அடிப்பட்டிருக்கிறதா என்று பார்த்தாள். அன்னையைக் கண்டதும் அழத் துவங்கியிருந்தான் கண்ணன்.
இனி உன்னைக் கட்டிப்போடமாட்டேன் தங்கமே என்று கூறிக்கொண்டு உள்ளே தூக்கிக்கொண்டுபோனாள்.
குழந்தையைப் போய் கட்டிப்போட்டியே. என்னாச்சு பாத்தியா என்று திட்டிக்கொண்டே அவளைப் பின் தொடர்ந்தனர் மற்ற கோபியர். அவர்கள்தான் முந்தைய நாள் வரை கண்ணனின் விஷமத்தைப் புகார் செய்தவர்கள்.
அதற்குள் நந்தனும் வந்துவிட, அங்கிருந்த சிறுவர்களைக் கூப்பிட்டு என்ன நடந்தது என்று விசாரித்தார்கள் கோபர்கள்.
அவர்களோ,
குழந்தை உரலை இழுத்துக்கொண்டு மரங்களின் நடுவில் போனான். உரல் சிக்கிக்கொண்டது. உரலை இழுத்தான். மரங்கள் விழுந்துவிட்டன. அதிலிருந்து இரண்டு பேர் வந்தனர். கண்ணனுடன் ஏதோ பேசினர். நாங்கள் அருகில் சென்றதும் அவர்கள் மறைந்துவிட்டனர்
குழந்தை உரலை இழுத்துக்கொண்டு மரங்களின் நடுவில் போனான். உரல் சிக்கிக்கொண்டது. உரலை இழுத்தான். மரங்கள் விழுந்துவிட்டன. அதிலிருந்து இரண்டு பேர் வந்தனர். கண்ணனுடன் ஏதோ பேசினர். நாங்கள் அருகில் சென்றதும் அவர்கள் மறைந்துவிட்டனர்
என்றார்கள்.
சிறு குழந்தை இழுத்ததால் மரங்கள் சாயுமா என்ன என்று சொல்லி அவர்கள் நம்பவில்லை. ஆனால் சிலர், இதற்கு முன் வந்த அசுரர்கள் அழிந்ததை நினைத்து அப்படியும் இருக்கலாம் என்று பேசினர்.
உள்ளே வந்து குழந்தையைப் பார்த்த நந்தன், கண்ணனின் இடுப்பில் கட்டியிருந்த கயிற்றைப் பார்த்து சிரித்துக்கொண்டார்.
பதறிப்போய்க் கண்கள் கலங்கியிருந்த யசோதையிடம்,
ஒன்றும் பயப்படாதே. இவனுக்கு எதுவும் ஆகலியே. இன்னுமா இதை அவிழ்க்கல?
என்று கேட்டுக்கொண்டே கயிற்றை அவிழ்த்துவிட்டார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment