ஸ்வாயம்புவ மனு தன் மகள், மனைவி இருவரின் விருப்பத்தையும் அறிந்துகொண்டு, நற்குணக் கொள்கலனான கர்தம மஹரிஷிக்கு தன் மகளான தேவஹூதியை மகிழ்ச்சியோடு கன்னிகாதானம் செய்து கொடுத்தார்.
அவளுக்கு விவாஹ காலத்தில் கொடுக்கவேண்டிய அத்தனை சீர் வரிசைகளையும், ஆபரணங்களையும், குடும்பத்திற்கு வேண்டிய அனைத்து உபகரணங்களையும் மகிழ்ச்சியோடு கொடுத்தார்.
பெண்ணைத் தகுந்த வரனுக்குத் திருமணம் செய்து கொடுத்து கவலை நீங்கப் பெறினும், அவளைப் பிரிவதனால் மிகுந்த மனவருத்தம் கொண்டார். பாசத்துடன் நா தழுதழுக்க 'அம்மா, மகளே', என்று கேவிக் கலங்கி அழுதார்.
பின்னர் பலவாறு மணமக்களை ஆசீர்வதித்துவிட்டு மனைவியுடனும், பரிவாரங்களுடனும் கிளம்பினார்.
கர்தமரிடம் விடைபெற்றுக்கொண்டு ஸரஸ்வதி நதியின் இருமருங்கிலும் அமைந்துள்ள முனிவர்களின் ஆசிரமங்களின் அழகை ரசித்துக்கொண்டே தன் தலைநகரான பர்ஹிஷ்மதி நகருக்குள் நுழைந்தார்.
ப்ரும்மாவர்த்தத்திலிருந்து தமது அரசன் திரும்பி வருவது கண்டு குடிமக்கள் மகிழ்ந்து மேளதாளங்களுடன் வரவேற்றனர்.
அனைத்துச் செல்வங்களும் நிரம்பியது மனு மன்னனின் தலைநகரமான பர்ஹிஷ்மதி நகரம். ரஸாதலத்திலிருந்து பூமியைத் தூக்கி வந்த யக்ஞ வராஹமூர்த்தி தன் உடலைச் சிலிர்த்துக் கொண்ட போது அவரது ரோமங்கள் இங்கு விழுந்தன. அவை பச்சை நிறம் கொண்ட தர்பைகளாகவும் நாணல்களாகவும் ஆகின. அவற்றைக் கொண்டு முனிவர்கள் வேள்விகளுக்கு இடையூறு செய்யும் அரக்கர்களை விரட்டியடித்தனர்.
மனு இந்த தர்பைகளைப் பரப்பி யக்ஞ புருஷரான நாராயணனை பூஜித்தார்.
அந்த தர்பைகளுக்கு பர்ஹிஸ் என்று பெயர். அந்த நாணல்கள் நிரம்பிய நகரம் பர்ஹிஷ்மதி.
அந்த தர்பைகளுக்கு பர்ஹிஸ் என்று பெயர். அந்த நாணல்கள் நிரம்பிய நகரம் பர்ஹிஷ்மதி.
தன் அரண்மனைக்குள் சென்று தர்மத்துடன் கூடிய வாழ்க்கையை நடத்தினார்.
கந்தர்வர்கள் அதிகாலையில் அவர் புகழைப் பாடியபோதும், அதில் மனத்தைச் செலுத்தாமல், ஸ்ரீ ஹரியின் புகழையே மனதார நினைத்தார்.
பகவான் விஷ்ணுவின் புகழையே நினைப்பது, அவரது திருவிளையாடல்களையே கேட்பது, அதையே நினைத்து நினைத்து உருகுவது அதைப் பற்றியே எழுதுவது, அதை உலகெங்கும் பரப்புவது என்று இருந்ததனால், அந்த மன்வந்தரம் முழுவதும் அவரது நேரம் வீணாகவே இல்லை.
இவ்வாறு மனு தனது ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்னம் (கனவு), ஸுஷுப்தி (தூக்கம்) மூன்று நிலைகளிலும், ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களின் நிலைகளிலும் பகவானிடமே பக்தி செய்தார்.
இவ்வாறே ஸ்வாயம்புவ மனு தன் 71 சதுர்யுகங்களையும் கழித்தார்.
விதுரா, பகவான் ஸ்ரீ ஹரியைச் சரணடைவோரை உடல் பற்றிய, விதிப் பயனால் விளையக்கூடிய, மற்றும் மனிதர்களாலும், ஜீவராசிகளாலும் உண்டாகக்கூடிய துன்பங்கள் என்ன செய்துவிடும்?
அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மையைச் சிந்திக்கும் ஸ்வாயம்புவமனு முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அனைத்து வர்ணசிரமங்களின் நியதியை வகுத்தார். அதுவே இன்றும் மனுநீதி என்ற பெயரில் வழங்கப்படுகிறது.
மிகவும் அற்புதமான மனுவின் சரித்ரம் புண்ணியகரமானது. தொடர்ந்து அவரது மகளான தேவஹூதியின் கதையைப் பார்ப்போம்
என்றார் மைத்ரேயர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment