மைத்ரேயர் தேவஹூதியின் சரித்திரத்தைச் சொல்லத் துவங்கினார்.
தனது பெற்றோர் புறப்பட்டுச் சென்றதும், கற்புக்கரசியான தேவஹூதி, தன் கணவரின் உள்ளத்தைப் புரிந்துகொண்டு, பார்வதி தேவி பரமேஸ்வரனுக்கு சேவை செய்வதுபோல் பணிவிடை செய்து வந்தாள்.
மிகுந்த நம்பிக்கை, மனத்தூய்மை, அன்பு கலந்த மரியாதை, தன்னடக்கம், பணிவிடை செய்வதில் ஆவல், நட்புணர்வு, இன்சொற்கள், ஆகியவையுடன் மனதார பணிவிடைகள் செய்தாள். உலகியல் சுகம், கபடு, பகைமை, பேராசை, கீழான ஒழுக்கம், செருக்கு, சோம்பல், ஆகியவற்றைத் துறந்தாள். ஒளியே திருமேனி கொண்டாற்போல் விளங்கும் கணவரைப் பணிவிடைகளால் ஆராதித்தாள். தெய்வத்திற்கும் மேலாகக் கணவரை நினைத்தாள்.
திருமணம் நடைபெற்றதும், கர்தமர் இயல்பாக எழும் பகவத் சிந்தனையினால் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார். ஸமாதி நிலையில் எவ்வளவு காலம் இருந்தாரோ தெரியாது. தியானத்தில் இருக்கும் கணவருக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் தேவஹூதி பணிவிடைகள் செய்தாள்.
அனவரதமும், அவரைச் சுற்றி சுத்தம் செய்வதும், விசிறுவதும், அவரது மேனியை பூச்சிகள் தொந்தரவு செய்யாமலும், பார்த்துக்கொண்டாள். உலகப் ப்ரக்ஞையே இல்லாமல் சிலை போல் அமர்ந்து வெகுநாள்கள் ஸமாதியிலேயே இருந்தார் கர்தம ரிஷி.
பிறகு ஒருநாள் தியானம் கலைந்தபோது, தன் மனைவியான தேவஹுதியைக் கண்டார். தனக்குச் செய்யும் பணிவிடைகளாலேயே தவம் கைகூடப்பெற்று, மிகுந்த தேஜஸ்வினியாக இருந்த தேவஹூதி, நிறைய விரதங்கள் இருந்து உடல் மெலிந்திருந்தாள்.
திருமண காலத்தில் அவளின் அழகையும், இப்போது தனக்குப் பணிவிடை செய்ததனால் மிகவும் மெலிந்திருந்த தேவஹூதியையும் ஒப்பு நோக்கி அவள் விஷயத்தில் மிகவும் மகிழ்ந்து மனம் கசிந்தார்.
மனைவியைப் பார்த்துச் சொன்னார்.
மனு மஹாராஜனின் மகளான நீ, என்னிடம் காட்டும் மரியாதை மிக உயர்ந்தது. உயிர் கொண்ட அனைத்து ஜீவன்களுக்கும் தத்தம் உடலே முக்கியமாய் இருக்க, நீயோ எனக்குப் பணிவிடை செய்யும் ஆர்வத்தினால் உன் உடலை அலட்சியம் செய்துவிட்டாய்.
எனது தவம், தியானம், உபாசனை, பக்தி இவற்றால் எனக்குக் கிடைத்த இறைவனின் அருள் ப்ரசாதங்களான செல்வங்களை உனக்குக் காட்டுகிறேன். இவற்றை நான் கேட்கவில்லை. இறைவனே விரும்பி எனக்களித்தவை இவை. இவற்றில் உனக்கும் பங்கு உண்டு.
இந்த திவ்ய காட்சிகளைவிட உலகில் வேறெதுவும் பெருமை வாய்ந்து இல்லை. பகவானின் புருவ நெறிப்பினால் அழியக்கூடியவை உலகியல் செல்வங்கள். நீ உன் பிறவிப் பயனை அடைந்தாய். உன் கற்பின் பெருமையால் இறை ப்ராசாதம் உனக்கு கிட்டியது.
என்றார்.
என்றார்.
கணவரின் அன்பான பேச்சைக்கேட்டு வெட்கத்தால் சிவந்த தேவஹூதி, அவர் யோகசித்திகளிலும் , ஸகல கலைகளிலும் வல்லவர் என்று உணர்ந்துகொண்டாள். அன்பால் தழுதழுத்த குரலில் பேசலானாள்.
தங்களது யோக சித்திகளாலும், தவத்தாலும் பெறப்பட்ட இச்செல்வங்கள் ஒன்றும் எனக்கு வியப்பளிக்கவில்லை. கற்புக்கரசியான மனைவிக்கு கணவன் மூலம் பெறப்படும் குழந்தையே பெறும்பேறு.
நமது இல்லறம் செழிக்க நான் பின்பற்றவேண்டியவற்றைக் கூறுங்கள். நான் இப்போது பலமற்றவளாக இருக்கிறேன். தங்களுடன் இன்பம் துய்க்க ஏற்றவளாக நான் மாறுகிறேன். என்னைக் காமதேவன் வாட்டுகிறான். நாம் இன்பமாக வாழ ஒரு மாளிகையையும் தயார் செய்து கொடுக்கவேண்டும்.
என்றாள்.
தன் அன்பு மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணிய கர்தமர், விருப்பம்போல் செல்லக்கூடிய ஒரு விமானத்தைத் தன் யோக சக்தியால் உண்டு பண்ணினார்.
அந்த விமானமே அரண்மனைபோல் இருந்தது. தங்கமயமானது. அழகானது. ரத்தினங்கள் இழைத்த தூண்கள் கொண்டது.ஏராளமான செல்வங்களை உடையது. பலவிதமான வண்ணங்களாலும், கொடிகளாலும், திரைச்சீலைகளாலும் அலங்கரிக்கப்பட்டது. அதில் பல அடுக்குகள் கொண்ட அறைகள் இருந்தன. எல்லாவற்றிலும் தனித்தனியே கட்டில்கள், விசிறிகள், இருக்கைகள் அனைத்தும் அழகுற விளங்கின.
சுவர்கள் நெடுக அழகிய ஓவியங்கள் அலங்கரித்தன. பவளப் படிகள், கதவுகள் வைரத்தால் ஆனவை. மேற்கூரை இந்திரநீலக் கற்களால் ஆனது. அழகான தங்க கோபுர கலசங்கள். விமானங்களில் ஆங்காங்கே மாடப்புறாக்கள், அன்னப்பறவைகள் செதுக்கப்பட்டிருந்தன. அவற்றை உண்மையென நினைத்து பல பறவைகள் வந்து உறவாடின. அங்கு வசதிக்கேற்றவாறு, விளையாட்டு மைதானங்கள், ஓய்வறைகள், உள் முற்றங்கள், வெளி முற்றங்கள் எல்லாம் இருந்தன. இப்படியாக கர்தமர் நிர்மாணித்த விமானம் அவருக்கே வியப்பூட்டியது.
ஆனால், இவற்றையெல்லாம் பார்த்து தேவஹூதி மகிழ்ச்சியடையவில்லை.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே
.
.
No comments:
Post a Comment