Thursday, February 28, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 219 ப்ரஹலாதனின் உபதேசம்

பாடசாலையில் கற்றுக்கொடுக்கப்படும் பாடங்களைக் கற்றபோதிலும், அவற்றில் மனம் ஒப்பவில்லை ப்ரஹலாதனுக்கு.

ஒருநாள் குருமார்கள் இருவரும் பூஜை, ஹோமங்கள் முதலியவற்றை  இல்லறத்தார்க்குச் செய்து வைப்பதற்காக வெளியில் சென்றனர்.

ஆசிரியர் வெளியில் போயிருக்கிறார். சில மணி நேரங்களுக்கு வரமாட்டார் என்றறிந்தால் வகுப்பறை என்னாகும்?

எல்லாக்‌ குழந்தைகளும் விளையாடத் துவங்கின. ப்ரஹலாதனின் ஒத்த வயதுள்ள சிறுவர்கள் அவனை விளையாட அழைத்தனர்.

மிகவும் புத்திசாலியான ப்ரஹலாதன் அவர்கள் தன்மீது கொண்ட கள்ளமற்ற‌ அன்பை முழுதுமாய் உணர்ந்தவன். எனவே, அவர்களின் நன்மையைக் கருதி இனிய சொற்களால் உபதேசம்‌ செய்தான்.

சிறுவர்கள் மனம் கெடாமல் தூய்மையாய் இருப்பவர்கள். அவர்கள் ப்ரஹலாதன் மேலுள்ள ஈர்ப்பினால், அவனைச் சுற்றி அமர்ந்து அவன் சொல்வதைக் கேட்கத் துவங்கினர்.


நண்பர்களே! இவ்வுலகில் மானுடப் பிறவி மிகவும்‌அரிதானது. இதன் மூலம் அழியாத பரம்பொருளை அடைந்து விட முடியும்

இதெல்லாம் வயதான பிறகுதானே ப்ரஹலாதா?

அப்படி இல்லை. மிகவும் குறுகிய இப்பிறவியில் ஆயுள்காலம் நிச்சயமில்லை.

இளவயதில் மரணிப்போரும் உண்டு. மிக நீண்ட காலம் வாழ்ந்து, எமனின் வரவை எதிர்நோக்குவாரும் உண்டு.

காலத்தை வீணாக்காமல் இறைவனை அடையும் சாதனைகளை இளவயதிலேயே  பழகிவிடவேண்டும்.
பகவானின் திருவடிகளே ஒருவர்க்கு உற்ற துணை. அவரே அனைத்து ஜீவராசிகளின் உள்ளும் உறைபவர். தலைவர். உற்ற நண்பர்.

ப்ரஹலாதா! நீ அரசரின் மகன். உழைக்காமல் இருந்து சாதனை செய்தாலும் வாழ்க்கை வசதிகள் கிட்டும்.‌ எங்களுக்கு அப்படி இல்லையே.

புலன்களால் நுகரப்படும் இன்பம் முன்வினைக்கேற்ப நிச்சயம் கிடைக்கும். கர்மாவின் படி அதற்கான முயற்சிகளை ஒருவன் எப்படியும் செய்துவிடுவான். அதற்காகப் பெரிதும் கவலைப்படத் தேவையில்லை.
துன்பம் வேண்டாம் என்றெண்ணுபவர்க்கும் துன்பம் வருவதுபோல், இன்பம் வேண்டாம் என்றாலும் கர்மாவின்படி நிகழும்.

ஒரு பயணத்தில்,  வண்டியில் ஏறி அமர்ந்தால் போதும். வேடிக்கை பார்த்து, வீண் விவகாரங்களில் ஈடுபடுவோராயினும்,  அயர்ந்து உறங்கிக்கொண்டே செல்வோராயினும் இலக்கை அடைந்து விடுவது போல், உடலின் யாத்திரை கர்மப்படி நடந்துவிடும். ஆனால், மனத்தை இறையின் பால் வைத்து விட வேண்டும்.

உடல் எடுத்தவரே சாதனை செய்து இறையை அடைய இயலும். கிழட்டுத்தனம், நோய் ஆகியவற்றில் அகப்படுவதற்கு முன்பே ஒருவன் ஆன்ம நலனுக்கான முயற்சியைச் செய்தாகவேண்டும். இல்லையெனில் பிறவிச் சுழலில் சிக்க நேரிடும்.

ஒரு மனிதனின் முழு வயது நூறு ஆண்டுகள் என்று கொண்டால், புலன்களை வயப்படுத்தாதவனுக்கு அதில் பாதியான 50 வருடங்கள் உறக்கத்தில் கழியும்.

குழந்தைப் பருவத்திலும், வாலிபப் பருவத்திலும், நன்மை தீமையை உணராமல் 20 ஆண்டுகள் ஓடும்.

கிழட்டுத்தனம் வந்துவிட்டால் கடைசி 20 ஆண்டுகளில் ஒன்றும்‌செய்ய இயலாது.

மீதி பத்து ஆண்டுகள் நிறைவேறாத ஆசைகளைத் தொடர்ந்து ஓடுவதிலேயே கழித்து விடுகிறான் மனிதன்.

யான், எனது என்ற பற்றினால் கட்டப்பட்ட புத்தி தன்னை விடுவித்துக்கொள்வது மிகவும்‌ கடினம்.

அறிஞனாக இருப்பினும், இறைவனை நினைக்காமல், உலகியல் பற்றுக்களில் உழல்வானாகில், பிறவிச் சுழலினின்று விடுபட இயலாது.

நண்பர்களே! உலக சுகங்களில் பற்றுள்ள அசுரர்களின் நட்பை உதறுங்கள். ஸ்ரீமன் நாராயணனையே கதியெனப் பற்றுங்கள். அவர் சான்றோர்களின் அன்பர். முடிவான புகலிடம்‌ ஆவார்.

அவரை எப்படி அடைவது ப்ரஹலாதா?

பகவானை மகிழ்விக்கப் பெரிய முயற்சிகளோ, உழைப்போ எதுவும் தேவையில்லை.

ஏனெனில் அவர் நம் ஆன்மாவில் உறைபவர். வேறெங்கோ இருப்பவர் இல்லை.

கஷ்டமான சாதனைகளைச் செய்தால்தான் பலன் என்பதில்லை.

நாள் முழுதும் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி உழைப்பவர்களுக்கு, சொற்பமான கூலி கிடைக்கும். ஆனால், ஒரு அறையில்‌ இருந்த இடத்தில் இருந்துகொண்டு சிறிது நேரம் ஒருவருடன் பேசுவதாலேயே பெரும்‌பொருளைச் சம்பாதிப்பவர் உண்டு.

அதுபோல், அசுர குணத்தை விடுத்து, அனைவரிடமும் அன்போடும், கருணையோடும் பழகுவதாலும், ஸ்ரீமன் நாராயணனின் திருப்பெயரையும், புகழையும் வாயாரப் பாடுவதாலும் இறையின் கவனத்தை ஈர்க்க இயலும். அத்தகையவர்க்கு முக்தியின்பம் கூடப் பெரிதல்ல.

அதுசரி, இறையைப் பாடினால் வயிற்றுக்கு உணவு கிடைக்குமா?

அவர் மனம் மகிழ்ந்தால் கிடைக்காதது ஏதாவது உண்டா? அனைத்து சாஸ்திரங்களிலும் அறம், பொருள், இன்பம் பற்றியே கூறப்பட்டிருக்கின்றன. ஆன்ம வித்யை, கர்ம காண்டம், தண்ட நீதி, அனைத்தும் வேதங்களில் உள. ஆனால், அவை இறையை அடைய வழி காட்டாவிடில் ஏது பயன்?

இப்போது நான் உபதேசம்‌ செய்த ஞானம்‌ கிடைத்தற்கரியது. இவையனைத்தும் இறைவனின் திருவடி தூளியில் மகிழ்ந்து நீராடும்‌ சான்றோரால் கற்பிக்கப்படுபவை. எனக்கு ஸ்ரீ நாரத மஹரிஷி இவற்றை உபதேசம் செய்தார் என்றான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment