Monday, July 8, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 290

ஸகரனின் பேரனான அம்சுமான் கபில முனிவரின் ஆசிரமத்தின் அருகில் வேள்விக்குதிரையையும் தன் சிற்றப்பாக்களின் சாம்பலையும் கண்டான். பின்னர் கபில பகவானைப் பலவாறு துதித்தான்.

மென்முறுவல் தவழ முகத்துடன் அவனைக் கருணையுடன் நோக்கினார் கபிலர்.

குழந்தாய்! உங்கள் தாத்தா செய்யும் வேள்விக்கான குதிரை இதுதான். இதை அழைத்துச்சென்று அவர் ஸங்கல்பம் செய்தபடி யாகத்தை முடி.

வினைத்தீயால் எரிந்து சாம்பலாகியிருக்கும் உன் முன்னோருக்கு நற்கதி வேண்டும் எனில், கங்கை நீரைக் கொண்டுவரவேண்டும். வேறு உபாயம் எதுவும்‌ இல்லை. எனவே, அதற்கான முயற்சியைத் துவங்கு
என்றார்.

அவரைப் பலமுறை விழுந்து வணங்கி விடைபெற்றுக்கொண்டான் அம்சுமான். பின்னர்‌ குதிரையை அழைத்துக்கொண்டு அயோத்தியை அடைந்தான். தடைபட்டிருந்த யாகத்தைக் குறைவற முடித்தான்.

ஸகரன் அரசை அம்சுமானிடம் ஒப்படைத்துவிட்டு கானகம் ஏகினான். பற்றுக்களை விட்டான். குருவான ஔர்வ முனிவர் உபதேசம் செய்த யோகமார்கத்தைப் பின்பற்றி முக்தியை அடைந்தான்.

அம்சுமான் தன் சிற்றப்பாக்களின் நற்கதிக்கு எப்படியாவது வழி செய்யவேண்டும் என்று மிகவும்‌ கவலை கொண்டான். தன் மகன் திலீபனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டுக் கானகம் சென்று பல்லாயிரம் ஆண்டுகள் கடுந்தவம் செய்தான். ஆனாலும், பயனை அடையும்முன் காலன் வாயில் வீழ்ந்து மரணமெய்தினான்.

திலீபன் நல்லாட்சி புரிந்து வந்த போதும், முன்னோரின் நற்கதி விஷ்யமாக மிகவும்‌‌ கவலைப்பட்டான். அரசுரிமையைத் தன் மகன் பகீரதனிடம் ஒப்படைத்துவிட்டுக் கடுந்தவம் இயற்றினான். ஆனால், அவனும் கங்கை நீரை எப்படிக் கொணர்வது என்ற வழி தெரியாமலேயே காலன் வயப்பட்டான்.

பாட்டன், மற்றும்‌ தந்தையின் வழியில் பகீரதனும் கங்கையைப்‌பெற பெருந்தவம்‌ இயற்றினான். இளவயது முதலே தவம் செய்த அவனுக்கு கங்காதேவி நேரில் காட்சியளித்தாள்.

அவளைப் பலமுறை வணங்கிய பகீரதன்,
எங்கள் முன்னோர்க்கு நற்கதியளிக்கத் தாங்கள் பூவுலகம் வரவேண்டும். என்று பிரார்த்தனை செய்தான்.

ஆனால், கங்கை பூவுலகிற்கு வர மறுத்தாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment