Tuesday, July 9, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 291

பகீரதன் கங்கையை நோக்கிப் பெருந்தவம் புரிந்தான். அவன் மேல் கருணை கொண்ட கங்கா தேவி அவனுக்குக் காட்சியளித்தாள்.
பூவுலகிற்கு வரவேண்டும் என்று பிரார்த்தித்தான் பகீரதன்.

கங்கையோ,
நான் விண்ணுலகிலிருந்து மண்ணுலகில் பாயும்போது என் வேகத்தை யார் தாங்குவார்? நான் பூமியைப் பிளந்து பாதாளம் சென்றுவிடுவேன்.
மேலும், இப்பூவுலகில் பாவிகள் மிக அதிகம். அவர்கள் என்னிடம் வந்து நீராடி தங்கள் பாவத்தைப் போக்கிக்கொள்வர். நான் அந்தப் பாவங்களை எங்கு தொலைக்கமுடியும்? என்னால் பூமிக்கு வர இயலாது என்றாள்.

பகீரதன் கூறலானான்.
அம்மா! இப்பூவுலகில் பற்றற்ற ஸாதுக்களும், பக்தர்களும், ஸ்ரீ மன் நாராயணனை ஹ்ருதயத்தில் தாங்கும் அடியார்களும்‌ உள்ளனர். அவர்கள் பற்பல க்ஷேத்திரங்களுக்கும் தீர்த்தங்களுக்கும் செல்வர். அவர்கள் வந்து உங்கள் தீர்த்தத்தில் நீராடும்போது தங்கள் பாவங்களெல்லாம் பறந்தோடிவிடும். எனவே கவலை வேண்டாம்.

மேலும் ஸகல ஜீவராசிகளுக்கும் அபயம்‌ அளிக்கும் பரமேஸ்வரனைத் தங்கள் வேகத்தைத் தாங்கும்படி பிரார்த்தனை செய்கிறேன். அவர் நிச்சயமாக, தங்கள் வேகத்தைத் தாங்கி , எங்களைக் காப்பார். என்றான்.

ஸாதுக்கள் நீராடுவர் என்று கேட்டதும் மிகவும் மகிழ்ந்த கங்காதேவி,
எனில் பரமேஸ்வரனிடம் வேண்டிக்கொண்டு என்னை அழை. நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு‌ மறைந்துபோனாள்.

பகீரதன் அவ்விடத்திலேயே அமர்ந்து பரமேஸ்வரனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான். அவர் ஆசுதோஷியானதால், வெகு சீக்கிரம் பகீரதனின் தவத்தால் மகிழ்ந்து அவன்முன் தோன்றினார்.
அவரிடம் பகீரதன் தன் வேண்டுகோளை வைக்க, அவர் மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

பின்னர் கங்காதேவியைப் பிராத்தனை செய்ய, அவள் அதிவேகத்துடன் பூவுலகில் பாய்ந்தாள். தன் வேகத்தை எவராலும் தாங்கமுடியாதென்ற செருக்கு அவளிடம் இருந்தது.

மேலிருந்து விழுந்த கங்கையைத் தன் ஜடையில் தாங்கிய பரமேஸ்வரன், ஒரு சொட்டு நீரைக்கூட வெளியில் விடவில்லை. அத்தனை நீரும் சிவனாரின் ஜடைக்குள் சிறைப்பட்டது.

மேலிருந்து விழுந்த கங்கையைக் காணாமல், பகீரதன் மீண்டும் பரமேஸ்வரனை வேண்டினான். அகந்தை அழிந்த நிலையில் கங்காதேவியும் பிரார்த்தனை செய்ய, ஜடையைச் சிறிது தளர்த்தி, 7 பிரிவுகளாக வெளியில் விட்டார். அவற்றுள் பகீரதனைப் பின் தொடர்ந்து வந்த நதி பாகீரதி எனப் பெயர் பெற்றது.

வழியில் ஜஹ்னு என்னும் மஹரிஷியின் ஆசிரமத்தை முற்றிலுமாகச் சூழ்ந்துகொண்டாள் கங்கை. அவர் சினந்து கங்கை நீர் முழுவதையும் ஒரு ஆசமனம் செய்து விழுங்கி விட்டார். மறுபடியும் கங்கையைக் காணாத பகீரதன் முனிவரின் பாதங்களில் விழுந்து, கங்கையை விடுவிக்கும்படி மன்றாடினான்.

அவர், பகீரதன் மேல் கருணைகொண்டு தன் வலக்காது வழியாக வெளியில் விட்டார். ஜஹ்னு முனிவரின் உடலிலிருந்து வந்ததால் அவரது மகளாக, ஜாஹ்னவி என்றழைக்கப்படுகிறாள்.

இன்றும் அருகில் நீர் இல்லையெனில் அந்தரங்க சுத்திக்காக பெரியோர் கங்கை வசிக்கும் வலக்காதைத் தொடுவது வழக்கத்தில் உள்ளது.

பகீரதன் காற்றினும் வேகமாகத் தேரிலேறி முன்னே செல்ல, அவனைப் பின் தொடர்ந்த கங்கை வழியிலுள்ள அத்தனை தேசங்களையும் பாவனமாக்கினாள்.

கங்கையை அழைத்துக்கொண்டு பகீரதன் பாதாள லோகம் சென்று தன் முன்னோரின் சாம்பற்குவியலை அடைந்தான்.

கபில முனிவரிடம் அபசாரப்பட்டதால், சாம்பலான ஸகர புத்திரர்கள் கங்கையின் புனித நீர் பட்டதும் வினை நீங்கி மேலுலகம் ஏகினர்.

முன்னோரின் கடன் தீர்க்க, பகீரதன் பட்ட கஷ்டங்கள் தான் எத்தனையெத்தனை?
கங்கையின் பெயர்களுள் சில..
1. பாகீரதி
2. ஜாஹ்னவி
3. அளகநந்தா
4. ஸுரேஸ்வரி
5. பகவதி
6. ஊர்விஜயா
7. ஜாஹ்னுகன்யா
8. சித்ராணி
9. விஷ்ணுபாதி
10.வைஷ்ணவி
11. சுப்ரா
12. பயோஷ்ணிகா
13. மஹாபத்ரா
14. மந்தாகினி
15. மேக்னா
16. கங்கா
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment