ஒரு சமயம் இராமன் மக்களின் மனநிலையை அறிய எண்ணி, மாறுவேடத்தில் நகரசோதனைக்குச் சென்றார்.
அப்போது ஒரு வீட்டிலிருந்து உரத்த குரலில் ஒருவன் பேசும் சத்தம்கேட்டது.
அடியே! ஓடுகாலி! நீ மாற்றான் வீட்டிலிருந்து வருகிறாய். அப்படிப்பட்ட பெண்ணை, பெண்பித்து பிடித்த இராமன் வேண்டுமானால் ஏற்கலாம். நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன்.
அறியாமையினால் சூழப்பட்ட உலகில் இறைவனே ஆனாலும், அனைவரையும் திருப்தி செய்வது இயலாது. இருப்பினும், இவனொருவன் மட்டுமின்றி, இன்னும் சில ஒற்றர் வாயிலாகவும், நாட்டு மக்கள் அரசல் புரசலாக தன்னைப் பற்றிப் புறம் பேசுவதைக் கேள்வியுற்றான் இராமன்.
நாட்டு மக்களுக்கு உதாரண புருஷனாக இருக்கவேண்டிய தன்னைப் பற்றிய அவதூறுகள் மக்களின் நல்லொழுக்கத்தைப் பாதிக்கும் என்பதால், சீதையைத் தியாகம் செய்துவிட்டான். பிராட்டி காட்டிலுள்ள வால்மீகியின் ஆசிரமத்தில் தஞ்சமடைந்தாள்.
சீதை பூமியிலிருந்து வந்தவள். வால்மீகியும் புற்று மண்ணிலிருந்து வெளிப்பட்டவர். அவர் சீதைக்கு சகோதரன் முறையாகிறது. கர்பிணியாக இருந்த சீதை பேறுகாலத்திற்காக தாய்வீட்டை அடைந்ததுபோல் இந்நிகழ்வு அமைந்துவிட்டது.
சீதாதேவிக்கு இரு பிள்ளைகள் பிறந்தன. லவன், குசன் என்ற அவர்கள் இருவர்க்கும் வால்மீகி ஜாதகர்மா முதலியவற்றைச் செய்வித்தார்.
இலக்ஷ்மணனுக்கு அங்கதன்,சித்ரகேது ஆகிய இரு புதல்வர்கள் பிறந்தனர்.
பரதனுக்கு தக்ஷன், புஷ்கலன் ஆகிய இருவரும், சத்ருக்னனுக்கு சுபாகு, ச்ருதஸேனன் ஆகிய இருவரும் பிறந்தனர்.
பரதன் திக்விஜயம் செய்து கோடிக்கணக்கான கந்தர்வர்களை வென்றான். அவர்களது செல்வங்கள் அனைத்தையும் எடுத்துவந்து இராமனிடம் ஒப்படைத்தான்.
சத்ருக்னன் மது என்னும் அசுரனின் புதல்வனான லவணாசுரனை வென்றான். மதுவனத்தில் மதுரை என்னும் நகரை உருவாக்கினான்.
லவனையும் குசனையும் வால்மீகியிடம் ஒப்படைத்துவிட்டு சீதை பூமிக்குள் புகுந்தாள். சீதையின் பிரிவைத் தாங்காத இராமன், கடுமையான ப்ரும்மசர்ய விரதம் பூண்டு, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒரே தொடராக அக்னிஹோத்ரம் செய்துவந்தான்.
பின்னர், தனக்குத்தானே ஒளிர்விடும் ஜோதியான வைகுண்டத்தை அடைந்தான்.
ஸ்ரீ ராமன் ஒத்தார் மிக்கார் இல்லாத பரம்பொருள். தேவர்களின் வேண்டுகோளின்படி மானுடத் திருமேனி தாங்கிவந்தார். அஸ்திர சஸ்திரங்கள் கொண்டு அணை கட்டுவதோ, அரக்கர்களைக் கொல்வதோ அவரது புகழல்ல. குரங்குகளின் உதவி அவருக்குத் தேவையா என்ன? இவை அனைத்தும் திருவிளையாடல்களே.
இராமனது புகழ், எல்லாப் பாவங்களையும் தொலைப்பது. விண்ணவர்களும், முனிவர்களும், மண்ணுலகத்தோரும் அவரது புகழைப் பாடி மகிழ்கின்றனர். அந்த இராமனையே சரணமடைகிறேன்.
இந்த சரித்திரத்தை காதாரக்கேட்டு, மனதாரச் சிந்திப்பவர்க்கு அமைதியும் மனநிறைவும் கிடைக்கின்றன. காமத்தளைகள் முழுவதும் அழிகின்றன.
என்றார் ஸ்ரீ சுகர்.
என்றார் ஸ்ரீ சுகர்.
மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment