தாயைப் பார்த்து சாதகனின் தன்னிறைவை விளக்கிய கபிலர் மேற்கொண்டு ஸாதுக்களின் மகிமைகளைக் கூறுகிறார்.
தாயே! உலகியல் இன்பங்களைப் பெரிதென நினைத்து ஒழுகுபவர்களுடனான இணக்கம், என்றும் எதனாலும் அறுக்க இயலாத பாசக்கயிறு.
அதே மன இணக்கம், உத்தம ஸாதுக்களிடம் ஏற்படுமாயின் அது இடையூறின்றித் திறந்து வைக்கப்பட்ட முக்தி வாயில் என்றும் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
அத்தகைய சாதுக்களைப் பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள்.
சாதுக்கள் பூமியினும் பொறுமை மிக்கவர்.
பிறர் துன்பங்கண்டு இரங்கி, பயன் நோக்காது உதவி புரியும் கருணை மிக்கவர்.
ஆகவே, அனைத்து ஜீவராசிகளுக்கும் நண்பராவார்.
பகைவரற்றவர்.
ஐம்புலன்களையும், மனத்தையும் வெற்றி கொண்டவர்.
ஒழுக்கமே அவர்க்குப் பொன்னகை.
பிறவற்றில் மனத்தை ஓடவிடாது பகவானான என்னிடம் காதல் கொண்டவர்.
எனக்காக அனைத்து கர்மங்களையும் துறந்தவர்.
சுற்றமனைத்தையும் நீக்கி, என்னையே சுற்றமாய்க் கொண்டவர்.
எனது திருவிளையாடல்களைக் கேட்டு மகிழ்பவர்.
அவற்றையே திரும்ப திரும்பக் கேட்பதும் சொல்வதுமாகப் பொழுது போக்குவர்.
என்னிடமே நிறைந்த மனம் கொண்ட இத்தகைய சாதுக்களை வினைப்பயனால் விளையும் துன்பங்கள் கூட வருந்தச் செய்யாது.
கற்பின் சிகரமே! இத்தகைய ஸாதுக்களையே ஒருவன் தேடிச் சென்று அடையவேண்டும்.
அவர்களுடைய ஒரு தொடர்பினால், செவிக்கும் இதயத்திற்கும் அமுதாய் விளங்கும் எனது திருவிளையாடல்கள் பற்றிய கதைகளை எப்போதும் கேட்கும் வாய்ப்பு கிட்டும்.
அக்கதைகளைக் கேட்பதால், முக்தியில் ஈடுபாடும், என்னிடம் அன்பும் தோன்றும்.
படைத்தல், காத்தல், அழித்தலாகிய எனது திருவிளையாடல்களைக் கேட்டு, அதையே சிந்தனை செய்வதால் என்னிடம் அசைவற்ற பக்தி உண்டாகும்.
அதனால் ஸ்வர்கம் முதலியவற்றில் இருக்கும் பற்று நீங்கி பக்தி யோகத்தால் மனத்தைத் தனதாக்கிக் கொள்ள இயலும்.அப்படிப்பட்ட சாதகன் முடிவில் என்னையே அடைகிறான்.
என்றார் கபிலர்.
தொடர்ந்து பக்தியோகம் பற்றி வினவினாள் தேவஹுதி.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment